Sunday, October 30, 2011

கண் சிமிட்டும் கண்ணன்!






கண் சிமிட்டும் கண்ணனையே பாடுங்கள்;அவன்
கண்ணசைவில் துயரம் தீரும் பாருங்கள்;
மண்ணைத் தின்ற மழலையவன் காணுங்கள்;நம்
மனதில் வைத்துத் தினம் அவனைப் பேணுங்கள்! 
                                                            ( அந்தக் கண் சிமிட்டும்).
                                                                                            
கண்ணனையே எண்ணுகின்ற மனதிலே;அவன்
காதலியாம் ராதை வந்து ஆடுவாள்;அந்தப்
பெண்ணழகி ஆடுகின்ற நினைவிலே;இந்தப்
பிள்ளை தோன்றிக் குழலிசைப்பான் கேளுங்கள்!
                                                        (அந்தக் கண் சிமிட்டும்...).

ராதையிடம் போதை கொண்ட மேதையாம்;அந்த 
ரகசியத்தை யாரறிவார் மண்ணிலே?- கண்ணன்
ராதையோடு மகிழ்ந்திருப்பான் என்பது;;நாம்
ராதைபோன்று அவன் நினைவில் வாழவே!
                                                      (அந்தக் கண் சிமிட்டும்...)

கண்ணன் எந்தன்தந்தை என்று காட்டவே; என்னைக்
கவிதையிலே பாலன் என்று கூறுவேன்!
மண்ணில் அந்தக் கிருஷ்ணனுக்குப் பாலனாய்;நான்
மகிழ்ந்திருந்து பாடுகிறேன்;கேட்கிறான்!  
                                                        (அந்தக் கண் சிமிட்டும்...)

பாடுபொருள் பரம்பொருள்என் கண்ணனே;நான்
பாடுவதைக் கண்சிமிட்டி ரசிக்கிறான்;இங்கு  
தேடுபொருள் அவன் ஒருவன் மட்டுமே; எட்டுத்
திசைகளிலும் மறைந்திருந்து சிரிக்கிறான்!
                                                       (அந்தக் கண் சிமிட்டும்...)

 இவண்-
கிருஷ்ணன்பாலா
31.10.2011

கோடை தந்த கொடை!

















ச்சைவண்ண ஆடைகள்;
பார்வை எங்கும் மேடைகள்;
மிச்சமுள்ள சாலைகள்;
மேடுபள்ள லீலைகள்;

அங்குமிங்கும் வீடுகள்
ஆனந்தத்தின் கூடுகள்;
எங்கும் வனப்புக் கோடுகள்;
எழில் அடர்ந்த காடுகள்;

மேகம் வந்து தழுவிடும்;
மேனி அதில் சிலிர்த்திடும்;
மோகம் கொண்ட நினைவுகள்
மூட, மனம் களித்திடும்!


சின்னச் சின்ன ஓடைகள்;   
சிற்றருவி ஓசைகள்;
என்னை உன்னை ஈர்த்திடும்
இதயம் குளிரக் காட்டிடிடும்!

கொட்டும் வெய்யிற் கொடுமையை;
கொன்றுபோட்டுக் குளுமையை
எட்டுத் திக்கும் பரப்பிடும்
இயற்கை தந்த நன்கொடை:

கோடைக் கானல்மலை என
குவிந்து நிற்கக் காண்கிறேன்;
கோடியுள்ள செல் வரும்
குலையும் இன்பக் கொடையிது!

இறைவன் என்னும் சிற்பியின்
இணையில்லாத கற்பனை;
குறையிலாத சொப்பனம்
கொண்டி லங்கும் அற்புதம்!

கோடைக் கானல் செல்லுங்க்ள்;;
குலைந்து போகும் கவலைகள்;
தேடி வரும் மகிழ்ச்சியில்
தெளிவு வரும் பாருங்கள்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
30.10.2011

-----------------------------------------------------------------------------------------------------------------=
*  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக் கானல் சென்றிருந்தேன்;
   அப்பொழுது அதன் இயற்க்கை அழகில் லயித்தமனம் எழுதிய கவிதை இது:

   25 ஆண்டுகளுக்கு பின்பும் அந்தக் கவிதை எனது மனதில் பசுமையாய்ப்  
   படர்ந்திருந்த்து, இப்பொழுது நினைத்தும் அப்படியே கொட்டிவிட்டது,
   இங்கே.

  -கிருஷ்ணன்பாலா
---------------------------------------------------------------------------------------------------------------------

வானவில்!



















