Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்!

கரும்பு,மஞ்சள்,வாழை எங்கள்
கழனியெலாம் தங்குக;
தருமம் மிகும் தமிழர் மனம்
தரணியிலே பொங்குக!

அரும்புகின்ற நமது எண்ணம்
அவணியிதில் ஓங்கியே
அகதி ஆக வாழும் மக்கள்
ஆளும் மக்கள் ஆகுக!



புதிய பா‘தை’ படைத்து இந்தப்
புவியிலெங்கும் தமிழரின்
விதியை மாற்றும் வெற்றி சூழ
வேண்டுகின்றோம் பொங்கலே!

சிதைந்து போன நமது பண்பு
சிகரமாக எழுந்திட
உதயமாக வேண்டும்;இந்த
உலகம் போற்றும் பொங்கலே!

பொங்கல் எங்கள் சின்னமாகப்
பூமியெங்கும் பொங்குக!
மங்கலங்கள் பொங்குமாக
மகிழ்ச்சியோடு பொங்குக!

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்களுடன்
கிருஷ்ணன் பாலா
14.01.2011

Friday, January 7, 2011

தெரு மந்திரம்






















திருமந்திரம் போற்றுமின்...!
தெளிவுடை மாந்தருக்குறும்பே ரின்பம்;
தெளிவுடை மாந்தருக்கொருநன் னூலது;
தெளிவுடை மூலர் மந்திரம் போற்றின்;
தெளிவுடை யதுபோல் பிறிதொன் றிலையே
(தெரு மந்திரம்:1  / 2.11.2010 /14:10 pm)

மெய்வழி!
உய்வழி யாதென உணர்வார் இல்லை;
செய்வழி நன்மை செல்வார் இல்லை;
பொய்வழி ஒன்றே புகும் வழி காண்பார்;
மெய்வழி செல்லார் மீளாதாரே!
(தெரு மந்திரம்:2 / 07.1.2011 / 11:58 AM)


கசடர்கள்!
கசப்புடை எழுத்தைப் பலபேர் நாடி
கசப்புடன் கசந்து கசப்பைப் பேசி
கசப்பின் கசடெனக் கழியா திருப்பர்;
கசப்பில் கலந்தே கரைந்திடு வாரே!
(தெரு மந்திரம்:3 / 2.11.2010 / 15:10 pm)


அல்லன நல்லது...
‘அல்லும் பகலும் நல்லன தேடி
அல்லன கழிய நில்’எனச் சொல்வோம்:
அல்லன போயின் நல்லன வெல்லாம்
அல்லும் பகலும் நிற்கும்தானே?
(தெரு மந்திரம்:4  / 15.09.2011 / 11:01 am)

அழையா விருந்தினன்!
அழையா விருந்தினன் அணுக்கத்திலிருந்தான்;
அழையா விருந்தினன் அவனை அறியார்;
அழையாப் போதிலும் அவன் இவன் உள்ளே
அழைக்கின்றான் தனை இவன் அறியானே!-
(தெரு மந்திரம்: 5 /15.09.2011 / 14:00 am)


குருவை நினைக்கின் 
எத்திக்கும் இன்பமுற இனி தருளும்
தித்திக்கும் குரு நாமம் செபித்து இங்கு
முத்திக்கும் முன்நிற்கும் பக்தி தன்னைப்
புத்திக்குள் வைப்போரை வணங்கி னேனே!
(தெருமந்திரம்:6 / 17.05.2012 / 09:00- am)



உணர்வு

உணரா மந்திரம் தெருவில் இருப்பன;

உணர்ந்தோர்க்கவைதாம் உருவம் தெரிவன:

உணராதிருந்து உணர்வோர் எல்லாம்
உணர்ந்தும் உணரா உணர்விருப்போரே!
(தெருமந்திரம்:7 17.5.2012 /09:41 am)





குரு வழி ஒரு மொழி
ஊர்சொல்லி நின்று உரைத்த பொருள் அன்று;

பேர்கொள்ள வேண்டிப் பிதற்றும் மொழி அன்று;
சீர்கொண்டு நின்றும் செபிக்கும் உரை அன்று:
நேர்கொண்ட நெஞ்சின் நிமலனருட் சொல்லே!
(தெரு மந்திரம்:8 / 31.5.2012)


மூடர் சபையின் முட்டாள்
முகம் பார்த்துப் பேசும் மூடர்கள்கள் நடுவிலிங்கு
முகம் காட்டி நிற்கின்ற முட்டாளாய் நானொருவன்,
முகவுரைத்தேன்;முன் நின்றேன்;என் அகத்தின்
முகம் காணாப் பேர்வழிகள் முனகு கின்றாரே!!
 ((தெரு மந்திரம்:9 / 31.5.2012)



Saturday, January 1, 2011

வருக,வளமான புத்தாண்டு!



ஆண்டுகள் தோறும் புதிய
ஆண்டினை வரவு கூறி
பூண்டிடும் உணர்வினாலே
புதுமையை நாடு கின்றோம்;

வேண்டுதல் மட்டும் எண்ணி
வேறொன்றைச் செய் வதாலே
ஆண்டவன் எண்ணம் வேறாய்
ஆனதைக் காணு கின்றோம்!

எதுநலம் தருமோ;அதனை
எண்ணிடும் அறிவு கெட்டு
பொதுநலம் உணர்ந் திடாமல்
புன்மையை நாடு கின்றோம்!!

சுயநலப் பேய்கள் செய்யும்
சூழ்ச்சியில் மூழ்கி;வாழ்வுப்
பயனதை உணர்ந் திடாமல்
பள்ளத்தில் வீழு கின்றோம்!

பிறர் மனம் கண்டு அன்பு
பேணினோம் இல்லை;ஏழை
வறுமையில் வாடக் கண்டும்
வசதியைக் குறைத்தோம் இல்லை!

அறம் எனக் கண்டும்;வாழ்வில்
அடுத்தவர் துன்பம் நீக்கும்
நெறிகளில் நின்றோம் இல்லை;
நேர்மையைக் கொண்டோம் இல்லை!

வரைமுறை இன்றி ஆசை
வளர்த்திட வாழு கின்றோம்:
திரைமறைவாகச் செல்வம்
தேர்ந்திட வாடு கின்றோம்!

அரசியல் நேர்மை கெட்டு
அறநெறி முறையும் கெட்டு
தரம்மிகு கொள்கை தன்னைத்
தலைமுறை தவற விட்டோம்!

எது சரி என்னும் நல்ல
இலக்கணம் மறந்து இங்கு
பொது நலம் அழிய; நித்தம்
பொய்களில் விளைந்து விட்டோம்!

பொல்லாங்கு எல்லாம் இன்று
பொசுங்கிட வேண்டும்; மக்கள்
எல்லோரும் ஒன்று போல
இறைவனை வேண்ட வேண்டும்!

எல்லோரும் இன்புற்றிருக்க
இறையருள் நினைப்ப தல்லால்
நல்லோரின் எண்ணம் வேறு
நாடுதல் இல்லை அன்றோ?

வருகின்ற காலம் நாட்டில்
வளம் எலாம் சேர; மக்கள்
பெருமையே கொள்ளும் வண்ணம்
பிறக்கட்டும் புதிய ஆண்டு!

அனைவருக்கும் வாழ்த்துக்களுடன்,
கிருஷ்ணன் பாலா
31.12.2010