Saturday, June 15, 2013

நெஞ்சும் நஞ்சும்!



நெஞ்சிலே நஞ்சு தோய்ந்தால் 
நலமுறச் செய்து;நெஞ்சைப் 
பஞ்சுபோல் வைக்கும் பண்பைப்
படைத்துளோம்;அறிவீர்;ஆனால்
நஞ்சிலே தோய்ந்து நெஞ்சம்
நலம் கெட வீழ்ந்து விட்டால்
அஞ்சுவோம்;அதனை இங்கு
அகற்றிட அறி கிலேனே!
இவண்-
கிருஷ்ணன்பாலா
15.6.2013

Friday, June 14, 2013

மனமே.நீ....

கம்பனைப் பாடி கொம்பனாகலாம்;கவி
காளமேகம்போல் கவிதை கொட்டலாம்;
நம்பிக்கைஊட்டும் வார்த்தைமலர்களில்
நாடே புகழும் பெயரை எட்டலாம்!

கண்ணதாசனின் காதல் கவிதையில்
கதை கதையாக  உவமை கூறலாம்;
எண்ணம் முழுவதும் அவன்பேர் வடித்து
இரவும் பகலும் வணக்கம் கூறலாம்!

அவ்வை,வள்ளுவன்,இளங்கோ,பாரதி
அடுக்கடுக்காக ஆயிரம் புலவரை
கவ்விடும் கருத்தில் வடித்து வைத்து
கருத்துப் பதிவுகள் வெளுத்து வாங்கலாம்!

அறிஞர் சபையில் ஆரா வாரங்கள்
அணங்குகள் இடையில் வரவேற்புரைகள்;
திறமை மிக்கதோர் தமிழுணர்வோடு
திசைகள் எட்டிலும் தேர்ந்து நிற்கலாம்!

கவிஞன்;புலவன்;அறிஞன் என்று
கணக்கில்லாமல் பேர் நீ, வாங்கினும்
புவியில் ’மனிதன்’ எனும் பெயர்  ஒன்றை
பூண மறந்தால் பொய் நீ,மனமே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.6.2013


(ஒரே மூச்சில் எழுதப்பட்ட  கவிதை இது)

Sunday, June 9, 2013

என் நூல் அகம்!




எங்கே சுற்றித் திரிந்தாலும்
எதுவும் எனக்குச் சுவையில்லை:
இங்கே என்றன் நூலகத்தில்
இருப்பதைப் போன்ற சுகமில்லை!

உலகை நினைத்துக் கவலை யினால்
உள்ளம் தோய்ந்து கசக் கின்றது;
உலகை இங்கே மறக் கின்றேன்;
ஒவ்வொரு நொடியிலும் பிறக்கின்றேன்!

மூடர்கள் கூடி சபை நடத்த
முதல்வன் போல வீற்றிருந்து
தேடும் போலிக் கவுரவத்தைத்
திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை!

பீடும் பெருக்கும் பிழையறுக்கும்
பெருமைக்குரிய அறவாழ்வை
நாடும் மனத்தின் நற்றிசையாய்
நன்னூல் பலவும் குவிந்திருக்கும்

வீடாய் எனது நூல்அகத்தை
விரும்பி அமைத்தே மகிழ்கின்றேன்;
தேடாநிலையில் தெளிவெல்லாம்
தேடி வரநான் காண்கின்றேன்!

ஒவ்வொரு நூலிலும் என்அன்னை
உள்ளே இருந்து அழைக் கின்றாள்;
ஒவ்வொரு நூலிலும் என்உணர்வை
உயிராய்க் காத்து வளர்க் கின்றாள்!

பிறந்தால் மீண்டும் மண்ணில்நான்
புத்தகப் புழுவாய்ப் பிறந்திடவும்;
இறந்தால் இந்தப் புத்த கங்கள்
என்னை மூட, இறந் திடவும்

வரம் தாஎன்றே வேண்டுகின்றேன்;
வழங்கிடுவாய் என் குருதேவே!
பரம்பொருள் வடிவில் வாழ்பவனே;
பாரினில் இதுவே என் ஆசை!

    

இவண்-

கிருஷ்ணன்பாலா
9.6.2013 






இராஜா.தியாகராஜன்




முகநூலில் நற்றமிழ்ச் சான்றோனாய் வாழும்
பாவலர் திரு இராஜா.தியாகராஜன் அவர்கள்
5.6.2013 அன்று  இருபத்தைந்தாண்டுக் கால
இல்லற வாழ்வைக் கடந்தார்.
 
