Tuesday, October 26, 2010

இது தொடரும்....!





இன்பத்தில் மூழ்கி.இளமையைத் தொலைத்து
இனித்தது சில காலம் - பின்
துன்பத்தில் ஆழ்ந்து தொலைத்ததை எண்ணித்
துடித்தது சில காலம்……

நன்மையைத் தீமையைப் பிரித்தறியாமல்
நடந்தது சில காலம்-அதன்
பின்னணியில் ஓர் மடமையை உணர்ந்து
பிழைத்தது சில காலம்…

விரும்பியதெல்லாம் வெற்றிகள் ஆகிட
விளைந்து சில காலம்-அவை
அரும்பிய கனவெனத் தெளிந்தபின் மனது
அவிந்தது சிலகாலம்!

அழகிய பெண்கள் பழகிய விதத்தில்
அலைந்தது சில காலம்-அது
அழுகிடும் பொருளாய் ஆன பின்னாலே
அழுதது சில காலம்

கரும்பினித்ததுபோல் கவிதைகள் சுவைத்துக்
கனிந்தது சில காலம்-ஒரு
இரும்பும் துருவாய் ஆவதைப் பார்த்து
இளைத்தது சில காலம்!

செழுமனம் படைத்த சான்றோர் நிழலில்
சேர்ந்தது சில காலம்-பயன்
முழுதென வரும்முன் ஊழ்வினை தடுத்து
முறிந்தது சில காலம்!

இழிநிலை கொண்டோர் உறவினில் இரங்கி
இணைந்தது சில காலம்-வீண்
பழிகளில் சூழ்ந்து வழிதெரியாமல்
பதைத்தது சில காலம்!

நிரம்பிய அறத்தில் இருப்பதை இரைத்து
நிமிர்ந்தது சில காலம்-புகழ்
வரம்பினில் வாழ்க்கைச் சுமைகளை ஏற்று
வளைந்தது சில காலம்!

தாய்போல் பேயரைத் தாங்கித் திரிந்து
தாழ்ந்தது சில காலம்-தினம்
ஓய்வில்லாமல் உழைத்துடல் இளைத்து
ஓய்ந்தது சில காலம்!

கருமே கங்கள் கலைவது போல்துயர்
கலைந்தது சில காலம்-அட!
நிரந்தரம் என்று நம்பிய சுகமும்
நிலைத்தது சில காலம்

நிகழ்வதும் மறைவதும் சிருஷ்டியின் நிஜமாய்
நிலைப்பது நிகழ்காலம்-இதை
அகழ்ந்து ணராமல் சுகங்களைத் தேடி
அலைவது அலங் கோலம்!

சென்றவை யாவும் செலவினம் ஆக்கி
சிந்தையைச் செதுக்கு கின்றேன் - அதில்
நின்றவை நினைவின் நிஜமென வடித்து
நிம்மதி ஒதுக்கு கின்றேன்!

இன்றதில் வென்றேன்;நேற்றதில் தோற்றேன்;
இரண்டும் எனதில்லை-நான்
நின்றதை எண்ணி எழுதுகின்றேன்;பல
நினைவுகள்....முடிவில்லை….

-கிருஷ்ணன் பாலா-

Thursday, October 21, 2010

அடடா,அந்த நிலை!

சிந்தனை லயத்தில் சிக்கிய நிலையில்
சிலிர்த் தெழுகின்றது என்மனது:
எந்த நிலையினில்இருந்தது என்பதை
எண்ணிச் சொல்வதில் இது சிறிது!

புகைப்படம் போல முகப்படம் ஆகிப்
புதிதாய்ப் பதிக்கும் கவிதை;நல்ல 
தொகுப்பெனத் தோன்றும் படித்து பாரும்;
தூண்டும்; உங்களைத் தாண்டும்!

எழுத நினைத்தேன்;எழுதுகின்றேன்:
எழுதும் நிலையைத் தழுவுகின்றேன்;
தழுவும் நிலையில் நானிருக்கும்
தனிநிலை தன்னை  எழுதுகின்றேன்!

எழுதுதல் எனக்கு மிக இயல்பு:
எதையும் எழுதுதல் அதில் எளிது!
பழுதில்லாமல் வார்த்தைகளைப்
படைக்கும் ஆற்றல் தினம் புதிது!

