Friday, December 30, 2011

தனிமை!


நீங்கள் 
எல்லோரும்
மந்தை மந்தையாய்ச்
சென்று கொண்டிருக்கும்
இதே பாதையில்தான்
நானும்
வந்து கொண்டிருக்கிறேன்...

தனி ஒருவனாய்..
உரையாட யாருமின்றி: 
மேய்ப்பனாய்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
30.12.2011

வாழையிலைத் தமிழ்!











ஏழையர்க்கு எழுதுங்கால்,ஏழ்மைநிலை யோடிருக்கும்;
இறுமாப்புக் கொள்ளுங்கால் செறுக்கோடுதான் மிளிரும்;
வாழையடி வாழையென வந்துதிக்கும் என் தமிழை
வந்திங்கு உண்போர்க்கு வரும்பொருளைக் காட்டுகின்றேன்!

வாழையிலைத் தமிழ் விரித்து வருவோரை உண்பதற்கு
வருகவென அழைப்பதுதான்;இங்கென்றன் விருந்தோம்பல்;
ஏழைகளும் செல்வர்களும் என்படைப்பின் விருந்தினர்கள்;
இங்கென்றன் எழுத்துக்கள் இலக்கியத்தாய் பசியாற!

கலைமகள் என்அன்னை கருணை செய்தருளியதைக்
கரமெடுத்து எழுதுகின்றேன்;காண்போர்க்கு இது புரியும்;
சிலபோழ்து பண்டிதர்க்குச் சிறுபிழையும் பெரிதாகும்;
செந்தமிழில் எழுதுவது இங்கென்றன் நோக்கமல்ல!

எத்தனை பேர் தமிழறிந்து எண்ணத்தை விரிக்கின்றார்?.
என்பதல்ல என் பார்வை; என் வழியில், நற்றமிழின்
வித்தகத்தை விரித்திங்கு விஷயத்தைச் சொல்வதுதான்:
விவாதம் என வந்தால்;விளையாடிப் பார்ப்பதுதான்!

விஷயத்துடன்-
கிருஷ்ணன்பாலா
23.10.2011

Sunday, December 25, 2011

புனிதனைப் போற்றுமின்! புனிதனைப் போற்றுமின்!






மனித நேயம் யாதெனக் காட்டவும்
மாக்களையெல்லாம் மக்கள் ஆக்கவும்
கனிவும் அன்பும் கருணையும் கொண்டு
கடமையை உணர்த்தி,நமைஉய் விக்கவும்
தனியொரு பிறவி எடுத்தே மண்ணில்
தானோர் மகவாய்ப் பிறந்தான்;உண்மை!
புனிதன்ஏசு அவன்தான் கண்டீர்!
போற்றி வணங்குதல் மானுடர் கடமை!

வணக்கத்துடன்,
கிருஷ்ணன்பாலா
25.12.2011


Saturday, December 24, 2011

ஊடல் இன்பம்!









அருமை நண்பர்களே,
கவிதை இலக்கிய ஆர்வலர்களே,

காதற்சுவை ததும்பும் கவிதைகளைப் படைப்பதில் அளப்பறிய
ஆர்வம் கொண்ட கவிஞர்களே,

முகநூலில் தொடர்ந்து எனது பதிவுகளைப்
படித்து வரும் எனது நண்பர்கள் பலரும் 
அறிந்திருக்கும் உண்மை: ‘நான் காதல்சினிமா,காமெடி வகையிலான கருத்துக்களை எழுதுவதிலோ  அவை பற்றிய விமர்சனங்களில்
பங்கு பெறுவதிலோ ஆர்வம் காட்டாதவன்அவற்றைக் கடுமையாக
விமர்சிப்பவன்’ என்பது.

சில நண்பர்களுக்கு இதில் சற்று விசனம்கூட வந்ததுண்டு,
இன்னும் சிலர்  ‘ஏன் ஸார்,உங்களுக்கு காதல் என்றாலே பிடிக்காதோ
என்று கேட்டுக்கூட எழுதியதுண்டு.

 நானும் கூட –
  “காமெடி,சினிமா,காதல் பித்து,
  கவிதை எனும் பெயரில்
  யாம்இன்புற்று எழுதுவ தில்லை;
  என்னை மன் னிப்பீர்!’’

