Sunday, December 23, 2012

கிறிஸ்துமஸ் வாழ்த்து! - 25.12.2012





எல்லா மதங்களும் நதிகளைப் போலே
இறைவன் என்னும் கடலில் கலக்கும்;
எல்லா மக்களும் தத்தம் வயல்களில்
ஏர்ப்பிடித்துழுது பயிர் செய்துயிர்க்க
எல்லா நெறிகளும் அவரவர் மொழிகளில்
இறைவனின் ஆட்சியை எடுத்துணர்விக்க
எல்லைகள் வகுத்து வாழும்வகையில்
இருக்கும் உலகில் நாமிருக்கின்றோம்!

மூஸா நபியும் ஈஸா மொழியும்
முழுமையாக்குமோர் இறைவழி என்றே
தேசங்கள் தோறும் அறிவோம் ஆயின்
தெளிவு இறைவன் ஒன்றே ஆகும்;
ஏசும் மாக்கள் ஏசட்டும் இங்கே
இறைப்பெயர் இங்கு பலப்பல;அவற்றைப்
பேசும் உரிமையும் பிசகா அறிவும்
பேணுவதைத்தான் மானுடம் என்போம்!

பரம்பொருள் கண்ணன் மாடுகள் மேய்த்தான்;
பரமன்ஏசு ஆடுகள் மேய்த்தான்;
கிருஷ்ணன் என்பதும் கிறிஸ்டியன் என்பதும்
கேட்டால் செவியில் ஒன்றாய் ஒலிக்கும்!
’பரமபிதாவின் மைந்தன் மண்ணின்
பாவத்தை ஏற்கப் பிறந்தான்’ என்ற
கருணையைக் கூறும் கிறிஸ்மஸ் நாளில்
கர்த்தர் ஏசுவை வணங்கி மகிழ்வோம்!
  
மனிதநேயம் யாதெனக் காட்டவும்
மாக்களையெல்லாம் மக்கள் ஆக்கவும்
கனிவும் அன்பும் கருணையும் கொண்டு
கடமையை உணர்த்திநமை உய்விக்கவும்
தனிஒரு பிறவி எடுத்தே மண்ணில்
தானோர் மகவாய்ப் பிறந்தான்;ஈசன்!
புனிதன் ஏசு அவன் தான் என்று
புரிந்துபோற்றுதல் மானுடர் கடமை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.12 2012

Monday, December 10, 2012

எங்கள் ராஜாஜி!













அண்ணல் ராஜாஜி 
அவதரித்த நாள் இன்று:
-----------------------------------------

வரைமுறை தவறிய
வாழ்க்கையைத் தூண்டும்
வகைசெயும் தீயவ ரான

வஞ்சக மானிடர்
வழிகளை எதிர்த்து
வையகம் புகழும் வண்ணம்

அரசியல் ஒளியை
அணைய விடாமல்
அரண்போல் காத்து நின்று

அண்ணலின் நிழலாய்
அணைந்தார் ஒருவர்;
அவர்தான் எங்கள் ராஜாஜி!

திரை விழுந்தாலும்
தெளி விழக்காமல்
திராவிடப் பொய்களை எதிர்த்து

திடமுடன் நியதி
தினம் வலியுறுத்தி
தேசத்தின் நன்மை கருதி

கறைபடும் மனங்கள்
கலங்கிடச் செய்யும்
கருத்துக்கள் நாளும் எழுதி,

கண்ணியம் என்னும்
கரைதனில் நின்ற
கலங்கரை எங்கள் ராஜாஜி!

கீதையின் சாரமும்
ராமனின் காதையும்
கேட்டவர் வியக்கப் படைத்து

கீர்த்திகொள் தமிழில்
கேடறு கருத்தினை
கிளர்ந்தெழச் செய்து நிறுத்தி

நீதிசொல் இலக்கியம்
நின்றிடும் வாழ்வினில்
நேர்ந்திடும் மேன்மையைக் காட்டி

நஞ்சுறை எழுத்தினர்
நடுங்கிட வைத்த
நல்லவர்;மாமுனி ராஜாஜி!