பேனாத் திறந்தால் பெருங்கடலின்
பேரலை போல்எழும் சிந்தனைகள்;
ஆனால், அவற்றை ஒரு நொடியில்
அடக்கிடத் துடிக்கும் கற்பனைகள்...

கண்ணை மூடிக் கண் திறந்தால்
கவிதைச் சந்தம் பல நூறு:
விண்ணில் இருந்து விழுகின்றன;
விரைந்து என்னுள் பலவாறு!

எதுகை,மோனை என்பதெல்லாம்
என்முன் தவமாய்த் தவமிருக்க
எதை நான் எடுத்துக் கையாள?
எனக்குள் பெரிய போராட்டம்!

விதையில்லாமல் முளைக்கின்றது;
வித்தில்லாமல் விளைகின்றது;
வதையில்லாமல் வதைக்கின்றது;
வரவேற்பின்றி நுழைகின்றது!'

சாதாரணமாய்க் கடிதம்' எனச்
சற்றே எழுத நினைத்தாலும்
தோதாய் எதுகை,மோனைகளைத்
துரத்தித் துரத்தித் தருகின்றது!

உரைநடை வேகம் எங்கெங்கோ
உயரப் பறந்து கவி வானில்
வரைமுறை இன்றி உவமைகளை
வாரிக் கொண்டு பொழிகின்றது!

இயைபுத் தொடருள் என் கையோ
எனைக் கேட்காமல் நுழைகின்றது;
சுய மரியாதை என்பதெல்லாம்
சூக்கும அறிவாய் விரிகின்றது!

எழுத முனைந்ததும் இவ்வுலகம்
ஏனோ என்முன் மறைகின்றது;
முழுமனம் எங்கோ செல்கின்றது:
மூடருக் கெங்கிது புரிகின்றது?

எழுதும் போதொரு ராஜ சபை
என்னுள் கூடி,என் எழுத்தைத்
தொழுது போற்றி வாழ்த்துவதை
தூர நின்றே ரசிக்கின்றேன்!

அடடா,இதுதான்: கவிதை நிலை;
அதைத்தான் மனது அடைகிறது;
‘எடடா,ஏட்டை;எடுத் தெழுது’
என்றே கட்டளை  இடுகிறது!

கட்டுத்தறியை அவிழ்த்ததுபோல்
கவிதை உணர்வில் மனக் கன்று
எட்டுத் திசையும் குதிக்குது பார்:
என்னைப் பிடிப்பார் எவர் உண்டு?

இவண்-
கிருஷ்ணன்பாலா
10.08.2010 / 07:30 pm 

Tuesday, October 19, 2010

நிழலின் நிஜங்கள்!

ஒரு நிஜமான நிழலின் கற்பனைகள் 
 • 

நான் யார்?

கற்பனையின் நிழலா?
நிழலின் கற்பனையா?
கனவுகளின் நிஜமா?
நிஜமான கனவா?
நான் யார்?
தூங்கிக் கொண்டிருக்கும்
 
ஒருவனா?;
விழித்துக் கொண்டிருக்கும்
 
ஒருவனா?

இந்த உலகம்;
இதன் வாழ்க்கை....
என்பதெல்லாம்,
கனவுகளா? நனவுகளா?

கனவுகள் என்றால்,
கனவுகளில்
விழித்துக் கொண்டிருக்கும்
நான் யார்?

நனவுகள் என்றால்
நனவுகளில்
 
கனவு கண்டு கொண்டிருக்கும்
 
நான் யார்?

நீண்ட பெரும் கனவின்
ஓர் அங்கம்தான்
 
எனது விழிப்பா?

அந்த விழிப்பின்
அத்தியாயங்கள்
இரவும் பகலுமா?

இதில்
 
நான் தூங்கி எழுந்தேனா?
 
எழுந்தபின் தூங்குகிறேனா?

கனவுகள் மூலம் 
இந்த உலகத்தைக் காண்கிறேனா?
இந்த உலகத்தின் மூலம்
 
கனவுகள் காண்கிறேனா?

நான் தூங்கினால்-
என்னோடு
இந்த உலகமும் தூங்கி விடுகிறது;

நான் எழுந்தால்-
என்னோடு
 
இந்த உலகமும் எழுகிறது!
 

இதோ:
என் முன்-
ஜீவராசிகள் எனும் பிம்பங்கள்.....

அவற்றின் இடையே-
நிறபேதங்கள்; இனபேதங்கள்;
அசைவன;அசையாதிருப்பன;
தெரிவன;தெரியாதிருப்பன…….

