Tuesday, January 14, 2014

பொங்கலின் பெருமை



பொங்கலின் பெருமையை உணர்ந்திங்கு
போற்றிக் கருதிக் கொண் டாடி
எங்கும் தமிழர்கள் நிமிர் நடையில்
இவ்வுல காண்டிட வாழ்த்து கின்றேன்!.

ஏருக்குப் பின்னே தான்உலகு;
ஏரில்லை என்றால் ஏதுணவு?
பாருக்கு இதனைப் பளிச்சென்று
பகன்றவன் வள்ளுவப் பெருந்தகையோன்!

பொங்கல் என்பது ஏர்உழவின்
பொய்யா நிலைக்கு அருளுகின்ற
செங்கதிர் தன்னை, நன்றியுடன்
செந்தமிழ் மக்கள் வணங்கும் விழா!

நன்றிக்கு வித்து நல்லொழுக்கம்;
நானிலத்தில் அது, நம்வழக்கம்;
என்றும் எதிலும் இம்மண்ணில்
இன்னுயிர் மேலாய்ப் போற்றுகின்றோம்!

அதனால் தமிழனின் .அடையாளம்
அகிலம் முழுதும் நிலைத்திருக்க
உதவும் காரணி பொங்கல் என
உலகம் முழுவதும் போற்றுகின்றோம்!

உழவில் லாமல் உலகில்லை;
உலகின் முதல் தொழில் விவசாயம்;
உழவன் உலகின் எஜமானன்;
உண்மை: உழவன் தமிழ்க் குடிதான்!

அறுவடை முடிவில் நோன்பெடுத்து
ஆதவன் கருணையை உலகறிய
இறை நினைவோடு வணங்குவது
என்றும் தமிழர் பண்பாடு!

தைத் திருநாளை நம்முன்னோர்
தமிழரின் சிறந்த நோன்பாக
வைத்தனர்;அதுதான் தைப்பொங்கல்;
வாழ்த்திடுவோம் இதை நெஞ்சார!
 
இவண்-
கிருஷ்ணன்பாலா
14.1.2014