Saturday, November 30, 2013

தாயுமானவனே!

என் தந்தையை எண்ணி ......
-------------------------------------------

எண்ணத்துக்கும் செயலுக்கும்  இடைவெளியோ வேறுபாடோ இருக்கக்கூடாதென்கின்ற இலக்கைப் பாதையாக அமைத்துக் கொண்டு செயல்பட்டவர் என் தந்தை.

ஏழை ஆயினும் செறுக்கில் செல்வந்தர்;
வறுமைக் கோட்டை வளைக்க முடியாமல் வாழ்ந்த போதும்  எவருக்கும் வளையாமல் நிமிர்ந்தே வாழ்ந்து மறைந்து விட்டவர்.

சின்னஞ்சிறுவயது முதலே பற்றாக் குறையின் உஷ்ணம் என்மீது படிந்து விடக்கூடாது என்பதற்காகவே தன்னை எனக்கு நிழலாகத் தந்து வளர்த்துக் கனவுகள் கண்டவர்.

மனிதாபிமானம் இல்லாது பிறருடைய  உழைப்பை உறிஞ்சி  வசதியான வாழ்வு கண்ட  முதலாளிகளை ‘டிஸ்மிஸ்’ செய்து கொள்கின்ற பழக்கத்துக்கு நான் ஆட்பட்டுப் போனதன் இயல்பே அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டதுதான் என்பதைப் போகப் போக புரிந்து கொண்டிருக்கிறேன்.

வறுமையிலும் என்னைச் சுயசார்புள்ளவனாகவே வளர்த்தார்; நான் ஓரளவு வசதியை அடைந்தபோது எனது உழைப்பில் இருந்து சல்லிக் காசுகூடப் பெற்று வாழாத தன்மானத்தோடு இவ்வுலகை விட்டு அகன்று  விட்டார்.

அதே தன்மானம்தான் என்னை இன்று தொடர்கிறது போலும்.

வாழ்க்கையின் பள்ளத்தில் இருந்தபோதும் ’மேட்டுப்’பாளையம் ’கிட்டுக் கவுண்டர்’ என்று சுற்றமும் நட்பும்  உயரத்தில் வைத்துப் பார்க்கும் உண்மையும் உறுதியும் கொண்ட சத்தியவானாக இன்றும் எனது நினைவுகளில் வாழும் என் தந்தையே இவ்வுலகின் முதல் ஆசான் எனக்கு.


கல்வியே பயிலாத அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைதான்  இன்று எனது எழுத்துக்களாய்  வலம் வந்து கொண்டிருக்கின்றன..

(KB/15/6/2014  பிற்சேர்க்கையாக)

எந்தை,’ தாயுமானவன்’ அமரர் கிருஷ்ணசாமிக் கவுண்டர்



அன்னைக் கருவ றையில்
என்னைச் சுமக்கும் முன்
அன்னை அவள் சுமந்த
உன்னுள் எனைச் சுமந்தாய்;

தந்தை என்றெ னக்குச்
சிந்தை உரைத் தவளை
முந்தி இருந்த உயிர்ச்
சொந்தம் உனை மறவேன்!.

வயிற்றில் சுமந் தாளை
வாழ்வில் சுமந் தாய்நீ;
கயிற்றில் வாழ்ந் தாளின்
கருத்தில் வாழ்ந்தாய் நீ!

பத்து மாதம் எனைப்
பதித்து வளர்த் தாளைச்
சொத்துச் சுகம் போலச்
சுமந்த உயிர் நீதான்!

உதிரப்பால் ஊட்டி
உயிரை வளர்த் தாளின்
எதிரில் இணை வைக்க
இல்லை ஒரு தெய்வம்!

எனினும் அவள் மேனி
இளைத் துவிடா திருக்க
உனது உதி ரத்தை
உழைப்பில் சிந்தி யவன்;

எனது தந்தை யென
எண்ணி நெகிழ்கின்றேன்!
மனதில் வைத் துன்றன்
மாண்பில் மகிழ்கின்றேன்;

தந்தை என்று மட்டும்
தனித்து இல்லா மல்,
எந்தை நீ எனக்கு
எல்லா முமாய் இருந்தாய்;

அறிவு புகட்டி எனை
ஆளாக்கி இம் மண்ணில்
உறவை உயிர் உணர்வாய்
ஓங்க வளர்த் தவனே!

தோயும் உணர்வுகளில்
தோய்ந்து தோய்ந்து உனைத்
தாயு மான வனாய்த்
தனித்து வணங்கு கிறேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
30.11.2013

Sunday, November 17, 2013

திரு அண்ணாமலை!


















