Wednesday, July 18, 2012

இருபத்தைந்தாண்டு இல்லறம் வாழ்க!


ES மணி- அலமேலு
இருபத்தைந்தாண்டு இல்லறம் வாழ்க!
-----------------------------------------------------------

இனியதாம் இல் லறத்தின்
இருபத் தைந்தாண்டை இன்று
தனிச் சிறப்புடனே காணும்
தம்பியாம் மணியின் அன்பை
மனதிலே வைத்து; வாழ்த்தி
மகிழ்கிறேன்;கவிதையாலே!
இனிவரும் காலம்எல்லாம்
இறையருள் காக்க வாழ்க!

அலமேலு மங்கை யாளை
அன்புடன் கரம் பிடித்து
உலகிடை நீந்தி; நல்ல
உறவினை வளர்த்து நாளும்
கலகலப் பாக வாழ்ந்து
கனவுகள் கண்டே; நல்ல
நிலையினை அடைய வேண்டி
நெஞ்சிலே உறுதி கொண்டான்!

கற்றதோ கொஞ்சம் எனினும்
கருத்துடன் கற்றான்;அதையே
நற்றொழில் என்று கண்டு
நண்பர்கள் பெற்றான்;அந்தப்
பொற்றொழில் மணிக்கு நல்ல
புகைப் படத்தொழிலாய் அமைய;
மற்றவை இல்லை;எனினும்
மலைஎன நிமிர்ந்தான் அன்றோ?

என்னதான் செயினும் வாழ்வில்
எதிர்ப்புகள் வரினும்;கவலை
சின்னதோ பெரிதோ;எனினும்
சிந்தனை ஒன்றே ஆகி
நின்றது இறைவன் பக்தி;
நிறைவுடன் ஆண்டு தோறும்
சென்றது சபரிமலை தான்
சேர்வதே அவனருள் என்பான்!

இருபத்தைந்தாண்டுக் காலம்
இந்நிலை மாறாமல்தான்
குருவிபோல் பறந்து ஓடி
குடும்பத்தை வாழ வைத்து
வருகின்ற வாழ்வில் இன்று
வளமுடன் நலமும் சேர
குருவருள் வேண்டு கின்றேன்!
குவலயம் புகழ வாழ்க!

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
16.7.2012

Wednesday, July 4, 2012

மரியே,அருள் புரியே !



தூயமரி உனைத் தொழுகின்றேன்; என்
துயரங் களில்விடு படுகின்றேன்;
தாயுன் கருணையை உணர்கின்றேன்; என்
தவறுகள் புரிந்திடத் தெளிகின்றேன்!

அம்மா,என்னைப் படைத்தவளே;இந்த
அவணியில் நலமாய் வளர்த்தவளே!
சும்மா எனைநீ படைப்பாயா?;ஒரு
சூக்குமம் இன்றி வளர்ப்பாயா?

பிறந்ததன் பயனைக் கேட்கின்றேன்;என்
பிறப்பினைச் சிறப்பாய் அளித்தருள்நீ:
சிறந்தன யாவும் இம்மண்ணில்;நான்
சிந்தித் திருந்திடக் கொடுத்தருள்நீ!

இங்கே என்னை அறிகின்றேன்;உன்
இணையடி யில்மனம் உயர்கின்றேன்
எங்கே பயணம் இருந்தாலும்;என்
இதயம் உனதடி வைக்கின்றேன்!

தாயே நீஎன் வழித்துணையே; என்
தமிழில் தோன்றிய நல்மரியே!
சேயாய்க் கேட்டென் ஆசைகளை;உன்
செவ்வடி வைத்தேன்; அருள்புரியே!

இவண்-
கிருஷ்ணன்பாலா

28.11.2000 அன்று வேளாங்கன்னித் திருத்தலம் சென்றிருந்த போது
அன்னை மரியாளின்  அருள் முகம் கண்டு என் மனம் சேவித்த கவிதை இது.