Wednesday, October 23, 2013

இருபத்தெட்டு ஆண்டு இல்லறம் வாழ்க!

பிரேமநாயகம் -ஆவுடை நாயகி தம்பதிக்குப் பூங்கொத்து வழங்கும் நண்பர் திரு.கார்த்திக்.

பொய் தகர்த்த எண்ணம்;
பொன் நிகர்த்த உள்ளம்;
மெய்வழி யில் நின்று
மேவி வாழும் கொள்கை!

தன் மனத்தை வென்று
தர்ம நெறி கண்டு;
பன்ம தங்கள் அறிவைப்
பதித்து  வாழும் மனிதன்!

பிரேமநா யகத் தைப்
பேசுகின் றேன் இங்கே;
உரிமை கொண்ட நட்பில்
உவந்து வாழ்த்து கின்றேன்!

என்ம னத்தை ஈர்த்து
எப்பொ ழுதும் சேர்த்து;
புன்ன கைத்து வாழும்
பொறுமை மிக்க நண்பர்!

ஆவுடைநா யகியை
அன்புத்துணை ஆக்கி;
மேவுகின்ற வாழ்வில்
மீட்டும் நல்லறத்தில்

இன்று ஆன காலம்
இருபத் தெட்டு ஆண்டு;
என்றும் அதன் பெருமை
இருக்க வேண்டி வாழ்த்து!

சொத்து சுகம் தேட
சூழ்ச்சி செய்த தில்லை;
எத்தனை யோஇழந் தும்
இதயம்  சோர்ந்த தில்லை!

துன்பம் என்ற ஒன்று
தோல்வி செய்த தில்லை;
இன்பம் வந்த போதும்
எறிகிக் குதித்த தில்லை!

ஞானம் மிக்க மனிதன்
நல்ல றிவுப் புனிதன்;
ஊனமற்ற உணர் வில்
ஓங்கி நிற்கும் அறிஞன்!

இல்ல றத்தை ஏற்று
இருபத் தெட்டு ஆண்டு;
நல்ல றத்தை நடத்தும்
நண்பர் நீடு வாழ்க!


வாழ்த்தும்-
கிருஷ்ணன்பாலா
22.10.2013

Tuesday, October 22, 2013

பண்புத் தமிழ்ப் பேண.....!


வேசைக் குணங் களதில் 
ஆசைப் பட் டுழன்று
பேசித் திரிகிறவன் ஆணா?

தாசித் தனம் காட்டும்
தமிழை எழுதப் பெரும்
ஆசைப் படுகிறவள் பெண்ணா?

மோசம் மிகும் பண்பை
முந்திப் படித் திங்கு
நேசம் கொள்பவர்கள யாரும்

நாசம் புரிபவர் கள்;
நாட்டைக் கெடுப் பவர்கள்;
நபும்சப் பிறவியெனச் சொல்வேன்!

தாலித் தலைவ னையும்
தனது மனைவி யையும்
கேலிப் பொருள்ஆக்கிக் கொண்டு

போலித் தனங்க ளிலும்
புரட்டுக் குணங்க ளிலும்
பூசும் அரிதாரம் கண்டு

சேலைக்குள் ஆண் மகனும்
சேவல்போல் பெட்டைகளும்
ஆளுக்கு ஒருவிதமாய் இங்கு

தாளிக்கும் வார்த்தை களில்
தரம் கெட்ட பேர்வழிகள்
கேளிக்கை செய்வதைநான் கொல்வேன்!

யாருக்கும் அஞ்சா மல்
எவருக்கும் தாழா மல்
எழுதும் துணிவுதனைக் காட்டி

நேருக்கு நேர் நின்று
நிஜமான எழுத் துக்கள்
நிமிர்ந் திங்கு நடைபோடத்  தீட்டி

தோளுக்குத் தோள் தந்து
தொய்வில்லா நட்போடு
தொடர்கின்ற கூட்டத்தைக் கூட்டி

பாருக்கு நலம் சொல்லும்
பாதைக்கு வா வென்று
படைக்கின்றேன்,என் மனதை இங்கே!