என்று
இதே முக நூலில் எழுதி இருக்கின்றேன்.

ஆம்.
நான் இங்கு  ‘காதல் கவிதைகள்’ என்னும் பெயரில் ‘குப்பை
கொட்டுவதை’ எதிர்ப்பவன்;விரும்பாதவன்தான்.

ஆனால் உண்மையில்-

எனக்கும் காதல் உண்டுஅது இலக்கியம் தழுவிய எண்ணங்களில்
மூழ்கிஇன்புற்று மகிழ்ந்த காதல்பண்பினாலும் அறிவார்ந்த
அன்பினாலும் அந்தக் காதலுக்கு சமாதி கட்டிய ஷாஜகான் நான்.

அத்தகைய காதலுக்குச் சமாதி  கட்டியதன் மூலம் அதன் 
நினைவுகள் அமரத் தன்மை பெற்றிருப்பதாய்ப் பெருமை
கொண்டுஇதோ-
எனது ஊரின் அமராவதி நதியின் நினைவுகளில் மூழ்கிஉங்களுக்குக்
காதல் இலக்கியக் கவிதை ஒன்றை யாத்திருக்கின்றேன்.

இந்த இணையக் காதல் எங்கே?
அந்த இணையற்ற காதல் எங்கே?

நாயகி ஊடலின் முடிவில் கூடி முயங்கும் காதல் இன்பத்தின் நுகர்ச்சியை வெளிப்படுத்தும் கவிதை இது.

வள்ளுவன் வடித்த காமத்துப்பாலின் ‘ஊடல்உவகை அதிகாரத்தின்
இறுதிக் குறளின் இலக்கண விளக்கம்போன்ற இந்தக் கவிதையில் 
இன்புறுங்கள்.

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா-
24.12.2011




ஊடல் இன்பம்!
---------------------------
அன்றொரு நாள்மார் கழியின்
       அழகான பவுர்ணமி நாள்;
நின்றிருந் தேன்,அமரநதி
       நீள்கரை யின்வய லோரம்;
கன்றிளமை வய தோடும்
       காதலியின் நினை வோடும்
மென்றுவரும் நினை வலைகள்
       மேவி வரக் காணுகின்றேன்:

வானமெனும் வீதியதில்
       வட்டமிடும் வெண் ணிலவு;
மோன நிலை நான டைந்து   
       மூழ்கியதில் எனை மறந்தேன்;
பூனையென நடந்து வந்து;
       பூவிழியாள் தீண்டி விட்டு,
ஏனென்று கேட்ட துபோல்
       இடம் பெயர்ந்து நின்றிருந்தாள்!

’’ஆகா,என்ஆ ருயிரே
      ஆனந் தத்தே னமுதே;
வாகான வளர் கவிதை
      வழங்கு கின்ற அட்சயமே!
ஏகாந்த வேளை யிதில்
      ஏன் விலகி நிற் கின்றாய்?
நோகாமல் நோக வைக்க
      நோக்கா மல்நிற் குதியோ?”

என்றவ ளைஏறெ டுத்தேன்:
      இரக்கமின்றி அவளு ரைத்தாள்:
இன்றுநான்  வரும் போது 
      என் நினப்பு இல்லாமல் 
நன்றென்று வெண் ணிலவில்
      நாட்டம்தான் கொண் டிருந்தீர்?
பின்னெ தற்குநா னிங்கு?
      பேசா மல்போ கின்றேன்!”

அய்யய் யோ,கண் மணியே,
       அநியா யம்உன் கோபம்;
பொய்யன் றுஎன் காதல்;
      புரியா தோஎன் மனது?
மெய்யா கச்சொல் லுகிறேன்
      மேகத்தில் உன் முகந்தான்
கொய்துவைத்த நிலவாக
      கொள்ளை யிடக் கண் டேண்டி’”

உன்னழகை எண்ணித் தான்
      உள்ளம் பறிகொடுத் திருந்தேன்;
என்றென்  றும்எப்  போதும்
      எங்கேயும் உன் நினை வில்
பின்னுகின்ற உவமை களில்
      பேசுவ தில்உரு கும்நீ
என்கவிதைப் பாடுபொருள்;
       இலக் கணமும் நீதானே!

