Tuesday, July 30, 2013

செழுந்தமிழ் நட்பு!

கவிதையெனும் பெயரிலிங்கு கண்டபடி
கருத்துக்கள் எழுதுகின்றார் சிலபேர்கள்;
கவிதை என்றால் என்னவென்று அறிந்திடாத
கடைகெட்ட மூடர் அதை ரசிக்கின்றார்கள்!

பெண் என்ற பெயராலே எழுதிவிட்டால்
பேயாக ரசிப்பது போல் கருத்துச் சொல்லி
கண் என்றும் உயிர் என்றும் கசிந்துருகி
கருத்துக்கள் சொல்லி,அதை ருசிக்கின்றார்கள்.

மூடர்கள், முட்டாள்கள், தமிழ் மொழியின்
முடவர்கள், குருடர்கள், செவிடு கொண்ட
கேடர்கள் அவரைநாம்நாம் என்ன சொல்ல?
கிறுக்கர்கள்தாம் அவரை மன்னிப்போமா?

நல்ல தமிழ் எதுவென்று அறிந்ததில்லை;
நயமான கற்பனைகள் கொண்டதில்லை;
சொல்ல வரும் கருத்தில் ஓர் புதுமையில்லை;
சுவையாக எழுதிடவும் பழக்கமில்லை!

முகநூலில் வீண் உரைகள் புனைகின்றார்கள்;

முக்காட்டுக் குள்ளிருந்து முனகுகின்றார்;
தகவின்றித் தமிழ் நடையின் சிறப்பை யெல்லாம் 
தகர்ந்த்தெறிந்து தத்துவங்கள் பேசுகின்றார்!

ஆனாலும் அவர் பின்னே ஓடுகின்ற
அறிவிலிகள் கூட்டம்தான் அதிகம் இங்கு;
நானாக அவர்கருத்தில் சென்று அங்கு
நம்கருத்தை எழுதுவதால் பயனே இல்லை!

அறிந்திடுவீர்; என் குணத்தை எனக்கு என்று
இறுமாப்பு மிகவுண்டு;தமிழை இங்கு
குறைப்படுத்தி எவரேனும்எழுதி என்முன்
குலவுகின்ற மூடமைக்கு இடமேஇல்லை!

குறிப்பாகக், கவிதை என்று எனது பக்கம்
கூறுதற்கு முனையாதீர்;முனைவீர் என்றால்
செறிவான எழுத்தோடு என்முன் வாரீர்
செழுந்தமிழைச் சேவித்து நட்புக் கொள்வோம்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.12.2011

Saturday, July 20, 2013

என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா?



'வா’ வென்று ஆவலோடு
வரவேற்று நட்பை எலாம்
‘தா’  வென்று யாரிடத்தும்
தயவு செயக் கேட்டதில்லை!
’போ வென்று ஒருவரையும்
புழுங்கிநான் சொன்னதில்லை!
‘சீ’என்று சொல்லாமல்;
சினம்கொண்டு தள்ளாமல் -

அகம் கொண்டு பார்க்கின்றேன்:
அறிவுடைய யாரையும்நான்
இகழாமல் சேர்க்கின்றேன்;
இம்முகநூல் கூட்டத்தைத்
தகவுடன்தான் நினைக்கின்றேன்;
தமிழ் உணர்வுப் பண்போட்டம்
பகர்கின்ற நண்பரெலாம்
பகையின்றி மகிழ்வதற்கும்-

நற்றமிழைக் கற்றோரும்
நாட்டு நலன் மிக்கோரும்
குற்றமிலா வாழ்வதனைக்
கும்பிட்டு நிற்போரும்;
சொற்பதங்கள் அறிவோரும்
சூதறியா நண்பர்களும்
சுற்றமெனக் கூடி யொரு
சொந்தமென ஆவதற்கும் -

இச்சுவரில் எழுதுகின்றேன்;
என் தமிழைப் பதிகின்றேன்;
அச்சமிலாக் கருத்துக்கள்;
ஆணவம் போல் தெரியுமெனில்
கொச்சைமிகும்  பதிவுகளைக்
கொண்டிருப்போர் நட்பினையே
எச்சம் எனக் கொண்டு
ஏற்பதுதான் நல்லதென்பேன்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
20.07.2013

வாழி,நீ வாலி!

 
ஞானம் மிகும் கவிஞனுக்கு
நண்பரெலாம் விடை கொடுத்தார்;
போனவனின் புது நடையும்
பொய்யில்லாத் தமிழ்ப் பாட்டும்
வானவருக்கு விருந் தென்று
வந்துரைத்த மழை நடுவே-
ஆனவரை கவிஞரெலாம்
அவரவர்தம் விழி துடைத்தார்!

வாலிக்கு முன்னாலே
வாலாட்ட ஆளில்லை;
வாலிக்குப் பின்னாலும்
வரிசைக்கு ஆளில்லை1
கேலிக்குச் சொல்வதற்கு
கேனைபல இருந்தாலும்
வாலிக்கு நிகராக
வைக்க ஒரு கவிஞனிலை!

இவண்-
கிருஷ்ணன்பாலா 
19.7.2013