பற்றும் கணினி யுகம்
பண்புத் தமிழ் பரப்பப்
பற்றும் உணர்வுகளை நன்று

கற்ற மனம் உடையோர்
காட்டும் அக்க றையை
உற்று நோக்குகிறேன்,இன்று!

ஒற்று உற வாடி
ஓங்குத் தமிழ் நாடும் சு
ற்றம் உடையவர்கள் என்று

முற்றும் நம்புகி றேன்;
முனைந்து எழுதுகிறேன்;
கற்றுத் தெளிபவர்கள் வாழ்க!

இவண்-
கிருஷ்ணன்பாலா
22.10.2013

Thursday, October 17, 2013

கவியரசு நினைவுகளில்.....

வரைகலை:ஜீவா
எப்பொழுதும் சிந்தனையில் இருப்பவன்தான் கவிஞன்;
எதுகுறித்தும் அஞ்சாது படைக்கும் அவன் இறைவன்;
முப்பொழுதும்முத்தமிழில் மூழ்கி நின்ற   தமிழன்;
முன்னோரின் மரபு வழி முத்தெடுத்த கலைஞன்!

புத்தியுள்ள மனிதரெல்லாம் போதை தலைக்கேற
போதையிலே புதுத் தமிழைப் பொலியவைத்த மேதை;
வித்தைமிகும் எழுத்துக்களால் சத்தியத்தைச் சொல்லி;
விஜயனுக்குச் சொன்னதுபோல்சொன்ன மொழி ‘கீதை!’

அர்த்தமுள்ள இந்து மதம்;அடடா..ஓ அடடா;
அவன்போலச் சொன்னது யார்? வந்திங்கு தொடடா!
கூர்த்த மதி; கொள்கை நெறி;கூடு கட்டி அதிலே
குடியிருந்த கவியரசைக் கூறுகின்றேன்;இங்கே!

கம்பனது மறு பிறப்பு; காளிதாசன் ஜாதி;
காதலிலே கரைபுரண்ட உமர்கயாமும் பாதி;
வம்பரெலாம் வாய் புதைத்து வணங்குகின்றவாறு.
வார்த்தைகளைச் சரம் தொடுத்த காளமேகம் மீதி!

கீதையதன் போதையினைத் தெளிந்து சொன்ன மேதை;
போதைமிகும் கருத்துக்களில் போகும் இவன் பாதை;
நீதி மொழி சொல்லி இங்கு நேர்த்திக் கடன் முடித்தே;
நித்திரையில் சென்று விட்டான்; நினைவுகளை விதைத்தே!

கவியரசை எண்ணி எண்ணிக் கலங்கு கின்றோம்;நெஞ்சம்;
காலனவன் கருணையின்றிச் செய்த கொடும் வஞ்சம்;
கவியரசாய்த்  தமிழை ஆண்டு,புவியில் ஓங்கி நின்ற
கண்ணதாசன் போன்று கவி பிறப்பதென்று? இங்கே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
17.10.2013

Wednesday, October 16, 2013

நான் இங்கு எழுதுவது....?


சொல்லும் பொருளும் சேர்ந்திருக்கும்
சுவைமிகு கவிதைகள் பதிகின்ற
எல்லை;எனது இப்பகுதி;
இதனுள் வருவோர் மிகச் சிலர்தாம்!

வருவார் எல்லாம் பொருளுணர்ந்து
வாசித் துண்மை உணராமல்;
தருவார் ‘விருப்பம்’;அது அவர்தம்
தகைமை நட்பே என்றிருப்பேன்!

வாரா தவர்கள் பார்வையிலே
வழுக்கிச் செல்லும் நேரத்தில்
ஏரா ளமாய்ப் பதிவுபல
இல்லாததுபோல் சென்றுவிடும்!

இதுபோல் நல்ல பதிவு பல
இருப்பதைப் பலரும் உணராமல்
’விதியே’என்று அர்த்தமற்ற
வீண் கருத்துக்கள் தான்படிப்பர்!

என்றோ ஒருநாள் விடுபட்ட
இலக்கியப்பதிவைப் பார்வையிட்டு
’நன்றொ நன்று’ எனப் புகழ்ந்து
நவில்வார் சிலரும் இங்குண்டு!