முந்நாளில் நாம் இருவர்
      மோகத்தில் திளைத் திருந்த
அந்நாளை மறந் தனையோ?
      அப்போதும் இந்  நிலவே
ஆகாயச் சாட்சி யன்றோ?
       இப்போது மட்டும் அதை
எதிரியெனக் காண்கு வையோ?
       முந்தாமல் முந்தி அன்று
மூழ்க வைத்த கூடலில்நீ--

முத்து நகையாடி யதும் 
       மோகமொழி வேக மதில் 
தத்தை என மாறி யதும்
       தஞ்சமெனத் தாவி எனைக்
கொத்தி விளையாடி யதும் 
       கொவ்வை யிதழோர மதில்
வித்தைபல கூறி யதும்     
   வெண்ணிலவின் சாட்சியடி!

இவ்வாறு எடுத்து ரைக்க
     இடைதளர்ந்து  எனை நோக்கி;
கவ்வாமல் கவ்வு கின்றாள்;
      காதலன்நான் மெய் யளக்க;
தவ்வாமல்தவ்வு கின்றாள்;
      தையலவள் மையல் உற
செவ்வாயில் முத்துரைத் தேன்;
      சேயிழையோ சொத்தி ழந்தாள்!


--------------------------------------------------------------------------------------------
“ஊடுதல் காமத்திற் கின்பம்; அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்”
 (திருக்குறள்: காமத்துப் பால்:அதிகாரம்:ஊடல் உவகை - குறள்:1330)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, December 18, 2011

இந்திய மைந்தர்களே!

எத்தனை ஏற்றம் எத்தனை மாற்றம்;
இந்திய சுதந்திர வரலாற்றில்?
எத்தனை ஏக்கம்;எத்தனை ஊக்கம்;
எங்கள் பாரதத் திருநாட்டில்?

இத்தரையில் ஒரு நூற்றாண் டெய்திய
இந்தியக் காங்கிரஸ் இருக்கின்றதா?
உத்தமர் காந்தியின் உன்னத நெறிகள்
உண்மையில் இன்னும் இருக்கின்றதா?

இந்திய மக்கள் சிந்திய ரத்தம்
இனும்நம் நினைவில் உரைக்கின்றதா?
’வந்தேமாதரம்’ என்றே போதிலும்
வாழ்க்கையில் அதுநமை இணைக்கின்றதா?

அதன்பின் னால்நமை அடிமைகள் ஆக்கிய
அரசியல் ’விலங்குகள்’ இருக்கின்றதே?
மதம்,இனம் ,மொழிஎனும் வெறிகளி னாலே
மக்களை அழித்திடத் துடிக்கின்றதே?

ஆயிரம் கட்சிகள் முளைத்தவை இங்கு
அணு அணுவாகப் பிரிக்கின்றதே?
தாயவள்நமக்குப் பாரதம் எனினும்
தனித்தனி உணர்வுகள் தளிர்க்கின்றதே?

குளுமைக் காஷ்மீர் ரோஜா மலரின்
கூரியமுள் நமைக் குத்துவதேன்?
பளுமிகு நக்ஸல் பிரச்சினையில்நாம்
பலவிதமாகக் கத்துவ தேன்?

தமிழன் எவர்க்கும் தாழ்ந்தவன் இல்லை;
தரணியில் நிமிர்ந்து நின்றானா?
அமைதியும் வளமும் பிறருக்கு நல்கும்
ஆற்றலில் தன்சுகம் கண்டானா?

தென்னகம் ஒட்டிய இலங்கையின் மேன்மை
தீட்டிய தமிழ் மகன் இப்போது;
தன்அகம் தேடி அலைகின்றான்:
தணிந்திடும் நிலமை எப்போது?

உன்னதம் படைக்கும் திறமையும் அறிவும்
ஓங்கிய பாரத மைந்தர்களே;
இன்றெழும் கேள்விக்கெவ்விதம் பதிலை
ஏற்பது என்பதை உரைப்பீரே!
  
இவண்-
கிருஷ்ணன் பாலா
15.8.1985ல் எழுதியது

கவிதையிது,கேள்!


