Friday, November 21, 2014

குருச் சிந்தனை! (பழைய ’நாட்குறிப்பு’க் கிழிசல்கள்:2)

சித்தர் மஹான் ஸ்ரீ ராஜகிரி ஸ்வாமிகள்
மகா ஜீவ சமாதி -தை பூரட்டாதி தினம்
























குருச் சிந்தனை!

அணுவில் அணுவாய் அகலா தென்னை
ஆட்கொண் டருளும் சற்குரு நீ;என்
உணர்வில் ஊறி உருப்பெறும் கருவாய்
உளந்தனில் நின்றாய்; நின்பதம் போற்றி!              

முற்பயன் இல்லா மூடன் என்றன்
முன்வினை நீக்கிய முழுமுதற் பொருளே!
பிற்பயன் எனது நற்பயன் ஆகிடப்
பேரருள் புரிந்தது நின்பொற் பதமே!

நினைத்த பொழுதில் முன்நிற் கின்றனை;
நினையாப் பொழுதிலோ நெஞ்சாய் இருந்தனை:
தனித்த பொழுதில் தவஉணர் வாகினை;
தத்துவப் பொருள்பல புலப்பட வைத்தனை!

வழி தெரியாமல் வலித்தவன்  எனக்கு
வலியும் கலியும் நீக்கிய வழி நீ;
மொழிதெரியாமல் முனகிய ஊமையன்;
மூச்சிலும் பேச்சிலும் சரஸ்வதி மொழி நீ!

எண்ணும் எழுத்தும் நீயாய் வந்தனை;
எழுதும் பொருளில் எழும்உன் சிந்தனை;
விண்ணும் மண்ணும் விரிந்திடக் காட்டினை;
விளையும் கருணையில் விந்தைகள் பூட்டினை!

கைவசப் பொருளைக் காணாதொழித் தனை;
காணாப் பொருளை வசப்பட வைத்தனை:
’மெய்வசம் எது?’என மிரண்டவன் புத்தியில்’
மேவிய நீயே மெய்ப்பொருள் ஆகினை!

வேண்டா வாழ்வை வேண்டிய தாக்கினை;
வேண்டியநிலையை விருப்புடன் பொய்த்தனை;
தீண்டா ஞானம் தெளிவுறச் செய்தே;
திசைகள் எட்டையும் எட்டிட வைத்தனை!

உன் அருளாலே உனைநான் பற்றிட
உலகியல் வாழ்வில் எனைநான் பொய்த்திட;
என்செயலாலே உனக்கொரு பெருமை
இல்லை;எனினும் எனைநீ ஏற்றனை!

கொடுப்பவன் நீதான்: எதைநான் கொடுக்க?;
குறைகள் மட்டுமே என்னிடம் உள்ளன;
எடுப்பவன் நீதான்;எதைநான் தடுக்க?
எடுப்பதும் கொடுப்பதும் உன்னிடம் உள்ளன!

எதையும் துறக்கும் மனம்நீ தந்தனை;
எவர்க்கும் பணியாத் துணிவும் தந்தனை:
எதைநான் செய்கினும் என்னுள் இருந்தனை;
எதிர்வினை எதற்கும் ஏற்பாய் பொறுப்பினை!

என்திசை, இனிஎது? நானறி யேன்,நீ
இருக்கிற திசையே என்திசை ஆக்கு;
உன்திசை; பொன்திசை;குருதிசை,என்றே
உலகோர் உணரப் படைத்தவன் ஆக்கு!

ஆதியும் அந்தமும் இல்லா ஒருவன்
ஆக்கிய மெய்ப்பொருள்;தவப்பொருள் நீதான்;
வேதமும் மொழியும் விரிந்திடும் உலகும்
வேண்டிடும் யாவும் கேட்டருள் இன்றே!
-கிருஷ்ணன்பாலா
7.2.2002 ( நேரம்:பகல் 12.15 முதல் 2.00 மாலைவரை )

’ஸ்ரீமத் பாகவதம் ரஸாம்ருதம்’ என்ற நூலை நுணுகி நுணுகி மனம் படிக்கும் பேற்றினை அருளிய சற்குருநாதர் இப்படிக் கவிச் சிந்தனையில் தோன்றி குருச் சிந்தனையாக சுய தரிசனம் கொள்ள அருளிய நாள் இது.

எதிர் வரும் 2005க்குப் பிறகு,எனது வாழ்வில் பெரும் மாற்றங்களை உணர்ந்த மனதின் தெளிவும் ஞானத்தேடலும் இங்கே முன்கூட்டியே ஆளுமை கொண்டு விட்டதை இப்போதும் தரிசிக்கின்றேன்.
--------------------------------------------------------------------------------------

1 comment:

Shan Nalliah / GANDHIYIST said...

Great poem...Great message...!!!