பரபரப்பாக இருந் திங்கு
படிப்பதைப் படித்து உணராமல்
அரைகுறைகள்தம் வார்த்தைகளில்
அர்த்தம் தேடி அலைவதுவும்;

தரமில்லாத பதிவுகளில்
தங்கள் அறிவைக் காட்டுவதும்
பரிதாபத்தின் சாட்சிகளாய்ப்
பலரை இங்கு நானறிவேன்!

எனினும் என்றன் பதிவுகளை
இங்கே வைப்பதன் காரணத்தை
நினைவு கூர்ந்திடச் சொல்கின்றேன்:
நெஞ்சில் வைப்பீர் நண்பர்களே:

இலவசமாக எழுதியிங்கு
என்னைக் காட்டிக் கொள்வதன்று;
நலமிகு உள்ளம் கொண்டோரின்
நாட்டமும் அறிவும் உணர்வதற்கே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
16.10.2013

Monday, October 14, 2013

காகித பூஜை!

எல்லோருக்கும் இன்று ஆயுத பூஜை;
எனக்குமட்டும் காகித பூஜை!

ஆம்!.
கவிதை மலர்களால் மாலை தொடுத்து
அன்னை கலைவாணிக்கு
அணிவித்து மகிழ்ந்த காகித பூஜை!

-கிருஷ்ணன்பாலா
13.10.2013

வாணிக்குக் காணிக்கை!

தீதிலன்,உலகில் யானோர்
தெளிவுளன், நினதருளாலே;
யாதெனை வெல்லும்?;உன்னை
யாசித்தேன்இன்றிப் போது,
ஓதிடும் உன்றன் நாமம்
ஒளிர்செயக் கண்டேன்;வாணீ,
சோதியே வருக என்னுள்;
சுடர்கஇவ்வுல கெல்லாமே!
·        


பூவிற் பொலியும் வாணிஎன்றன்
நாவிற்புகுந்து நற்றமிழ் செய்தாள்;
தேவி அவளென் அன்னை;என்னைத்
தேர்ந்தே இப்புவி வைத்தாள்!

கூவி அழைத்துஅவள் தமிழைக்
குவிக் கின்றேன் நான்முகநூலில்
தேவை யுடையீர்,வாருங்கள்;என்
தேன்தமிழ் விருந்தில் சேருங்கள்!

அற்புதமாக ஆர்ப்பரிக்கும்;சொல்
அடுக்கடுக்காக சரம் தொடுக்கும்;
கற்பனையிங்கே படை எடுக்கும்;அது;
காட்டா றெனவே கரை உடைக்கும்!

சிற்சில போழ்து இலக்கணத்தை
சிதறச்செய்யும்தனை மறக்கும்!
கற்பது யாதெனக் கேட்காதீர்
கலைமகள்;அவளைக் கேளுங்கள்!
·        

முன்னைப் பழம் விதியின்
முழுப் பயனில் வைத்திங்கு;
என்னைப் படைத் துலகை
எந்நாளும் காப் பவளை;
அன்னை வாணி எனும்
அறிவுடையோர் கருப் பொருளைப்
பின்தொடரும் பிள்ளை எனப்
பேசுகின் றேன்அறி வீரோ?

மானுடத்தின் மத்தியில் ஓர்
மனிதனெ எனைப் படைத்து,
வான்புகழும் தமிழ் மறைகள்
வளமைமிகும் இலக்கி யங்கள்
நான் படிக்க அருளியவள்;
நான்முகனின் தேவி யவள்;
வானவரும் போற்று கின்ற
வாணியைதநான் வணங்கு கின்றேன்!
·        ·
வாக்கிலே வந்தாள்; அன்னை
வாணியே; ;வந்து,அந்தப்
போக்கிலே புகல வைத்தாள்;
பொய்யிலாச் சேதி;உண்மை1
நோக்கியே சொன்னேன்;நானும்
நுகர்ந்திடும்  மொழியை யிங்கு
தூக்கியே நிறுத்தி என்றும்
தோல்வியைத் தவிர்ப்பாள் வாழி!

·        ·

வாக்கிலே என்றும் உனது
வார்த்தையே வேண்டும்என்றன்
நோக்கிலே பிழைகள் அற்ற
நுகர்ச்சியே வேண்டும்;வாழ்க்கைப்
போக்கிலே பொய்ம்மை சேராப்
புதுமைகள் வேண்டும்;நெஞ்சில்
தேக்கிநான் வேண்டுகின்றேன்;
தேவைகள் அருள்வாய்,வாணீ!