வானவில்லின் வர்ணஜாலம் பார்க்கிறேன்;
வரைந்தவன்யார் என்பதைத்தான் கேட்கிறேன்;
ஆனவரை எண்ணிப்பார்த்து வியக்கிறேன்;
அவன்  அற்புதங்கள் கடந்து நிற்கும் அற்புதன்!


இவண்-
கிருஷ்ணன்பாலா
30/10/2011

---------------------------------
PICTURE COURTESY: Jeya Dass

Saturday, October 29, 2011

எனது இருபத்தைந்து!



நினைத்துப் பார்க்கின்றேன்.
என்னுடைய 25 வயதில் ஒரு பெரிய
பத்திரிகை நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தேன்.


எனது 25 வயதுப் பருவத்தில் நான் கசந்த உலகியல் வெறுப்புக்களைப் போல் நூறு மடங்கு அடுத்த 30 ஆண்டுகளில் அனுபவித்தும் எனது இயல்பு மாறுவதற்குப் பதில் ஏறி நின்றதைத்தான் உணர முடிகின்றது.,இப்போது.

அந்த இருபத்தைந்து வயதில் அட்சயப் பாத்திரம் போன்ற வேலையை விட்டெறிந்து வெளியேறிய அவன்தான்என்னுடன் இமைப் பொழுதும் நீங்காமல் என் மனச் சான்றாய்எனக்குத் துணையிருப்பவன் என்பதை பெருமையோடு நினைவு கூர்கின்றதென் நெஞ்சம்.

எனது இருபத்தைந்துஎன அப்போது எழுதிய ராஜினாமாக் கவிதைக் கடிதம் இப்போது எனது வரலாற்றுக் குறிப்புத்தான்!


படியுங்கள்: 
எனது இருபத்தைந்து!
----------------------------------------
ஏழ்மையில் பிறந்து;நல்ல
எளிமையில் வளர்ந்து;தூய
வாழ்வினில் வந்த தெல்லாம்
வரவினில் வைத்து;இந்தச்
சூழ்நிலை தன்னில் தோன்றும்
சுவைஎலாம் கவிதை யாக;
ஆழ்மனம் எண்ணி அந்த
அனுபவம் விளையப் பாடும்
பாழ்படும் உலகில் என்றன்
பருவமோ இருபத்  தைந்து!

விதித்ததை விதித்து என்றன்
வினையினில் நின்ற தெய்வம்;
உதித்தபின் உறவென் றாகி
உணர்வினில் நின்ற பெற்றோர்;
பதித்தைப் பதித்து நெஞ்சில்
படிப்பெனத் தந்த ஆசான்;
எதிர்த்திடும் வினையை வெல்ல
எனக் கிவர் தோன்றி இன்று
கொதித்தெழும் இருபத் தைந்தில்
கூடவே நிற்கின் றார்கள்!

‘பார்புகழ் மைந்தன் ஆகப்
பார் என அன்னை சொல்ல;
நேர்மையில் நடக்கச் சொல்லி
நினைவினில் தந்தை நின்றார்;
கூர்கொண்டு நிமிர்ந்து நிற்க
குருமொழி சைகை செய்ய;
மார்புக்குள் ஆடும் வாணி;
மாசிலாக் கருணை செய்தாள்!
சேர்கின்ற இடம் யாதென்று
சிந்திக்கும் இருபத் தைந்து!

பண்பினை இழந்து பாழும்;
பணத்தையே நினைந்து;அறிவுக்
கண்களை மூடி அகத்தின்
கருத்தினை மாற்றி;அழுக்குப்
புண்களை வளர்த்து;அதிலே
புணுகினைத் தடவி;உலகின்
தொண்டரைப் போலும் ;போலித்
துரைத்தனம் செய்வோர்;என்றன்
நண்பரும் இல்லை ;உண்மை!
நமக்கதில் உறவும் இல்லை!

எவரெவர் எதைச் செய்தாலும்
எனக்கதில் ஆசை இல்லை;
அவரவர் செய்யும் உழவே
அறுவடை ஆகும் அளவு;
தவறெவர் செய்தா லும்மே
தண்டனை அளிக்குந் தெய்வம்;
கவலைகள் மறப்பாய் என்றே
கனிவுடன் வார்த்தை சொல்லி
தவமுடன் நின்ற நெஞ்சின்
தடமது இருபத் தைந்து!

இதை எலாம் நெஞ்சில் வைத்து
இன்றுநான் நிமிர்ந்து கொண்டேன்;
எதைஎலாம் கொள்கை என்று
என் வழி நடக்கின்றேனோ
அதைஎலாம் இழந்து யார்க்கும்
அடைக்கலம் ஆகி; என்றன்
சதையுடல் வளர்க்க மாட்டேன்;
சத்தியம் அறிக;இதற்கு
வதைஎலாம் வரினும் தாங்கும்
வயதது இருபத் தைந்து!