திரு அண்ணமலையான்
------------------------------------------

பொன்னொளிர் மேனி மின்னிய வாறு
முன்னொரு யுகத்தில் திகழ்ந் தானை;
பின்னொரு காலம் நெருப்பாய் நின்று
பிழைகளை எல்லாம் எரித் தானை;
அன்னை உண்ணாமுலையொடு இன்று
அண்ணாமலை யாய் ஒளிர் வானை
இன்றெமைத் தடுத்துப் பிறவியை அறுக்க
இப்பொழுதே நாம் பணி வோமே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
17.11.2013

Thursday, November 14, 2013

எனது ஆத்திச் சூடி!

 

ஆத்திச் சூடி அவ்வை சொன்னாள்;
அவளென் பாட்டி; அவள் மொழி கொண்டு
யாத்திடும் இதுவும்  அஃதே என்று
ஏற்போர் என்றன் தமிழ்க் கேளிரே!
-------------------------------------------------

அறத்தமிழ், நாடு;
ஆரியம் பேசேல்;
இறைநெறி உணர்;
ஈனரை விலக்கு;
உலகத்தில் ஓங்கு;
ஊருடன் வாழ்;
எதிரியை வீழ்த்து;
ஏய்த்து உண்ணேல்;
ஐயம் கொள்ளேல்;
ஒன்றே இறை;
ஓடி ஒளியேல்:
ஒளவை சொல் கேள்;
அஃதே வாழ்க்கை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.11.2013

Wednesday, November 6, 2013

வாழ்தல் இனிது!














வாழ்தல் இனிது,உணர்வீர்;அவ்
வழக்கம் என்பது மானுடர்க்கே!
சூழ்நிலை எதிலும் வாழ்தலையே
சுவைத்திடுவீர் எம் மானுடரே!
தாழ்வதும் உயர்வதும் இவ்வுலகில்
தாங்குதல் மானுடர் கடனென்று
வாழ்தல் என்பதுதான் அறிவு;
வையக்தீர்;இதை உணர்வீரே!!

சூறாவளிபோல் சில சமயம்;
சோகமும் சுகமும் வீசுவதும்
வேறொரு சமயம் பேரமைதி
விளைந்து அதுவும் மாறுவதும்
மாறா விதிதான் என்றுணர்ந்து
மாண்புடை மக்கள் வாழ்கின்றார்;
தேறா மாக்கள்தாம் அதனைத்
தெளிவில்லாமல் உழல்கின்றார்!

அன்பும் அறனும் உயர்நெறிகள்;
அவை இல்லாகில்பெரும் தாழ்வு;
பண்பும் பயனும் அறிவோர்க்கே;
பழுதில்லாத  உயர் வாழ்வு;
என்பும் தோலும் இதன் சுகமும்
இன்பம் என்று நினைப்போர்கள்
நன்று வாழ முடியாது;ஆம்!
நன்மை,தீமை உணர்வீரே!
  
இவண் –
கிருஷ்ணன்பாலா
25.10.2011

Tuesday, November 5, 2013

தேடல்:2



‘தா’ என்று யாரிடத்தும் தாழாத மனமும்
‘சீ’என்று ஒருவரையும் சினவாத  குணமும்;
‘போ’ என்று சொன்னால் உயிர் போகின்ற நிலையும்
‘தா’வென்றே பணிந்தேன்நான்;தந்தருளென் குரு நாதனே!

தேடுகின்ற பொருட்களிலே தெளிந்த ஞானம் கொண்டும்;
தெளிந்த ஞானம் இன்னதென்று தேடுகின்ற போதும்;
வாடுகின்ற மனதில் ஒரு வாட்டம் நேரும் என்றால்;
வருத்தம் போக்க உலகிலென்ன மார்க்கம் உண்டு;சொல்க!

விதி வழியே வாழ்க்கை என்று நம்புகின்றபோது;
வேறு வேறு திட்டங்களைத் தீட்டி விதியை இங்கு
மதிவழியே காணுகின்ற மனதைக் கண்டு கொண்டு
மயங்கின்றேன்;தயங்குகின்றேன் குழப்பம் அகலவில்லை!

ஊருக்கெல்லாம் சொல்லுகின்ற அறிவுரைகள் வழியே
உண்மையாக வாழ்ந்து நிற்கும் உறுதி இங்கு தேடி
பாருக்கெல்லாம் காட்டுகின்ற  நேர்மை கொண்ட நெஞ்சம்
படைத்திடாத போதில் ஞானம் எங்கு கூடும்: சொல்வீர்?