·        ·

கல்விதான் பெரிதாசெல்வம்
காண்பதே பெரிதாஇதிலே
நல்லது யாதென் றிங்கு
நவில்வதைச் சிந்திக்கின்றேன்:
செல்வத்தைச் செல்வம் என்று
சிந்திக்கும் அறிவில் லாது
செல்வதைப் பெற்ற வாழ்க்கை
சிதைந்துதான் போகும்,வீணே!

கல்வியைப் பெற்ற வாழ்வில்
கசடுகள் சேராஅதுவே
செல்வமாய்த் திகழ வாழ்வோர்
சிதைவதும் இல்லைஅதனால்
கல்வியே உயர்ந்த தென்று
காண்கிறேன்வாணி என்றன்
செல்வமாய்த் திகழு கின்றாள்;
சிந்தனை வேறு எதற்கு?

·
உலகிடைப் பிறந்த மாந்தர்
உணர்கின்ற அறிவைப் பெற்று
நலமெதுதீதெது?’ என்று
நாடினால் அதுதான் வாழ்வின்
பலம் மிகு துணையாய் மாறி
பலவிதம் உயர்த்தும்;அதனால்
கலைமகள் மாந்தர் வாழக்
கருப்பொருள்கண்டீர் இங்கே!

·

வாணியைப் போற்றி நின்றால்
வாழ்க்கையில் அறிவு கூடும்;
வாணியால் சேரும் செல்வம்
வளர்ந்திடும் நித்தம் நித்தம்!
வாணியால் தோல்வி இல்லை;
வாழ்க்கையில் வெறுமை இல்லை;
வாணியேவா,நீ’ என்று
வணங்குதல் செய்வோம் வாரீர்!
·      · 
ஊனெடுத்துப் பிறந்த பின்பு
ஓய்ந்து விழும் நாள் வரைக்கும்
நானெடுத்து நடிக் கின்ற
நாடகத்தின்,பாத்திரத்தைத்
தானுரைக்கும் கவிதை இவை;
தருகின் றேன்,நண்பர்களே!
யானுளநாள் வரை’,இவற்றை
யாத்திடுவேன்புரிவீரே!

இவண்-
கிருஷ்ணன்பாலா


13.10.2013

Sunday, October 13, 2013

வாணியை வணங்குவோம்!



வாக்கிலே என்றும் உனது
வார்த்தையே வேண்டும்; என்றன்
நோக்கிலே பிழைகள் அற்ற
நுகர்ச்சியே வேண்டும்;வாழ்க்கைப்
போக்கிலே பொய்ம்மை சேராப்
புதுமைகள் வேண்டும்;நெஞ்சில்
தேக்கிநான் வேண்டுகின்றேன்;
தேவைகள் அருள்வாய்,வாணீ!

கல்விதான் பெரிதா? செல்வம்
காண்பதே பெரிதா? இதிலே
நல்லது யாதென் றிங்கு
நவில்வதைச் சிந்திக்கின்றேன்:
செல்வத்தைச் செல்வம் என்று
சிந்திக்கும் அறிவில் லாது
செல்வதைப் பெற்ற வாழ்க்கை
சிதைந்துதான் போகும்,வீணே!

கல்வியைப் பெற்ற வாழ்வில்
கசடுகள் சேரா; அதுவே
செல்வமாய்த் திகழ வாழ்வோர்
சிதைவதும் இல்லை; அதனால்
கல்வியே உயர்ந்த தென்று
காண்கிறேன்; வாணி என்றன்
செல்வமாய்த் திகழு கின்றாள்;
சிந்தனை வேறு எதற்கு?

உலகிடைப் பிறந்த மாந்தர்
உணர்கின்ற அறிவைப் பெற்று
‘நலமெது? தீதெது?’ என்று
நாடினால் அதுதான் வாழ்வின்
பலம் மிகு துணையாய் மாறி
பலவிதம் உயர்த்தும்;அதனால்
கலைமகள் மாந்தர் வாழக்
கருப்பொருள்; கண்டீர் இங்கே!