இதுவரை வந்த வாழ்வின்
இலக்கணம் கற்ற தாலே
இதுவரை வந்த தெல்லாம்
இலக்கியம் ஆக்கி விட்டேன்:
இதுவரை வந்த பாதை;
இருபத் தைந்தாண்டுக் காலம்;
இது இனிச் செல்லும் தூரம்
எதுவென அறியேன்;எனினும்
இதுவரை வந்த தெய்வம்;
இனி, கைவிடுமா என்ன?

இவண்-
கிருஷ்ணன்பாலா
29.10.2011

-----------------------------------------------------------------------
*1975-ல் நான் எழுதிய ராஜினாமாக் கடிதம் இது.

Thursday, October 27, 2011

கவித் தலம்;எனது கவிதைத் தளம்!

என்னைப் படைத்த கவிதை யாதென
இங்கு படைக்கின்றேன்;அது
உன்னை உணர்த்தி உயர்ந்திடச் செய்யும்
உண்மை உரைக்கின்றேன்!

மண்னைப் பிசைந்து மார்பில் சந்தனம்
மற்றவர் பூசுகின்றார்; நான்
மண்ணில் விளைந்த  சந்தனக் காட்டுள்
                             மத்தளம் போடுகின்றேன்!

கண்டு மகிழ்ந்திட;கவிதை புரிந்திடும்
கவித் தலம் கட்டியுள்ளேன்;நல்ல
வண்டுகளாய் வந்துண்டு மகிழுங்கள்;
வந்தனம் கூறுகின்றேன்:
------------------------------------------------------------
காணும் யாவிலும் கவிதை!
--------------------------------------------------------------
உள்ளத்தில் உள்ளது கவிதை;
உணர்ச்சியில் உள்ளது கவிதை;
வெள்ளத்தனையது கவிதை;
வீறு கொண்டிருப்பது கவிதை!

கள்ளம் அற்றது கவிதை;
கருணை உள்ளது கவிதை;
பிள்ளையைப் போன்றது கவிதை;
பேசத் தெரிவது கவிதை!

காதல் உடையவர் கவிதை;
கண்டதும் சேர்வது கவிதை;
தீது தவிர்ப்பது கவிதை;
தேசத்தில் வாழ்வது கவிதை!

உண்மை மிகுந்தது கவிதை;
ஊருக்குச் சொல்வது கவிதை;
நுண்மை நிறைந்தது கவிதை;
நோக்கம் உடையது கவிதை!

துன்பம் களைவது கவிதை;
தோழமை ஆவது கவிதை;
இன்பம் மிகுந்தது கவிதை;
ஈசன் அறிவது கவிதை!

அச்சம் இல்லாதது கவிதை;
ஆழ்மனம் கொண்டது கவிதை;
இச்சகம் வென்றிடும் கவிதை;
என்னைப் படைத்தது கவிதை!.

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.10.2011

Tuesday, October 25, 2011

மாயை!









’நானும் அவளும்’  என்றொரு பதிவை 12.10.2011 அன்று முகநூலில் பதித்தேன்.
அதற்கு சிவு Cevu  (முகநூல் நண்பர்) சொன்னார்:

//மனம் ஏங்கும் மாயைக்கு... மாயை மகளுக்கு ஏங்குகிறது!//

அந்த மாயையை வெல்வதற்கு வழி?
---------------------------------






மாயை
-------------
மாயை என்பதைக் கண்டார் இல்லை;
மண்ணிலதனை வென்றார் இல்லை;
நீயும் நானும் இங்கெல்லோரும்;
நிலையில்லாமல் இருப்பது உண்மை!

சிலந்தி வலைபோல் மாயை இருக்க
சிக்கிகொள்ளும் பூச்சிகள் நமக்கு
பலவிதம் ஆசை;ஒருவருக்கொருவர்
பகைத்தும் சிரித்தும் பசப்புதல் உண்மை!

 
சித்தனும் பித்தனும் முத்தனுமாக                                    
சிற்சில பூச்சிகள் காட்டும் வித்தை;
அத்தனும் அம்மையும் ஒன்றாய்ச் சேர்ந்து
ஆசைப்பட்டுப் போட்ட பிச்சை!
 

கூத்தும் பாட்டும் கொச்சைத் தனமும்
கூடிக் கழிக்க விரும்பும் பூச்சிகள்
சேத்துக்குள்ளே விழுந்து சாகும்;
சிலந்திப்பூச்சிக்கு அது உணவாகும்.