எனதினிய நண்பருக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் 
தெரிவித்து எழுதப்பட்ட கவிதை வாழ்த்து இது:

இருபத்தைந்து இல்லறம் தொடர்க!
-------------------------------------------------------------------

இருபத் தைந் தாண்டுகள் கடந்து
இல்லறப் பாதையில் இனிதே நடக்கும்
அருமைத் தமிழர்;முகநூல் வட்டம்
அறிந்து மதிக்கும் செந்நாப் பாவலர்!

இராஜாதி யாக ராஜன்; என்
இதயம் பதிந்த இனிய நண்பர்;
’இராஜாதி ராஜன்’ என்றே வாழ
இதய வாழ்த்தை இங்கே பதித்தேன்:

அன்பு நண்பனே,அறிவுத் தமிழனே
ஆணவம் அறியா எளிய அறிஞனே;
உன்னரும் இல்லறம் ஓங்கி இருந்து;,
உன்பெயர் என்றும் நிலைத்தே இருக்க!

தமிழ்போ லினித்து தவறுகள் கசக்கத்
தரும்உன் எழுத்தின் ரசிகர்கள் யாரும்
அமிழ்தென உனது நட்பினை அடைந்தார்;
அடியேன் கூட அவ்வண்ணம்தான்!

தமிழணங் கென்னும் தாயைப் போற்றித்
தவறா துரைக்கும் நின் கவிதைகள்;
இமயச் சிகரம் ஏற்றிடும் உணர்வுகள்;
இதுதான் நினது செந்தமிழ்ப் பற்று!

என்றும் நினது இல்லறம் விரிந்து
எல்லாத் திசையிலும் நற்புகழ் அடைந்து
குன்றா வளமும் கோபுர வாழ்வும்
கொட்டிக் கிடக்கும் செல்வமும் தழைக்க!

வாழ்க்கைத் துணைவியும் வைகைச் செல்வனும்
வற்றா நதிகள் எனஉனக் கமைந்து
ஆழ்கடல் போன்ற அமைதியும் வெற்றியும்
ஆண்டவன் அருள வேண்டுகின் றேனே!

அன்புடன் வாழ்த்தும்-
கிருஷ்ணன்பாலா
5.6.2013

Saturday, June 8, 2013

டாக்டர். சீர்காழி சிவசிதம்பரம் வாழ்க!


ன்று-

தமிழிசை போற்றும் தன்னிகரில்லா
இசைமேதை டாக்டர். சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின்
பிறந்த நாள்.

அவர் நூறாண்டுகள்
இசைபட  இசைபட வாழ்ந்திருக்க 

வாழ்த்துவோம்,நண்பர்களே.
--------------------------------------------------------
   டாக்டர்.சீர்காழி சிவசிதம்பரம்



கலகலவெண்கல ஓசை;போர்க்
களத்தினில் வெளிப்படும் வீரம்;
சலசல அருவியின் ஓட்டம்;நல்ல
சங்கதி குழைந்த ராகம்:

பலப்பல ஆலா பணையில்
பரவசம் நல்கிடும் தாளம்;
சிலசில மேதைகள் மட்டும்
சேர்த்தே தருவார் பாட்டு!

இருக்கும் மேதைகள் எல்லாம்
இணந்தே ஓருரு பெற்று
உருக்கும் இசையை வழங்கி
உறைந்தார் ஒருவர்;உண்மை!

சிவத் தலம் சிவ சீர்காழி;
சீலர்கள் பிறந்த பூமி;
சிவத்தமிழ் பெற்ற மைந்தர்
சீர்காழிகோ விந்த ராஜன்;

அவர்தம் வழியில் நின்று
அச்சரப் பிசகில் லாமல்
தவத்தமிழ் இசையை இன்று
தரும்அவர் மைந்தர் கண்டோம்!

எவரும் போற்றும் பண்பும்
இசைத்தமிழ் காட்டும் தொண்டும்
சிவ சிதம்பரத்தின் வடிவாய்
ஜெனித்தது உலகில் உண்மை!

சிவ சிதம்பரத்தின் வாழ்வு
சீர்காழிக்கே பெருமை:
இவர்நூ றாண்டுகள் இருந்து
இசைபடவாழ வாழ்த்து!

இசைத்தமிழ் போற்றும் எல்லோர் சார்பாகவும்
வாழ்த்தும்,
கிருஷ்ணன்பாலா
8.6.2013