விழலுக்கு நீர்பாய்ச்சி மாய வேண்டாம்;வீண்
விஷயத்தில்  மனம் செலுத்தி வீழ வேண்டாம்;
மழலையென வாழ்ந்த நிலை அறிந்துஉங்கள்
‘மடமையது யாது’எனத் தெளிதல் நன்று!

சிறுகுழந்தை கேட்பதெல்லாம் வாங்கித் தரும்
செல்வநிலை இல்லாத தந்தையவன்,
உறுதியுடன் வாழ்ந்து என்றும் வளைந்திடாமல்; 
‘ஒழுக்கமுடன் வாழ்வதற்கே' பாதை சொன்னான்!

இன்று 'மிக நன்று' எனக் கவிதை பாடி'
‘இளமை உயிர்ச் சத்தைஎலாம்  விரயமாகிக்
கொன்று வரும் குழந்தை'உனை, ஒன்று கேட்பேன்:
'குவலயத்தில் காதல்தான் பொருளா என்ன?'

'நல்ல பொருள் இன்னதென' அனுபவத்தால்
நல்லறிவு உமக்கெல்லாம் வளர்வதற்கே'
சொல்லிவந்த அறிவுரையைத் தண்டனைபோல்
சூடிக்கொண்டு வளர்ந்ததற்கு யார் பொறுப்பு?

தினந்தோறும் விளையாடி, குழந்தையுடன்
தெருவெல்லாம் கைப்பிடித்துக் கூட்டிச்சென்று,
'சினிமாவா, தெருக்கூத்தா,போவோம்' என்று
சிணுங்காமல் வளர்த்திருந்தால் நல்ல தந்தை!

பணம் இருந்தால் பாரினிலே வசதி எல்லாம்
பம்பரமாய்ச் சுழன்றிருக்கும்; பண்பு மட்டும்
பிணமாகிப் பயண மெல்லாம்; பெருமையின்றிப்
பிணவாழ்வு ‘வாழ்வதுவா வாழ்க்கை’ என்பீர்?

அந்தப் பணம் ‘பாலை வனப்  பயணத்துக்கு;
அருந் தாகம் தணிப்பதற்கு மட்டும்' என்றே 
தந்தென்னைக் குருநாதன் கருணை செய்தான்;
தருமமாய்  அதைக்கூடச் செய்து விட்டேன்!

படிப்பதற்கும் பசியின்றி வளர்வதற்கும்
‘பாலாவின் பிள்ளை ‘எனச் சொல்வதற்கும்
நொடிப்பொழுதும் நோயின்றி இருப்பதற்கும்
நுண்ணறிவும் பெறத்தானே வாழ்க்கை செய்தேன்!

கூலி செய்து என் தந்தை படிக்க வைத்தான்:
குறையின்றி உங்களை நான் படிக்க வைத்தேன்?
கேலி செய்து என் மனத்தைக் குழியில் தள்ளி
'கேவலம்நான்'என்பதுபோல் வாழ்கின் றீர்கள்!

கவிதை என்றால் என்னவென்று தெரிந்து கொள்க:
‘கடவுளையும்  துச்ச'மெனக் காணும் நேர்மை;
புவியிதனில்  புரிந்து கொள்ள யாரும்  இன்றிப்  
போனாலும்  சிந்தனைகள் சிங்கம் ஆகும்!

நேர்மை கொண்டு வாழ்பவனே கவிதை செய்வான்;
நெஞ்சகத்தில் வஞ்சமில்லான் கவிதை செய்தான்:
யார்துரோகம்  செய்தாலும் கவிதை செய்து
யஜமானன் போல்வாழ்ந்து நிமிர்ந்து நிற்பான்!

பாட்டெழுதிப் பிழைக்காமல் அவன்பாட்டுக்குப்
பயணத்தைத் தொடர்வதிலே மகிழ்ந்திருப்பான்;
வாட்டமெலாம் அவனுக்குள் இருந்தபோதும்;
வாடாத கவி நெஞ்சால் வாழ்வான், அவனே!

'போகும் இடம் இது' என்று அவனுக்கில்லை;
‘போகின்ற இடமெல்லாம்'  அவனுக் கெல்லை;
சாகும் வரை ‘சாகாத நேர்மை ஒன்றே,
சார்ந்திருக்கும் சொந்த'மென வாழ்வான், காண்க!