இவை எல்லாம்
எதனுடைய அங்கங்கள்?

என்னுள்ளிருந்தே
இவையனைத்தும் தோன்றுகின்றன!

எனது விழிகளால்
பார்க்கிறேன்;
எனது செவிகளால்
 
கேட்கிறேன்!

நானே தேடுகிறேன்;
நானே உண்கிறேன்!

அழுவதும் சிரிப்பதும்
ஆனந்திப்பதும் துயர்ப்படுவதும்
எண்ணுவதும் எண்ணாதிருப்பதும்
எல்லாம் நானே….

நான்எங்கிருந்து வந்தேன்?’
என்பது
 
எனக்குத் தெரியாது…….

தாயின் கருவறை
என்று சொன்னால்….
அந்தத் தாயின் கருவறை
 
எங்கிருந்து வந்தது?

கண்ணுக்குத் தெரிந்திராத
காற்றை
ரப்பர் பை ஒன்றில்
ஊதி அடைத்ததைப் போல்
உருவமாய் வந்த
நான்எனும் மூலம் எது?

நான்
என்பதன் நோக்கம் என்ன?

நான்விரும்பாமல்
வந்த-
இந்த வாழ்க்கை…..

இப்போது-
ஏன்
என்னை விலகுகிறது?
அல்லது விலக்குகிறது?

என்னைச் சுற்றியே
இந்த உலகம் இயங்குகிறது

நான்……
அந்த இயக்கத்தின் அச்சு:

காலச்சக்கரத்தின் சுழற்சியில்
அதன் அச்சு முறிந்தபின்னும்
சுழற்சி நிற்பதில்லை……

ஆரம்பம் எது?
என்பது தெரியாமல்
முடிவும் அறிவிக்கப்படாமல்
முடிந்து விடுகிற
எனது இயக்கத்தில்
கதா பாத்திரமாகிற
நான்யார்?

ஒரு நாள்-
இந்த உலகத்தை நானும்
இந்த உலகம் என்னையும்
கை விட்டு விடுவதற்காக….

இன்று-
இந்த உலகமும் நானும்
கை கோர்த்துக் கொண்டு
கையொப்பம் இடுகிற
 
காட்சி அரங்கேறுகிறது!

இந்த அரங்கேற்றத்தின்
கதா நாயகனான
 
நான்யார்?

ஆம்!
புறப்பட்ட இடம்
புரியாமல் புறப்பட்டுக் கொண்டும்
போகும் இடம்
 
தெரியாமல் போய்க் கொண்டும் இருக்கின்ற,
ஓர்-
வழிப் போக்கன்;

பிறருக்கு-
 
வழி காட்டிக் கொண்டே
வழி தெரியாமல்
 
நின்று தவிக்கும் வழிகாட்டி;

குழப்பங்களை
ஒழிப்பதற்காகவே,
குழம்பிக் கொண்டிருக்கின்ற
கொள்கைவாதி;

ஓய்வு பெறுவதற்காக,
ஓய்வின்றி
உழைத்துக் கொண்டிருக்கின்ற
 
உழைப்பாளி;

குனிந்திருந்தவர்களை
 
நிமிரச் செய்து
தலை குனிந்து போன
உபதேசி;
அரண்மனை இல்லாத அரசன்;

பாமரமாய்-
பட்டொளி வீசிக்கொண்டிருக்கும் பாமரம்”;

நிரந்தரமற்ற நிறந்தரம்;
பேசத் தெரிந்த ஊமை;
விலாசமுள்ள அநாதை;
பொய்யான மெய்யன்;
புழுங்கிக் கொண்டிருக்கின்ற விசிறி;

இருந்தும்,
இல்லைஎன்று பொருளுரைக்கும்
அருஞ்சொல் பதம்;

இருட்டைக் கவசமாக்கி
எரிந்து கொண்டிருக்கும்
அகல் விளக்கு!

இரவின் விடியலுக்கும்;
விடியலின் முடிவுக்கும்
விளக்கம் தரும்
முற்றுப் புள்ளி.

-கிருஷ்ணன் பாலா-
1994 கல்கி தீபாவளி மலரில் பிரசுரம் ஆன கவிதை இது

Sunday, October 17, 2010

கவியரசு கண்ணதாசன் நினைவு போற்றி!

இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள்.ஞானத்தோடு கவிதை இலக்கியம் படைத்துத் தமிழுக்குப் புத்துரையும் வழங்கிய அவரது  நினைவு போற்றி ஒரு கவிதை இங்கே:













ம்பனையும் கவிகாளி தாசனையும்
கண்டதில்லை என்றாலும்நாமெல்லோரும்
நம்பும்படி நாவளமும் பாவளமும்
நலமார்ந்த சொல்வளத்தால் கூட்டியிங்கு
செம்மார்ந்த சிந்தனைகள் படைக்க ஒரு
செட்டிமகனாக வந்த கண்ணதாசன்!
நம்மை விட்டகன்றாலும்;அவனை இன்று
நினைக்கின்றோம்;நிகரில்லாக் கவியரசாய்!

சித்தர்களும் முத்தர்களும் அன்று சொன்ன
செந்தமிழின் பாடல்களை நம்எல்லோர்க்கும்
தத்துவமாய்,எளிய தமிழ்ப் பாட்டுக்களாய்
தந்ததொரு தனிக் கவிதைப் பேராசான்;
இத்தரையில் ஒருவன் என வாழுகின்றான்;
இவன்நிகர்த்த கவிஞனை நான் கண்டதில்லை!
அத்தகைய வித்தகனை;அறிஞர் போற்றும்
அமரகவி ஆனவனை நினைக் கின்றேனே!

போதையில் கீதையைச் சொல்லினும்
கீதையின் போதையைத் தந்தவன்;
மேதையர் போற்றுமோர் மேதையாய்
மேன்மைத் தமிழ்க் கவி ஆனவன்!
போதையில் வாழ்ந்தவன் ஆயினும்;தன்
புத்தியை நேர்மையில் வைத்தவன்;
காதலில் தனித் திறம் மிக்கதோர்
காவியப் பாடல்கள் புனைந்தவன்!

அர்த்தமுள்ள இந்து மதம்என்பதோர்
அறிஞரும் வறிஞரும் மயங்கிடும்
அர்த்தம் உள்ள நீதிகள் சாற்றிடும் 
அறத் தமிழ் வடித்த தொரு அறிஞன்;
கர்த்தரைப் போற்றிடும் மேன்மையில்
கற்றவர் வியந்திடும் ஏசுவின்
சரித்திரம் சொன்னதில் முன்னவன்;
சாவிலாச் சரித்திரம் ஆனவன்!

இவன்போன்று உண்மைகளைச் சொல்லியிங்கு
ஏடெடுத்து எழுதியவர் எவருமில்லை!
அவன்போல எளியதமிழ்ச் சொல்லெடுத்து
அற்புதம் செய்தவர்  நிகருமில்லை!
தவறுகளை எதிர்த்தெழுதும் தைரியத்தை
தனக்குரிமை கொண்டானை இந்த நாளில்
கவலையுடன் நினைக்கின்றோம்;கவியரசைக்
கண்கலங்கி எண்ணுகிறோம்;நண்பர்களே!

கண்டபடி பாட்டெழுதி,காசு பண்ணிக்
காவியத்தின் நாயகனாய்க் காட்டிக் கொண்டு
மண்டியிட்டு,ஆள்வோர்க்குலாலிபாடி
மானமின்றிக் ‘கவியரசுஎன்று சொல்லி
முண்டமெனப் பலர் வாழும் நிலையில்;ஒரு
முழு ஞானக் கவித் திறனைக் கொண்டு புகழ்
கண்டவர்தான் கவியரசு கண்ணதாசன்!
கண்களில் நீர்பெருகக் காண்கின்றேனே!

சொல்லழகு,பொருளழகு,படைப்புத் தோறும்
சுவைமிகுந்த எழுத்துக்கள்,கவிதை என்று
எல்லையறு தத்துவத்தை எடுத்துரைத்து
எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும்
வல்லமையைப் பெற்றிருந்த,கவியரசே!
வணங்குகின்றேன்,உனை இந்த  நாளில்;
இல்லை;உனை நிகர்த் தெவரும் இல்லை;
இருப்பவர்கள் எல்லோரும் சிறுவரன்றோ?

இவண்-
கிருஷ்ணன் பாலா
17.10.2010

Saturday, October 16, 2010

வாணீ - வா,நீ!

இன்று,ஆயுத பூஜை நாள்!

