Thursday, December 30, 2010

வருக, எந்தன் முக நூலில்!


வருக எந்தன் முகநூலில் ;
வாருங்கள் நண்பர்களே!
தருக;உங்கள் கருத்துக்களைத்
தமிழில் தாருங்களே!



புத்தம்புதிய பதிவுகளை;ஒரு
புதுமையின் வடிவ மென;
நித்தமும் இங்குஎழுதுகிறேன்;
நீதியைக் கூறுகின் றேன்!

சாதி மதங்களைச் சாடுகிறேன்;
சத்தியம் பேசுகின் றேன்;
வேத நெறிகளை நாடுவதில்;வீண்
வேட்கையை வீழ்த்து கிறேன்!

மானுடம் யாதெனப் பாடுகிறேன்;
மக்களுக் கோது கின்றேன்;
நானொரு மானுடன் என்பதற்கே
நல்லதைத் தேடு கின்றேன்!



பண்புடன் நல்ல பக்குவம்கூட்டிப்
பதிவுகள் செய் வதினால்;
நண்பர்கள் நல்லவர் நாடுகின்றார்;
நற்றமிழ் போற்றுகின்றார்!

தேசநலத்துடன் நம்மொழியில்
தேர்ச்சி மிகுந்தவரும்;மெய்
நேசம் மிகுந்து பண்பாட்டின்
நீதியை உணர்ந் தவரும்

வேதநெறிகளை ஆய்பவரும்;பல
வித்தை தெரிந் தவரும்
மேதமையோ டென் எழுத்துக்களை
மெச்சி மகிழு கின்றார்!

’நல்லவர் யாவரும்வாரும்என
நட்பை விரிக் கின்றேன்;
எல்லை யில்லாதொரு நட்புவட்டம்
எண்ணி அழைக் கின்றேன்!

வீணுரை;வெற்றுரை ஏதுமில்லா
விஷயங் கள்பேசு தற்குப்
பேணிடும் நல்ல நட்பு வட்டம்
பெருக்கிட வேண்டு மென்றால்-

வாருங்கள் நண்பரே வாரும் என
வந்தனம் கூறு கின்றேன்;
சேருங்கள்;எந்தன் முகநூலில்;நல்ல
செந்தமிழ் சொந்த மென்றே!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
30.12.2010

Friday, December 24, 2010

ஈசன் பிறந்தான்!


ஈசன் பிறந்தான்...
எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன்....
  •  

ஈசன் உலகில் பிறந்தான் உண்மை;
இஸ்ரேல் மண்ணை மகிமைப் படுத்தி, 
மாசில் மரியாள்; வயிற்றில் மகவாய்
மாட்டுத் தொழுவம் அவனது பிறப்பு!


கர்த்தரின் உருவாய் அவதரித்திங்கு
கருணை பொழியும் கைகளை உயர்த்தி
அர்த்தம் மிகுந்த அருள் வழி காட்டி
அனைவரும் வாழ சிலுவையை ஏற்றான்!




பிதாவே,இவர்கள் செய்த பாவத்தை எல்லாம்
மன்னித்தருளுங்கள்!
கழுமரம் அவனைத் தாங்கி நின்றதால்
கர்த்தரின் ரத்தம் தோய்ந்து கொண்டது;
தொழுமரம் என்றே ஆகி நெஞ்சில்
தொட்டு வணங்கும்  பேறு பெற்றது!

உண்மை, அன்பு,சமாதானம்
உயர்ந்த வாழ்வை மனிதர் பெற்றிட
மண்ணில் செய்த பாவத்தையெல்லாம்;
மன்னித் தருளும் கருணயைப் பொழியும்

ஈசன் ஏசுவின் பிறப்பை எண்ணி
இந்நாள் அனைவரும் வணங்கிடுவோமே;
நேசன் அவனது நாமம் ஜெபித்து
நெகிழ்ந்தே அன்பைப் பகிர்ந்திடுவோமே!