அன்று,அவன் 'உமக்காகப் பட்ட பாடு'
அத்தனையும் என்னவென்று பார்த்திடாமல்;
‘நன்று  எது?'என்றுசொலும் அறிவுஇன்றி;
‘நாடுவது கவிதை' எனில், ஏற்க லாமோ?

அழுகைதனைச்  சொல்லுவது கவிதையன்று;
அடுத்தவரை  அழவைக்கும் கவிதை நன்று;
‘எழுதுவது  எல்லாமே எழுத்தா, என்ன? ;
எதிரிகளும் படித்தால்தான் எழுத்து ஆகும்!

எழுதுகின்றீர்;என் மகள் போல் காணுகின்றேன்!
என் உணர்வை அவ்வாறே கூறுகின்றேன்;
‘பழுதறவே எழுது தற்கு' வாழ்த்து கின்றேன்;
பரமகுரு நாதன்அவன் துணை யிருக்க!

-கிருஷ்ணன் பாலா

கனவென்னும் நிஜம்!




பரம் பொருள் கண்ணன்;பரந்தாமன்;என்
பரம நினைவில் எழும் தந்தை;
கரம் தொழுகின்றேன் அவன் முன்னே;
கண்கள் பணித்தன கேள்விகளில்!

 ‘எந்தை உன்முன் எழுதுதல் என்பது
இன்பத்துள் இன்பம் பேரின்பம்;
சிந்தையுள் சிதறும் கேள்வி எலாம்
சிறகடித்திடுவது,இதில் தானே?

கேட்கின்றேன்,என் பரந்தாமா;நீ
கீதையைக் காட்டிச் சிரிக்காதே!
வாட்டம் நீக்குவ தல்லாது;
வஞ்சனை நாடகம் நடத்தாதே!

எண்ணம் யாவும் உன்னடி வைத்து
எழுத்தில் உனையே அணிகின்றேன்;
 ‘பண்ணும் செயலில் புண்ணியம் சேரப்
பண்ணும்என்றே பணிகின்றேன்!

நன்றாய் என்னை ஆக்கிடத்தானே,
நன்மையும் தீமையும் வகுக்கின்றாய்?
என்றே எண்ணி இயங்கும் என்னுள்
எத்தனை மாற்றம் கொடுக்கின்றாய்?

உன்முன் எழுத்தில் பணியும் என்றன்
உளமே புகுந்து நிறைவோனே;
என்முன் தோன்றும் காட்சிகள் தோறும்
இருந்தே விரிந்து மறைவோனே!

ஜனனம் என்பது உயிரின் நுகர்வு;
ஜனித்த பின்னால்தான் காணும் உறவு:
மரணம் வரையினில் தொடரும் உலகு;
மரித்த பின்னாலோ அனைத்தும் கனவு!

எண்ணிப் பார்த்தேன்,இறைவா என்னுள்
எத்தனை ஜனனம்;எத்தனை மரணம்?
மண்ணில்,‘நான்,‘நீ’, ‘எனதுனதென்னும்
மாயை எதற்கு? விடை சொல்வாயா?

மாயை இதுவென அறியும் மனதுள்
மயங்கும் மதியைப் படைத்தவன் நீயே;
சேயைப் போல்நான்,தேம்பிடும்பொழுது
சேய் போல் சிரித்து மழுப்புகின்றாயே?

என் விருப்பத்தில் நான்வர வில்லை;
இங்கென் விருப்பம் நீதடுக் கின்றாய்;
உன் விருப்பத்தில் பிறந்தவன் தன்னை
உலகியல்தனில் ஏன்புதைக் கின்றாய்?

பொருள்வழி உலகில் பிறந்தேன்;இங்கே
பொருளை,அருள்வழி இறைக் கின்றேன்;
அருள் வழி பொருளா? பொருள் வழி அருளா?
அதை நான் புரிந்திடத் துடிக்கின்றேன்!

பொருள்வழி மட்டும் வாழ்வென்றிருந்தோர்
போன பாதையைப் பார்க்கின்றேன்;
அருள் வழி நின்றோர் அருளிய பொருள்வழி
அடைந்திடும் பொருளைச் சேர்க்கின்றேன்!