வாணியைப் போற்றி நின்றால்
வாழ்க்கையில் அறிவு கூடும்;
வாணியால் சேரும் செல்வம்
வளர்ந்திடும் நித்தம் நித்தம்!
வாணியால் தோல்வி இல்லை;
வாழ்க்கையில் வெறுமை இல்லை;
‘வாணியே, வா,நீ’ என்று
வணங்குதல் செய்வோம் வாரீர்!

இவண்-
கிருஷ்ணன்பாலா

13.10.2013

Friday, October 11, 2013

மனதொடு மனதாய்.......!


மனமே, உன்னுடன் உரையாடி
மகிழ்ந்ததும் நெகிழ்ந்ததும் பலவுண்டு;
சினமோ,துயரோ,செல்வாக்கோ
சேர்ந்தால் உன்னுடன் பகிர்வுண்டு!

பறவைகள்,விலங்குகள்,புல்லினங்கள்
பரபரப்போடு வாழ்வ தில்லை;
முறையோ டவைதாம் வாழ்ந்திருந்து
முனகிக் கொண்டு சாவதில்லை!

அவையவை இயற்கைக் குணங்களுடன்
அற்புதமாக வாழ்வதைத் தான்
தவறியும் மனிதர் உணர்வதில்லை;
தத்துவம் மட்டும் பொழிகின்றார்!

பேரறிவோடு பிறக் கின்ற
பெருமை கொண்ட மானுடர்கள்
ஓரறிவுள்ள உயிரினம் போல்
உற்று உணர்ந்து வாழ்வதில்லை!

இரண்டு மூன்று நான்கைந்து
இருக்கும் அறிவு விலங்கினங்கள்
உருண்டு புரண்டு அழுவதில்லை;
உருட்டும் புரட்டும் செய்வதில்லை!

ஆனால் மனிதன் அப்படியா?
ஆறறி வாற்றல் பயனுண்டா?
ஏனோ,தானோ என உலகில்
ஏய்த்துப் பிழைப்பது அவன்குணமா?

ஆலயம் தேடி ஆண்டவனை
அழுதும் தொழுதும் பொய்பேசி
காலையும் மாலையும் சுகம்காணக்
கவலையில் உழல்வது அவன்தானே?

ஊனுடல் தானொரு ஆலயமாம்
உள்ளே இருப்பது மனசாட்சி;
மானுடன் இதனை அறியாமல்
மறந்தே வாழ்வது ஆறறிவோ?

ஊருக்கு மறைக்கும் உண்மைகளை
உள்ளே இருக்கும் மனசாட்சி;
நேருக்கு நேராய்ப் பார்த்திருக்கும்;
நினைத்தா மனிதன் பார்க்கின்றான்?

பணத்தைத் தேடி; பகைதேடி;
பலமும் நலமும் கெட்டழிந்து
குணத்தைக் கொன்று, கொடுவினையில்
குப்புற வீழ்வது அவன்விதியோ?

காமம்,வெகுளி மயக்கம் எனக்
கைக்கொண்டுழன்று; அறிவின்றி
நாமம் கெட்டு நரகடைய,
நாயினும் கீழாய் வாழ்வதுயார்?

மனமெனும் ஒன்று இருப்பதுதான்
‘மனிதர் அறிவின் சிகரம்’ எனும்
புனிதத் தொல்காப் பியன்சொன்ன
புதிரை உணர்ந்தவன்தான் மனிதன்!

கவலைகள் இல்லா மனிதரைநான்
கடுகளவேனும் பார்த்ததில்லை;
அவலமில் லாதசூழ் நிலையை
அடையா திருந்தால் மனிதரில்லை

ஆயினும் அவற்றை எதிர்கொண்டு
அறிவின் பயனைக் கையாண்டு
‘தூயவன் மனிதன்’ எனக் காட்டத்
தூண்டும் அறிவை நீ கொள்க!

மனமே,உன்னுடன் பலமுறையும்
மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் உரையாடித்
தினமும் விழைவது, இதைத்தானே?
தெளிவாய் என்னுடன் இருப்பாயே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
11.10.2013

ஆச்சிக்கு அகவை 91- வாழ்த்து!