இவண்-
கிருஷ்ணன் பாலா







---------------------------------------------------------------------------------------------------
காண்க: உலகத் தமிழர் மையம் -வலைதளம்
(உலகத் தமிழருக்கு உணர்வூட்டும் உண்மை மையம்).
http://ulagathamizharmaiyam.blogspot.com/

Saturday, December 18, 2010

எங்கள் ராஜாஜி!

அண்ணல் ராஜாஜிக்கு  நினைவாஞ்சலி
எங்கள் ராஜாஜி!
(10 December,1878 - 25 December'1972)
-----------------------------
வரைமுறை தவறிய                                       
வாழ்க்கையைத் தூண்டும்
வகைசெயும் தீயவ ரான

வஞ்சக மனிதர்கள்
வழிகளை எதிர்த்து
வையகம் புகழும் வண்ணம்

அரசியல் ஒளியை
அணைய விடாமல்
அரண்போல் காத்து நின்று

அண்ணலின் நிழலாய்
அணைந்தார் ஒருவர்;
அவர்தான் எங்கள் ராஜாஜி!

திரை விழுந்தாலும்
தெளி விழக்காமல்
திராவிடப் பொய்களை எதிர்த்து

திடமுடன் நியதி
தினம் வலியுறுத்தி
தேசத்தின் நன்மை கருதி

கறைபடும் மனங்கள்
கலங்கிடச் செய்யும்
கருத்துக்கள் நாளும் எழுதி,

கண்ணியம் என்னும்
கரைதனில் நின்ற
கலங்கரை எங்கள் ராஜாஜி!

கீதையின் சாரமும்
ராமனின் காதையும்
கேட்டவர் வியக்கப் படைத்து

கீர்த்திகொள் தமிழில்
கேடறு கருத்தினை
கிளர்ந்தெழச் செய்து நிறுத்தி

நீதிசொல் இலக்கியம்
நின்றிடும் வாழ்வினில்
நேர்ந்திடும் மேன்மையைக் காட்டி

நஞ்சுறை எழுத்தினர்
நடுங்கிட வைத்த
நல்லவர்;மாமுனி ராஜாஜி!

பாதகம் கூட்டுமோர்
பாதையை வகுத்திடப்
பார்த்திடும் நாடுகள் யாவையும்

பரிவுடன் அணுகிடும்
பண்புடைத் தூதராய்ப்
பார்த்தது ஐக்கிய நாடுகள்;

ஆதலால் மோதலும்
அணுக்கதிர்ச் சேதமும்
ஆவதைத் தடுத்ததோர் தமிழர்;

அவர்,இவர் என்பதை
அறிந்தவர் மிகச் சிலர்
அறிவிலிக் கூட்டமே அதிகம்!

ஆதவன் போலொரு
அறிஞனாய் வந்தனன்;
ஆகவே அவனொரு அந்தணன்;

ஆகையால் அவன் புகழ்
ஆவதைத் தடுத்தவர்
அறிவிலிக்கூட்டமே அன்றி

நீதியைச் செய்தவர்;
நேர்மையைப் புரிந்தவர்
நிச்சயம் இவர்கள் அல்லர்!

’அறவழி நின்றவர்
அந்தணன்’ என்றனன்;
அறநெறி வள்ளுவன் இல்லையா?

அண்ணல்ரா ஜாஜிதான்
அறவழி நின்றவர்;
ஆகவே அந்தணர்,நண்பரே!

நெறிமுறை அரசியல்
நின்றவர் அவர் பெயர்
நெஞ்சில் வைத்திடல் வேண்டும்;

நேர்வழி;அவர்வழி
நிஜம்;அது நம்வழி
நித்தமும்; அவர்புகழ் வாழி!

இவண்-
கிருஷ்ணன் பாலா
17.12.2010

Thursday, December 16, 2010

எனது கருவூலத்திலிருந்து (பகுதி-I)




புள்ளி விஷயம்!
உண்மையில்-
சிறு புள்ளி;

ஊருக்குப் பெரும்புள்ளி;

உரசிப் பார்த்தால்-
கரும்புள்ளி!
         