தீதிலன்,உலகில் யானோர்
தெளிவுளன் நினதருளாலே;
யாதெனை வெல்லும்?;உன்னை
யாசித்தேன்; இன்று,இப்போது
ஓதிடும் உன்றன் நாமம்
ஒளிர்செயக் கண்டேன்;வாணீ,
சோதியே வருக என்னுள்
சுடர்க,இவ்வுல கெல்லாமே!

இவண்-
கிருஷ்ணன் பாலா / இரவு -  09:18

நானெது செயினும்...

நானெது  செயினும்;விளையும்
நன்மை,தீங் கெவைஎன் றாலும்
‘ஆனதுன் அருள் என்றே’நான்
அகம்தனில் நிலைகொள் வேன்;நீ
தான்என் உணர்வுடன்  நின்று
‘தயவுடன் காக்க வேண்டும்!’
வானவர் போற்றும் ஞான
வள்ளலே.கேட்கின் றாயா?

எமக்குத் தொழில் கவிதை!

ஊனெடுத்துப் பிறந்த பின்பு
ஓய்ந்து விழும் நாள் வரைக்கும்
நானெடுத்து நடிக் கின்ற
நாடகத்தின்,பாத்திரத்தைத்
தானுரைக்கும் கவிதை இவை;
தருகின் றேன்,நண்பர்களே!
‘யானுளநாள் வரை’,இவற்றை
யாத்திடுவேன்;ஏற்றுணர்க!


இவண்-
கிருஷ்ணன்பாலா
16.10.201

Friday, October 15, 2010

வல்லோய் நீ,என் வழித்துணை!

          









செல்லும் காரியம் யாவும்;இங்கு
வெல்லும் படிநீ,அருள்வாய்;
சொல்லும் செயலும் ஒன்றாய்க் காணும்
சுகம்அதில் மலர்ந்திடச் செய்வாய்;
அல்லும்பகலும் உனையே பேணும்
அகமே இணைந்திடக் கனிவாய்;
வல்லோய் நீ என் வழித்துணையாக
வாழ்நாள் எல்லாம் வருவாய்!

(படம்: குருநாதர் ஸ்ரீ ராஜகிரி  ஸ்வாமி சமாதிக் கருவறை)

தா....












குருவே தாணுமா லயன் ஆகும்;
குருவேதான் என் பெற்றவர் ஆகும்;
குருவேதான் என் குரவனும் ஆகும்;
குருவேதான் நான் நினைப்பதும் ஆமே!

’தா’வென்று யாரிடமும்
தாழாத மனமும்
’சீ’ என்று ஒருவரையும்
சினவாத குணமும்
‘போ’என்று சொன்னால்உயிர்
போகின்ற நிலையும்
‘தா’வென்று பணிந்தேன்;
தருவாய்என் குருநாதனே!

Thursday, October 14, 2010

முழுமுதற் சரணம்!

                                                     























பூதம் ஐந்தையும் பூட்டிய கரத்துளன்;
வேதம் நான்கையும் வெளித்தரும் வடிவினன்:
ஓதும் முதற்பொருள் ஆனவி நாயகன்;
பாதம் பணிந்துளம் பற்றுகின் றோமே!

எண்ணும்காரியம் யாவும் வெற்றி
பண்ணும் படியே அருள்க;உன்னை
நண்ணும் மனமே தந்தருள்;இந்த
மண்ணுயிர்க் கெல்லாம் முதலே!

மறுமையைத் தடுக்கும்;ஞானம்
மலர்ந்திடும்;மணக்கும்;மனிதப்
பிறவியின் பெருமை எல்லாம்
பேசிட வைக்கும்;வாழ்வின் -

வறுமையைப் போக்கும்;உலகம்
வணங்கிடச் செய்யும்,மேலோர்
உறவினில் வைத்தே,நம்மை
உய்விக்கும் வேழம் போற்றி!

அறநெறி திகழ்ந்திடும் வாழ்வு;
அதில் உனைத் தொழுவதுதானே?
முறைபட உணர்ந்தவன்,நானே
முழுவதும் சரண் அடைந்தேனே!                                        

கணபதி தாள்பணிந் துள்ளம்;                                                          
களிமிகக் கொள்வது காண்பீர்;                                                          
குணம்மிகும் அவனருள் வேண்டி;
கும்பிடு வோர்க் கிது வாழ்வே!



இவண்,
கிருஷ்ணன்பாலா 
14.10.2010