பாதகம் கூட்டு மோர்
பாதையை வகுத்திடப்
பார்த்திடும் நாடுகள் யாவையும்

பரிவுடன் அணுகிடும்
பண்புடைத் தூதராய்ப்
பார்த்தது ஐக்கிய நாடுகள்;

ஆதலால் மோதலும்
அணுக்கதிர்ச் சேதமும்
ஆவதைத் தடுத்ததோர் தமிழர்;

அவர்,இவர் என்பதை
அறிந்தவர் மிகச் சிலர்;
அறிவிலிக் கூட்டமோ அதிகம்!

ஆதவன் போலொரு
அறிஞனாய் வந்தனன்;
ஆகவே அவனொரு அந்தணன்;

ஆகையால் அவன் புகழ்
ஆவதைத் தடுத்தவர்
அறிவிலிக் கூட்டமே அன்றி

நீதியைச் செய்தவர்;
நேர்மையைப் புரிந்தவர்
நிச்சயம் இவர்கள் அல்லர்!

அறவழி நின்றவர்
அந்தணன் என்றனன்;
அறநெறி வள்ளுவன் அன்றோ?

அண்ணல்ரா ஜாஜிதான்
அறவழி நின்றவர்;
ஆகவே அந்தணர்,நண்பரே!

நெறிமுறை அரசியல்
நின்றவர் அவர் பெயர்
நெஞ்சில் வைத்திடல் வேண்டும்;

நேர்வழி;அவர்வழி
நிஜம்;அது நம்வழி
நித்தமும்; அவர்புகழ் வாழி!

இவண்-
கிருஷ்ணன் பாலா
12.12.2012

Friday, December 7, 2012

இதுநம் கடமை!


கொச்சை மொழியும் குறுக்குவழியும்
கூடாநட்பின் குத்தாட்டம்;
எச்சம் எனவே முகநூலில்
இருக்கக் கண்டு எழுதுகின்றேன்:

அடுத்தவன் எழுத்தைத் திருடுவதும்
அழகியர் பின்னால் வருடுவதும்
மடத்தனமான வார்த்தைகளை
மலச்சிக்கல்போல் எழுதுவதும்

மந்தைகள் போன்று குழுவாகி
மலங்க மலங்கப் பாடுவதும்
சிந்தனை சிறிதும் இல்லாத
சிறுவர் என்றே காட்டுவதும்

அதிகம் பெருகி, அசிங்கம்தான்
ஆறாய் ஓடிடக் காண்கின்றேன்;
பதியும் கருத்தில்இதை வைத்தே
பண்பைக் காத்திட வலியுறுத்தி,

அச்சம் இன்றி இடித்துரைத்தால்
ஆணவம் என்றே சொல்கின்றார்;
எச்சில் கூட்டம் அதற்கெல்லாம்
எப்படிப் பதில்நாம் சொல்லுவதாம்?

பெண்டீர் சிலரும் கணிகையர்போல்
பிதற்றும் மொழிகள்,பலவாறு
பண்பில்லாத கருத்துக்களைப்
படைத்தால் அவரைப் பொறுப்போமா?
  
பெட்டைக் கோழிகள்பின் சென்று
‘பிதற்றும் சேவல் கூட்டத்தை
வெட்டிப்பயல்கள்’ என்கின்றேன்;
வீணர் அவரை மதிப்போமா?

தட்டி எழுப்பும் தமிழ் வீரம்
தாங்கிப் பொழியும் மொழியமுதம்;
கொட்டிக் கிடக்கும் களஞ்சியத்தில்
கொட்டும் விஷத்தை ஏற்போமா?

இறைநெறி வாழ்ந்து எல்லோரும்
இனிதாய் இருக்க முனைவோரை
மறைமொழியாக நர மொழியில்
மருளச் செய்தால் விடுவோமா?

எட்டி உதைப்போம்;தமிழாலே;
இதுநம் இயல்பென நாட்டிடுவோம்;
கட்டிவைப்போம்; நல்லோரை;
கருணையும் உண்டெனக் காட்டிடுவோம்!

சிறுமை கண்டு பொங்கிடுவோம்;
சீர்மை கொண்டு தங்கிடுவோம்;
அறிவு கொண்டு அணுகிடுவோம்;
அச்சம் இல்லாமல்  எழுதிடுவோம்!