தன்மனதை அறிந்திடாது தத்துவங்கள் சொல்லி;
தமிழை இங்கு கெடுப்பதற்கா இங்கு கூட வேண்டும்?
புன்மையான பொய்யறிவைப் போற்றிடாது இங்கு
பொய்களோடு வாழ்ந்து விட்டுப் போகும் பாதை எங்கு?

-கிருஷ்ணன்பாலா
5.11.2013


அன்பு நண்பர்காள்!


அன்பு நண்பர்காள்,

கொள்கை மொழியும் கூரிய தமிழும்
குறைகளைக் களையக் கூறும் நெறியும்
வெள்ளை மனதும் வெல்லும் நோக்கும்
விவேகம் சேர்ந்த கருத்துப் பொலிவும்
அள்ளித் தந்தாள் அன்னை வாணி;
அதில்தான் பங்கு கொள்வீராக!
தள்ளி நீங்கள் வேறு நினைப்பில்
தாலாட்டாதீர்; தமிழுக்குக் கேடு!

இவண்-
கிருஷ்ணன்பாலா
5.11.2013

வாழ்க,பாவலர், தமிழ்த்தொண்டு!

இராஜ.தியாகராஜன் அவர்களுக்கு


பாவலரே,
உங்கள் தமிழ்த்தொண்டுக்கு நான் அளிக்கும் பத்திரம் இது;
பத்திரம்.
அன்புடன் -
கிருஷ்ணன்பாலா





மேதினி ஆளும் தமிழ்த்தாய் ,பெற்ற
மேதைகள் இங்கு பலருண்டு;அவர்
சாதனை பலவும் போற்றிடத் தக்க
சங்கத் தமிழ்நூல் பலவுண்டு;அவை
யாதினும் உயர்ந்த படைப்புக் களாக
யாவரும் வியக்கும் கருவூலம்;இதில்
வேதனை,அவற்றை உணர்ந்தவர்கள்
வெளி தேசத்தார் என்ப தன்றோ?

மொழியை அறிந்து;அதனை ஆய்ந்து
மொழிவோர் இங்கு மிகக் குறைவு;
மொழியை உணர்ந்து,முன்னே நின்று
முயன்று பயில்வோர் அதில் சிலரே!
எழுதத்தெரிந்தோர் எங்கோ ,எதையோ
எதிர்பார்த் திருந்தே மொழிப் பண்பின்
வழியை விட்டே ஒதுங்கிச் சென்று,
வார்த்தை வணிகர் ஆன தென்னே?

தமிழ்த் தாய் போற்றி, தளரா திங்கு
தலை நிமிர்ந் திருக்கும் சிறு கூட்டம்
தமிழ் உலகத்தின் தேரோட்டத்தைத்
தாங்கிடும் அச்சின் நிலை போன்று!
அமிழ்தினும் இனிய தமிழின் சிறப்பை
அறிவோர் அறியத் தரும் வாழ்வு;
சுமைதான் எனினும் சுவையாய் அதனை
சொல்வோர் அவரே தமிழ்ச் செல்வர்!

செல்வர் என்ற செழும்புகழ் அவர்க்கே
சிறப்புறப் பொருந்தும்; அறிவோர் யார்?
எல்லைகள் இல்லா இலக்கிய வாழ்வின்
ஏந்தல்கள் அவரைப் போற்றுவதும்; ’அவர்
சொல்லில் பிறக்கும் சிந்தனைகள் தமிழ்ச்
சுவைஅமுதம்என ஏற்றுவதும்; நம்
இல்லற தருமம் என்றிருப் போமதை
இனிதே எவர்க்கும் எடுத் துரைப்போம்!

நன்றிதன் வழியில் நடந் திங்கு;நல்
நட்பின் மையம்  என்றி ருந்து;தமிழ்க்
குன்றின் மீதொரு விளக்காக; சுடர்
கொண்டு விளங்கிடும்  பாவலரே;புகழ்
வென்று,வாழ்விதில் சாதனை கள்
விளைந்திடக் கண்டு, பல் லாண்டு;
நின்று நற்றமிழ்ப் பெருமை எலாம்
நிதம் நாட்டிடத் தான் வாழ்த்து வனே!
இவண்-
கிருஷ்ணன்பாலா
7.12.2012

குறிப்பு:
முகநூலாளர் பாவலர் இராஜ தியாக ராஜன் அவர்களின் தமிழ்த் தொண்டு குறித்து வாழ்த்திய கவி மடல் இது.