Sunday, May 26, 2013

கிட்டு-லட்சுமி கீர்த்தி வளர்க!

நூலை வெளியிடும் தமிழ்ப்பல்கலைக் கழக முன்னைத்துணை வேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியம், முதல் நூலைப் பெற்றுக் கொள்ளும் தாராபுரம் நகராட்சி ஆணையர் திரு. சரவணக் குமார்,  கடைக் கோடியில் நூலாசிரியர் கிட்டு என்கிற கிருஷ்ணசாமி




நண்பர்களே,
வணக்கம்.
எனது பள்ளித்தோழனும் தமிழ்நாடு அரசு வணிகவரி அலுவலராகப் பணி நிறைவு பெற்றவரும் கவிப்புலன் மிக்கவரும் கவியரசு கண்ணதாசனின் படைப்பிலக்கியப் பரம ரசிகனுமான ’தாரை கிட்டு( முகநூல் முகவரி: Krishnasamy Kittu) எழுதிய ‘கவியரசு கண்ணதாசனின் கவிதைச் சிந்தனை நூல்வெளியீட்டு விழா 25.5.2013 அன்று தாராபுரத்தில் நடந்தது.

ஈரோடு மாவட்டத் தலைமை சித்த மருத்துவ அலுவலரும் தாராபுரம் ‘தமிழ்க் கலை மன்றப்’ புரவலருமான டாக்டர்.மா. தங்கராசு அவர்கள் தலைமை தாங்க, தமிழ்ப் பல்கலைக் கழக முன்னைத் துணவேந்தரும் எந்நாளும் எனதினிய நண்பருமான முனைவர் சி.சுப்பிரமணியம் அவர்கள்  முதல் நூலை வெளியிட்டுச் சிறப்புரை வழங்க,தாராபுரம் நகராட்சி ஆணையர் திரு.க.சரவணக்குமார் முதல் நூலைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்க  நல்லோரும் நற்றமிழ் அறிந்தோரும் வாழ்த்துரகள் வழங்க விழா இனிதே நிகழ்ந்து முடிந்தது.

நண்பர் தாரைக் கிட்டுவின்  முதல் நூல் வெளியீட்டு விழா நாள் என்பதுடன் அவருக்கும் எனது சகோதரியை ஒத்த லட்சுமிக்குமான இல்லற வாழ்வின் முப்பத்து மூன்றாம் ஆண்டுத் தொடக்க நாளுமாய் 25.5.2013 அமைந்தது.

விழாவில் கலந்து கொண்டு நான் வழங்கிய கவிதை வாழ்த்து இது:


கிட்டு-லட்சுமி கீர்த்தியாய் வாழ்க!

---------------------------------------------------------------

வான்மலர் நிலவு,நாளும்
வளர்வதும் தேய்வதும் ஆகத்
தான்நிலை கொண் டிருக்கும்;
தாரைமா நகரைப் பெயரில்
ஊனென இணைத்த,கிட்டு
உலகுள நாள்வ ரைக்கும்
வான்வரை வளர்கஎன்றே
வாழ்த்துவேன்,அவனை இன்றே!

புவிஎலாம் போற்றும் கவிதைப்
புதல்வனாம் கண்ண தாசன்;
கவிதையில் திளைத்த நண்பன்;
கண்டநல் ரசனை யாவும்
உவந்திடத் தீட்டி;நூலாய்
உலகினுக் களித்தான்,இன்று!
அவையினர் மகிழ இங்கு
அனைவரும் வாழ்த்து மாறே!

முப்பத்து இரண்டு ஆண்டு
முகிழ்த்தநல் இல் லறத்தின்
எப்பத்தும் குறைவில் லாது,
இயங்கினன்; பயணம்தோறும்
அப்பழுக் கின்றி வாழ்ந்து,
ஆனந்த நாளாய் இன்று
உற்பத்தி செய்கின் றானை,
உளம்நிறை வாழ்த்து கின்றேன்!

நூல்வெளி யீட்டு நாளும்,
நுண்ணற வாழ்வு ஆண்டும்
நூலென இணைத்த நாளாய்
நோன்புற அமைந்த தின்று!
மாலொடு மருவி வாழும்
மலர்மகள் லட்சுமி யோடு
காலங்கள் தோறும்;ஓங்கிக்
களித்திட வாழ்த்து வோமே!
முப்பத்திரண்டு ஆண்டு இல்லறத்துக்கு இனிய உரை எழுதி விட்டு முப்பத்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க அனைவரின் வாழ்த்துக்களைப் பெறும் கிட்டு-லட்சுமி தம்பதி. 
 

இவண்,
கிருஷ்ணன்பாலா
25.5.2013