மரபும் மாண்பும் இணையற்ற
மாந்தர் காட்டிய அறநெறிகள்;
வரவும் செலவும் எனக் காட்டி
வாழ்வதுதானே நம் கடமை?

இவண்-
கிருஷ்ணன்பாலா
7.12.2012

Thursday, December 6, 2012

கவிதைக்குப் பொய் அழகு


நண்பர்களே,

கவிதைக்குப் பொய் அழகுஎன்பது-

முன்னாளில்  புலவர்களால் உண்டான சொலவடை.
இந்தச் சொலவடை இன்று
பல பொய்யர்களுக்கு வசதியாகி,பொய்யைத் தவிர
கவிதையில் எந்தப் பொருளையும் வைக்காமல்
எழுதி இன்புறும் அவலம்தான் மிஞ்சி நிற்கிறது.


தனி மனிதர் ஒழுக்கத்தையும் சமூக நலனையும்
ஒன்றாக வைத்து எழுதும் கவிதைகளில்
உருவகங்களையும் உவமைகளையும்
இணைத்துச் சொல்வது பொய்தான் ;எனினும்
அதன் அழகே அழகுதான்.
அதை இலக்கிய நயத்தோடும் கவிதை மனத்தோடும்
கண்டு,படித்தால் சுவை மிகுந்திருக்கும்.

எடுத்துக் காட்டாக

காதலன் காதலியை வர்ணிக்கும்போது:

நிலவு முகம்மலர் இதழ்;
உலவு தென்றல்;உற்சாக அருவி;
மான் விழி;தேன் மொழி;
அன்ன நடை;மின்னல் இடை;

கார் கூந்தல்கத்துங் குயில்
தேரசையும் திருமேனி
வானகத்துத் தேவதையே!
வந்தென்னை வதையேநீ;

கொத்தும் மலர்ச் செண்டே
கொவ்வைஇதழ் கொண்டு
கொத்தி எனைக் கொய்யாயோ?
கூடலிலே கொல்லாயோ?

என்று-
ஊடல் கொண்ட காதலியைக்
கூடவைக்கும் தந்திரத்தில்

காதலன் பாடினால்
காதலி என்ன செய்வாள்?
கர்வத்தோடு 
கட்டி அணைக்க மாட்டாளோ?

கவிஞனின் இந்தப் பொய்களை
நாம் ரசிப்பதில்லையா?
கவிதைக்குப் பொய் அழகு என்பது இதுதான்.

அதேபோல்-
சமூக விழிப்புணர்வைத் தட்டி எழுப்ப,
எழுதப்படும் கவிதைகளில்:

மலை நிகர்த் தோளும் மழுங்காத வாளுமாய்
மகனே உடனே புறப்படு;
அலையெனப் பகைவர் திரண்டு வந்தாலும்
அஞ்சாதே நீ போர்த்தொடு!”

என்று எழுதுவதும் பொய் என்றாலும்
உவமைகளும் உருவகங்களும்
உன்னதமான உணர்வுகளை ஏற்படுத்துபவை.


அன்றைய காலகட்டத்தில்-

மன்னருக்கு மனைவியிடத்திலோகாதலியிடத்திலோ
ஏற்படும் ஊடலை கூடலாக்கித் தரும் பொருட்டு,
அரசவைப் புலவர்களில் பலர்
நாயகியருக்குச்
சிற்றின்ப வேட்கையைத் தூண்டி,

அரசர்களின் அந்தப்புர
ஆசைகளை நிறைவேற்றும் கவிதைகளை எழுதினார்கள்.

நாயகிகளை-

மான் என்றும் மலர் என்றும்
தேன் என்றும் தென்றல் என்றும்
ஊன் என்றும் உயிர் என்றும்
வான் ஊரும் நிலவு என்றும்

வார்த்தைகளை அலங்காரப் படுத்தி
அரசர் சொல்வதாகத் தூது போனவர்களும் உண்டு.

அதில்
பாராட்டப்பட்டு, பரிசில் பெற்ற
புலவர்களைப் பார்த்து. (நாயகி இல்லாத சமயத்தில்தான்)
அரசர்கள் வழக்கமாகச் சொல்லும்
உயர்வு நவிற்சி அணிதான்: ‘கவிதைக்குப் பொய் அழகு

இவண்-
கிருஷ்ணன்பாலா
6.12.2012