அளவுகோல்!
ஒரு புள்ளி
கோலமும் ஆகலாம்;
அலங்கோலமும் ஆகலாம்!
அது
போடுகின்ற புள்ளியைப்
பொறுத்த விஷயம்
       

உயில்!
என் எழுத்தைப்
பொன் எழுத்தாய்ப்
பொறித்து வைப்பேன்:

போற்றுவதும் தூற்றுவதும்
உங்கள் தலை எழுத்து!

உங்கள் கவனத்துக்கு!
‘எழுங்கள் மேலே’

‘எழுங்கள்’என்பது
உங்கள் இடத்தைக்
காலி செய்வதற்கன்று;

உங்கள்
இதயத்தை
நிரப்பிக் கொள்வதற்கு!       

ஜனனம்
எரிப்பதற்காகச்
சுடரை
ஏந்திக் கொண்டிருந்தேன்;

பிறகுதான் தெரிந்தது:

இருளின்
மரணத்தில்தான்
ஒளியின் ஜனனம்
என்பது!
         

கடவுளுக்கு நன்றி!
கடவுள்
எவ்வளவு
கருணை மிகுந்தவன்?

’கையில்
’காசு இல்லையே’
என்று கலங்கி அலைந்தேன்:

இதோ-

என்முன்
கையே இல்லாத
ஒருவன்!

ஓ…!
கடவுள்
எவ்வளவு
கருணை மிகுந்தவன்?
         

ஒரு பூமாலை
புலம்புகிறது!

”மந்தி
மந்திரியானாலும்;

மந்திரி
மந்தியானாலும்;

நஷ்டம் என்னவோ
எனக்கே எனக்கு”      

மழையோ மழை!
“மந்திரீ,
மாதம் மும்மாரி
பொழிகிறதா?

என்று கேட்ட
முடியாட்சி போய்-

மந்திரிகளே
குடி’யாட்சி செய்யும்

எங்கள் காலத்தில்
மாதம் மும் மாரி என்ன/

நித்தமும்
நல்ல மழைதான்
மந்திரிகளின் காட்டில்
         

உள்ளே தள்ளு!
சம்பள உயர்வில்
ஐம்பது கேட்டு-

கேஷியர்,குமாஸ்தா,
டைப்பிஸ்ட் தீபா,
டெலிபோன் ரேகா
அட்டெண்டர்கள்
ஆறு பேர்கள்;
அறைக்கு வெளியே!

ஏ.ஸி.க்குள்ளே
இருக்கும் எம்.டி
எரிந்து விழுந்தார்;
‘பசங்களையெல்லாம்
வெளியே தள்ளு’

பி.ஏ. கையைப்
பிசைந்து குழைந்தார்;

“பெண்களை…?.”

முனகினார் எம்.டி;
“முட்டாள்.
என் அறையில் தள்ளு”      
 
நல்ல வழிகாட்டி!
”எச்சரிக்கை!
உங்கள் பாதை
வளந்து வளைந்து செல்கிறது;
நேராய்ச் சென்று பலியாகாதீர்!”

வாழ்வில்-
நேராய்ச்
செல்ல நினைப்போர்க்கெல்லாம்-

பின்னல் வருவதை முன்னால்
உரைக்கும்

’ஹைவேஸ் போர்டு’
நல்ல கெய்டு!’
          

சுய தரிசனம்!
நான்
கவிதைகளைப்
படைத்து விட்டதாய்ப்
புளகாங்கிதம் அடைந்தேன்;

பிறகுதான் தெரிந்தது;
அப்படி
நான்
புளகாங்கிதம் அடைவதற்கு
‘உங்களிடையே
என்னைப் படைத்ததே
அதுதான்’
என்பது!.


அனுபவத்தின் வழியே!
அன்று-

பரபரப்பும் பகட்டும்
நிறைந்த
இந்தத் தெருக்களின் வழியே
திரிந்து கொண்டிருந்தேன்….
உலகம் அறியாதவனாக!