நானும் நீயும் நிஜமென்றுலகை                                                 
நம்பிக் கிடந்தால் மோசம் போவோம்;
வானும் நிலவும் வாழ்வதைப் போல
வாழ்க்கைப்படவே ஆசைப் படுவோம்!

சிலந்திக் கூட்டைக் சிந்திக்காமல்
சில்லறை ஆசையில் வீழ்ந்து விடாமல்
தொலைந்து போவோம் நமக்கு நாமே;
தொலையா இந்த மாயையை விட்டே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
25.10.2011

வாழ்தல் இனிது!



வாழ்தல் இனிது,உணர்வீர்;அவ்
வழக்கம் என்பது மானுடர்க்கே!
சூழ்நிலை எதிலும் வாழ்தலையே
சுவைத்திடுவீர் எம் மானுடரே!
தாழ்வதும் உயர்வதும் இவ்வுலகில்
தாங்குதல் மானுடர் கடனென்று
வாழ்தல் என்பதுதான் அறிவு;
வையக்தீர்;இதை உணர்வீரே!!

சூறாவளிபோல் சில சமயம்;
சோகமும் சுகமும் வீசுவதும்
வேறொரு சமயம் பேரமைதி
விளைந்து அதுவும் மாறுவதும்
மாறா விதிதான் என்றுணர்ந்து
மாண்புடை மக்கள் வாழ்கின்றார்;
தேறா மாக்கள்தாம் அதனில்
தெளிவில்லாமல் உழல்கின்றார்!


அன்பும் அறனும் உயர்நெறிகள்;
அவை இல்லாகில்பெரும் தாழ்வு;
பண்பும் பயனும் அறிவோர்க்கே;
பழுதில்லாத  உயர் வாழ்வு;
என்பும் தோலும் இதன் சுகமும்
இன்பம் என்று நினைப்போர்கள்
நன்று வாழ முடியாது;ஆம்!
நன்மை,தீமை உணர்வீரே!


அனைவருக்கும்
நல்வாழ்த்துக்களுடன் -
கிருஷ்ணன்பாலா
25.10.2011

Sunday, October 23, 2011

வெடிக்காத வெடிகள்!

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்ல சரவெடி ஒன்றைப் பரிசளிக்கின்றேன்;இதோ:இதைப் பத்திரமாகக் கொளுத்திப் போடுங்கள்.

வெடிக்காத வெடிகள்
------------------
தேனும் பாலும் ஆறாய் ஓடும்;
திருவாளத்தான் தென்நாட்டில்;
நானும் நீயும் நம்புகிறோம்;
நம்தலைவர்கள் சொல்கின்றார்!

மானம் கெட்ட அரசியலை
மாய்ந்து மாய்ந்து தினம் பேசி
நானும் நீயும் மகிழ்ந்திருந்தால்
நமக்கேன் துன்பம்? சொல் தோழா!

தானம் தரவோர் அரசாங்கம்;
தரித்திரம் எப்படி வந்து விடும்?
ஞானம் பெறத்தான் தொலைக் காட்சி
நம்குறை எங்கே? சொல் தோழா!

உழைப்பில்லாமல் உட்கார்ந்து
உண்ணத் திண்ண,மதி மயங்க,
களைப்பைப் போக்கச் சாராயம்
காட்டுதுபார் நம் ராஜாங்கம்!

ஆள்வோர்,அரசியல்வாதி என
ஆளக் கனவு கொண்டிருப்போர்
வாழும் மாளிகை,வசதி எலாம்
வறக் காட்டுக்குள் வந்திடுமா?

கேனப் பயலே,கருப்பையா
கிட்டுச்சாமி, பாப்பையா
ஈனப் பயல்கள் ஏய்ப்பதைதான்
எட்டிப் பார்த்து ரசிக்கின்றாய்!

மேடு திருத்திக் காடாக்கி;
மேழி பிடிப்போர் இல்லையெனில்,
கேடு கெட்ட அரசியலின்
கீழ்மைத் தனத்தின் வாழ்வேது?


போடா, போ; உன் சந்ததிகள்                           
பிழைக்கும் வழியைப் பார்;அவர்க்கு
மாடாய்,ஆடாய் நீ இருந்து
மண்டியிட்டுப் போகாதே!

திருடர் கூட்டம் இந் நாட்டைத்
திருத்தி ஆட்சி செய்கிறதாய்க்
குருடர் முன்னே முழங்குவதைக்
கொளுத்திப் போட்டு வெடிப்பாயே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
23.10.2011