Tuesday, December 23, 2014

நான்.....






உலகக் கல்வியில் ஊறி மகிழ்பவன்;
உதவாக் கல்வியைக் காறி உமிழ்பவன்!
கலகப் பதர்களைக் கண்டு வெறுப்பவன்;
காணும் நிகழ்வெலாம் கவிதை வடிப்பவன்!

நேர்மையும் புத்திக் கூர்மையும் கொண்டு
நிதமும் வாழும் தவநெறி எய்தவன்;
வேர்வையும் விளைச்சலும் விரோதமான
வினோதம் கண்டதை ஆய்வு செய்தவன்!

குற்ற உறவுகள் முற்றும் பிரிந்தபின்;
கூடா உறவெனக் கண்டு தெளிந்தவன்:
அற்ற குளத்தின் அருநீர்ப் பறவைகள்
ஆனபின் அவற்றால் ஞானம் விளைந்தவன்!

நன்றி கெட்டோரும் நாணம் அற்றோரும்
நயந்து பணிந்து ,நாடகம் செய்தது,
இன்றில்லைஎன்னும் தெளிவு கொண்டதில்
இனியொரு துயரம் இல்லைஎன்பவன்!

நம்பிக்கை மோசடி இன்னது என்றும்;
நரகத் துயரம் இதுதான் என்றும்
இம்மண் வாழ்வில் உணர்வித்தவர்கள்.
எனக்கொரு ஞானம் வரவைத்தவர்கள்!

குன்றில் இட்ட விளக்கென அறிவு
கொலுவிற்றிருந்து தனிமைப் பட்டாலும்
நன்றி கொண்டவர் உறவு குன்றினும்
நானதில் தலையை நிமிர்த்தி நடப்பவன்!

நல்லது அல்லது இல்லறம் இல்லை;
நன்றி கொண்டவர் நம் உறவில்லை;
சொல்வது என்றும் அற உணர்வன்றி
சொல்லும் பொருள்நம் வாய்வழி இல்லை!

உடலையும் மனதையும் வேறு வேறாக
உலகில் காட்டி ஏய்த்துப்பிழைத்தவர்;
அடைவது நரகென உணர்ந்தபின் மனதின்
உறக்கம் கலைந்ததில்வருத்தம் அடைந்தவன்!

நன்றி மிக்கதாம் நாய்களை வளர்ப்போர்
நன்றியில்லாமல் வாழ்வதை அறிவேன்;;
நாயினும் கீழாய் நடத்தை கொண்டவர்
நாய்களை வளர்க்கும் காரணம் அறியேன்!

கல்வியினாலே பட்டமும் பதவியும்
கண்டவர் அந்தோ காரணம் மறப்பவர்;
செல்வமும் சிறப்பும் எதனால் என்று
சிந்தை கொள்ளாமல் செருக்கில் இறப்பவர்!

சொல்வது பொய்யிலை; பொய்நம் சொல்லிலை!
சொன்ன சொல்எதுவும் பொய்த்ததுமில்லை;;
செல்வமே பணத்தை சேமிப்பதென்று
சிந்தை கொண்டோர்கள் அறியார் இதனை!

நான் இதன் சாட்சி; நவில்வதென் நெஞ்சம்!
நற்றமிழ் கற்றோர் ஆழ்ந்திதை உணர்வார்;
வீண் பொருள் எதையும் விளம்புதல் இன்றி
விதைக்கும் கவிதைப் பெட்டகம் இதுவே!

உலகக் கல்வியில் ஊறி மகிழ்பவன்;
உதவாக் கல்வியைக் காறி உமிழ்பவன்!
கலகப் பதர்களைக் கண்டு வெறுப்பவன்;
காணும் நிகழ்வெலாம் கவிதை வடிப்பவன்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
23.12.2014