இன்றும்-

இதே தெருக்களின் வழியே….
அமைதியாக
நடந்து கொண்டிருக்கின்றேன்….

உலகம்
என்னைஅறியாமல்!

கவனம்…கவனம்….
எனது தோட்டத்தில்
வேம்புகளை வளர்த்தது
உங்களுக்கு
மருந்தாகத்தான்!

சரி…!
இதோ-
கரும்பைப் பயிரிடுகின்றேன்;

கவனம்
இருக்கட்டும்!

காமனின்
கைக்குப்
போய் விடப் போகிறது!


என்னைத் தெரியுமா?
கனவுகளில்
மூழ்கிப் போய்-

நீங்கள் எல்லாம்

காதல் சாம்ராஜ்யத்தின்
மன்மத ராஜனுக்குக்
கப்பம் செலுத்துகின்ற
சிற்றரசர்கள்தான்;

என்னிடம்
கவிதை எனும்
காண்டீபம்
இருக்கிறது!

அவன்,
எனக்குக் கரும்பு வில்லால்
கட்டளையிட முடியாது!


நெருங்கி வரும்போது...
பெண்ணே!

நான்
உன்னைப் பார்ப்பதாய்க்
கர்வம் கொள்ளாதே!

உன் விழிகளுக்குள்
நீ
பிடித்து வைத்திருக்கும்
என்னைத்தான்
பார்க்கின்றேன்;

சந்தேகம் இருந்தால்
நெருங்கிப் பார்!
எனது விழிகளுக்குள்
இருக்கும்
உனது
விழிகளுக்குள்ளும்
நான்தான்!


இதயத்தில் அடித்த ஆணிகள்!
குடியிருப்பதற்காக
வீடு தந்தால்-

சுவர்களில்
இத்தனை
ஆணிகளையா
அடித்‘து வை’ப்பது?

எத்தனை
ஆழமாகப் பதிந்து விட்டன?

இதயம்
எப்படி வலிக்கிறது தெரியுமா?

அடீ,கள்ளீ,
இது
உனக்கு நியாயமா?

         
அது மட்டும் எப்படி?
அன்பே,
சிலரது கண் பட்டால்
எதுவும்
பட்டுப் போய் விடுமாமே?

ஆனால்-
உன் கண்பட்ட மாத்திரத்தில்
பாலைவனமாய்ப்
பட்டுப் போயிருந்த
எனது
இதயத்தில் பசுமைகள்
துளிர்த்தது எப்படி?
    

மீனே…மீனே!
கண்ணே,
நான்
வெறும் வலைகளைத்தானே
வீசினேன்….?

நீ,
அதில் சிக்கி
ஏன்,.
கவலைகளாய்
அதை
மாற்றிவிட்டாய்?

          
அவளுக்காக... 
கல்யாணமான கவிஞன்
காதலிக்காக
கவிதைகள் படைத்தான்;

படித்த நண்பன்
பரிகசித்தான்:

“அற்புதம் கவிதை;
ஆயினும்-
உன்னரும் மனைவி
படித்தாளாயின்
உதைதான் கிடைக்கும்;
கவனம்;கவனம்…”

கவிஞன்
அதற்குக் கணக்காய்ச் சொன்னான்:

“ஒத்தடம் பெறத்தான்
இதைப் படைத்துள்ளேன்”

கனவுமலர்கள் பூக்க!
உங்கள்
தோட்டத்தில் பூக்கின்ற
கனவு மலர்களுக்காக
நான்
தூவும் விதை
’க’விதை’

-கிருஷ்ணன் பாலா
16.12.2010 

v   இந்தப் படைப்புக்களில் பல 1987களில் எனது “இந்த ராஜபாட்டையில்….” என்ற கவிதை
      நூலில் கோர்க்கப் பட்டவை;சில புதிய சிந்தனைகளில் வடிக்கப் பட்டவை. (ஆ-ர்)