ன்னருமை நண்ப ரென;
இணையற்ற மனித ரென;
தென்னகத்தின் தென் பகுதித்
திருநெல்லைப்  ‘பிள்ளையெனப்
பொன்மனத்தைப் பூத்தி ருக்கும்
பிரேமநா யகத் தின்தன்
அன்னை எனத் திகழும்
அன்னைக்கு வாழ்த் துரைத்தேன்!

அகம் தேடி வந்தார்க்கு
அகம்நிறைய விருந்தளிக்கும்
சுகம்கூட சைவத் தின்
சுவைகூட்டும் கொள்கையென
முகம் சுளிக்கா தின்றைக்கும்
முதுமைதனை வெல்லுகின்றார்;
தகைசான்ற பண்பாட்டின்
தருமநெறி சொல்லுகின்றார்!

சைவத் திருநெறி யின்பால்
சலிப்பில்லாக்  கடமை யுடன்
வையத் திருந் தின்று
வளையாமல் நிமிர் கின்றார்;
ஐயம் தவிர்த் தன்பில்
அனைவர்க்கும் தாய் என்று
உய்கின்ற ஆச்சி இவர்;
ஒரு குறையும் வாராது!

பன்னிரண்டு பிள்ளைகளைப்
படைத்த தொரு தாயாக;
முன்பிருந்த வாழ்க்கை யதன்
முறைமைகளை மாற் றாது;
நன்னெறிகள் அத் தனையும்
நாள்தோறும் செழித்திருக்க,
தன்னுடைய கொள்கையதில்
தளராத  பெரு மாட்டி!

பாப்பம்மாள்எனும்,இந்தப்
பாட்டிக்கு வாழ்த்துரைக்க,
மூப்பில்லை என்ற னுக்கு;
முறையல்ல;என் றாலும்
காப்புரிமை பெற்ற ஒரு
கவிஞன்என வாழ்த்து வது
கேட்பவர்க்கும் உணர்பவர்க்கும்
கிட்டாத பெரும் பேறு!

திருநீறு எப்போதும்
தீட்டுகின்ற இவர் நெற்றி;
ஒருநாளும் தவ றாது
உரைக்கின்ற சிவ பக்தி;
மருவற்ற மன தோடு
மற்றவர்க்குச் சுமையின்றி
தரவாகத் தன் கடனைத்
தானேதான் செய் கின்றார்!

குறும்பான சிந்தனைகள்;
குலையாத நினைவலைகள்;
எறும்பான சுறு சுறுப்பு
எப்போதும் நல் நினைப்பு;
கரும்பான அன்பு மொழி;
கலகலக்கும் நகைச் சுவைகள்;
இரும்பான மன உறுதி;
இவரொத்த பெண்க ளிலை!

ஆச்சிஎன்ற ழைத்து,
அனைவருமே மதிக் கின்ற
பேச்சில் புன்ன கைத்து
பிழையில்லாப் பேரன்பை
மூச்சில் கொண்டி லங்கும்
மூதாட்டி,பாப்பம் மாள்;
ஆட்சிதான் இவர்வீட்டில்
அனைவர்க்கும் இவர்அம்மா!’

தொண்ணூற்று ஓராண்டைத்
தொல்லையின்றிக் கடந் திங்கு;
நன்நூற்றைக் காண் பதற்கு;
நடைபோடும் ஆச்சிக்கு
நன் ஊற்றுக் கவி ஊற
நாவாலும் மன தாலும்
பொன்னூற்று வாழ்த் தாக்கிப்
பூரித்தேன்,இந் நாளே!

மகிழ்வோடும் நெகிழ்வோடும்-
கிருஷ்ணன்பாலா 
10.10.2013



















குறிப்பு:
எனது இனிய நண்பர்ஆடிட்டர்திரு.பிரேம நாயகம் அவர்களின் தாயாரும் அனைவராலும்ஆச்சிஎன்று அழைக்கப்படுபவருமானசிவநெறித் திருமதி. பாப்பம்மாள் அவர்கள் 91ஆம் அகவையை முடித்து, அகவை 92ல் அடியெடுத்து வைத்த இந்நாளில் ஆச்சிக்காகப் படைக்கக் பெற்ற கவிதை இது.