உயிர்வழிப் பயணம் உணர்ந்திடும் அறிவில்
உண்மையும் ஒளியும் தடுமாற்றம்;
பயன் தரும் பயணம் எனப் புகுந்தால்
பாதையில் எத்தனை ஏமாற்றம்?

பொய்யை மெய்யாய்ப் பேசியவாறே
பொழுதைக் கழிக்கும் புல்லருடன்;
வையம் வாழ்ந்திட வருந்துகின்றேன்;
வருந்திடத்தானா வாழ்வ ளித்தாய்?

பொய்யைச் சுடுமோர் பொல்லாச் சினமும்
புல்லரின் உறவைஅறுத்திடும் மனமும்
மெய்காண்பதற்குத் துடித்திடும் குணமும்
மேன்மை இலையேல்,ஏன்இவ் வாழ்க்கை?

தர்மா,தர்மம் தலை குனிந்திருக்க
தத்துவப் பொய்கள் தலை நிமிர;
‘கர்மாஎன்றே இதைச் சொல்லிக்
கைதொழுதற்கா எனைப் படைத்தாய்?

குறிப்பு:
1996களில் இச் சிந்தனை எழுந்து கவிதை எனத் திரண்டது.
இப்போது இங்கே பதிவில் 17.9.2010-

Thursday, December 15, 2011

எரிவது,நெஞ்சில் நெருப்பு!





கல்லும் மண்ணும் தோன்றா முனமே,
கனிந்தது நம்மொழி;உண்மை!
அல்லும் பகலும் இதையே சொல்லி
அளப்பதிலே ,என்ன நன்மை?

முன்னம் யாவும் முன்னிலை வகிக்க,
மூத்த குடிஎனத் திகழ்ந்தோம்;
பின்னர்அவற்றைப் பெருமை பேசியே
பேணும் சாதனை மறந்தோம்!

உள்ளுணர்வோடு உலகத் தமிழரின்
ஒற்றுமை வேண்டித் துடிப்போம்;
உள்ளூர்த் தமிழர் மட்டும் இங்கே
ஒருவருக் கொருவர் கெடுப்போம்!

‘செய்யும் தொழிலே தெய்வம்என்றொரு
சிந்தனை தனையும் அறி வோம்;
உய்யும் வழியை மறந்தவர் ஆகி,
உருப் படாமலேதிரி வோம்!

எப்படி இருந்தோம்எப்படி வாழ்ந்தோம்?'
என்கிற பெருமை யைஇன்று,
செப்படி வித்தை அரசியற் குழியில்
சேர்த்து விட்டோமே,கொன்று!

திறமையும் தெளிவும் கொண்டோர் நமது
தேசத்தை விட்டே ஓடுகின்றார்;
அறிவும் புகழும் செல்வமும்தேடி
அந்நிய நாட்டில் வாடுகின்றார்!

கூராய் எதையும் ஆரா யாமல்
கூட்டம் கூட்டமாய்ப் போனோம்;
யாரோ ஒருவன் பின்னால் செல்லும்
ஆட்டு மந்தைநாம் ஆனோம்!

அரியா சனங்களின் கீழே நம்மை
அடிமைகள் ஆக்கிக் கொண்டோம்;
'தெரியா சனங்கள் நாம்'எனநமக்கே,'
திலகம்தீட்டிடு கின்றோம்!

பொய்யும் புரட்டும் புண்மொழிப் பேச்சும்
பூத்திடும் மேடைகள் முன்னே;
கையொலி செய்தே மெய்ம் மறப்பதில்நாம்,
கலங் காதிருப்பதுஎன்னே?
'
தலைவனின் பின்னே ‘தறுதலை'போலத்
தாழ்ந்துவிட் டோமே, இன்று!
உலகினில் இந்த அவலத்தை மாற்றி
உயரும் நிலை’தான்,என்று?

இன்றைய நிலையை எண்ணிப் பார்த்தால்,
எரிவது நெஞ்சில் நெருப்பு;
‘என்னது,நமக்கு,இப்படிக் கேடு?'
என்பதுதான் கை இருப்பு!

தமிழா, தமிழா தலைநிமிர் வாயா?
தவறுகள் களைந் திடுவாயா?
நமைத் தாழ்த்திடும்இக் கொடுமைகள் சாக
நல்லறி வுணர்ந் திடுவாயா?
v  
கிருஷ்ணன்பாலா