Saturday, March 24, 2012

ஞானமே வா.


என்னை இந்த உலகிடையே
இட்டவன் யார் என்பதை
முன்அறிந்து சொல்பவர்யார்?கேட்கிறேன்-அதை
மொழியும்வரை முளைப்பதில்லை ஞானம்!

ஒத்தையடிப் பாதையில்
ஒற்றைமர நிழலிலே
’நத்தி நின்றால் போதும்’ என்று யாரும் - நின்று 
நம்புவதால் வருவதில்லை ஞானம்!

பத்தினியாய் இருப்பவள்தன்
பதியினோடு வாழ்ந்திடில்
எத்தனைதான் சுகம் இருந்த போதிலும் - அதில்
எட்டிவந்து சேர்வதில்லை ஞானம்!

வெட்டுப்பட்ட புண்ணிலும்
விம்மி நிற்கும் சதையிலும்
கட்டுப்பட்டுப் போகும் இந்தக் காயம் - அது
கசக்கும்வரை காண்பதில்லை ஞானம்!

கட்டளையை இட்டு உனைக்
கட்டிப் போடும் ஆசைகள்
சுட்ட பின்னர் தெரிந்திருக்கும் பாடம் - அதன்
சுவை மறந்தால் சுடுவதில்லை ஞானம்!

பட்டணத்து வாழ்க்கையில்
பட்டினத்தார் பார்வையில்
ஒட்டிக் கொண்டு இருப்பதில்லை யாரும் -அந்த
உறவுகளில் தெரிவதில்லை ஞானம்!

காதல் என்று காமத்தை
ஓதி நின்று பேசினால்
நீதி என்று ஆவதில்லை, பாரும்! - அந்த
நெஞ்சத்திலே நெகிழ்வதில்லை ஞானம்!

அப்பனோடு அம்மையை
அப்பி வைத்த காமத்தைத்
தப்பி வந்து பார்ப்பவர்க்கே தோணும் -அது
தழைக்கும்வரை முளைப்பதில்லை ஞானம்!
                                          
ஞானம் பெற்ற புத்தனும்
ஞானம் அற்ற பித்தனும்
ஞானியர்க்கு ஒன்றுதானே ஆகணும்? - இதை
அறிந்திடாமல் புரிவதில்லை ஞானம்! 

தேடும்,
கிருஷ்ணன்பாலா
24.3.2012

Thursday, March 22, 2012

மகா லட்சுமிக்கு வாழ்த்து!


தந்தை முத்துக்குமரன் - குழந்தை மகாலட்சுமி - தாய் ஷாலினி
புகைப் படம் : சரவணன்                         


கூடுகட்டி வாழ்ந்த வாழ்வு குலைந்தவிட்ட போதிலும்
கூடுகின்ற நட்பினோடு குறையில்லாமல் நடக்கிறேன்;
தேடிவந்த சொந்தம் நூறு;திசைகள்தோறும் இருப்பினும்,
தெய்வமனம் திகழும் அன்பைச் சிலரிடத்தில் காண்கிறேன்!

கேடுகெட்ட உறவினோடு கீர்த்தி குன்றி வாழ்வதைக்
கிழித்தெறிந்து போட்டுவிட்டுத் தெருவழியே நடந்தவன்;
நாடுகின்ற பாதை எங்கும் வேடமிட்ட விலங்குகள்;
நானறிந்து விட்டொழித்துத் தனி வழியில் கடந்தவன்!

குன்றுபோல உயர்ந்து நின்று கோபுரமாய் வாழ்வதைக்
கொன்றுவிட்டு குப்பை மேட்டில் ‘நன்று’ என்று வாழ்வதும்;
நன்றிகொன்று தின்றுயிர்த்து நாய்களையே வளர்ப்பதும்
நாட்டிலிங்கு கண்டு நானும் அனுபவித்துச் சொல்கிறேன்:

எவரிடத்தும் உறவு இன்றி;பகையும் இன்றி வாழ்வதை
இதயம் வைத்து என்வழியில் தனிமையோடு நடந்தவன்;
தவற விட்ட அன்பு,பாசம் அத்தனையும் ஒன்றெனத்
தாங்கி வந்து ஒட்டிக் கொண்ட தத்தை மகாலட்சுமி

முத்துக்குமரன்-ஷாலினிக்கு முகிழ்த்து.அறிவுச் செல்வமாய்
முன்னிருந்து எனது அன்பை ஆளுகின்றாள்;நெகிழ்கிறேன்!
வித்தையுள்ள பேச்சுரைத்து நெஞ்சைக் கொள்ளை கொள்பவள்;
விளைந்தஆண்டு நான்கில் வாழ்த்துக் கவிதைகூறி மகிழ்கிறேன்!

முத்துப்போல விளந்து நல்ல வைரமென்று வாழவும்
முன் எவர்க்கும் நின்றுதவி உலகை அன்பில் ஆளவும்;
சொத்து சுகம் அத்தனையும் வரவு கொண்டு காணவும்;
சொந்த பந்தம் யாவும் ’இவள் சொந்தம்’என்று கூறவும்

நீண்ட ஆயுள் நிறைந்த வாழ்வு;நிகரில்லாத கல்வியில்
நிமிர்ந்திருந்து நாட்டில் நல்ல புதல்வி என்று ஆகவும்
ஆண்டவனை வேண்டி இன்று அகம் நினைந்து வாழ்த்தினேன்;
அன்புமிக்க நண்பரெலாம் அவளை வாழ்த்த வேண்டினேன்!

வாழ்த்தும்-
கிருஷ்ணன்பாலா
21.3.2012

Friday, February 17, 2012

உள்ளத்தில் உள்ளது கவிதை!

"நேர்மையோ டிருத்தல்;நாளும்
நேர்வழி நடத்தல்;புத்திக்
கூர்மையோ டுழைத்தல்; எங்கும்
பொய்ம்மையை எதிர்த்து நிற்றல்”

இவை என்றன் கொள்கையாக
இறை எனைப் படைத்த தாலே;
அவை என்றன் கவிதை  என்று
அளிக்கின்றேன்;உணர்வ தாரோ?

இவண்-
கிருஷ்ணன்பாலா
17.2.2012

Tuesday, February 14, 2012

காதலை அறிவீர்!

’காதலோ காதல்’ என்று
கடைவிரித் திந்த நாளில்
ஓதுவா ரெல்லாம்; காதல்
உண்மையை அறிந்து; தூய
காதலைச் சொல்வ தில்லை;
களங்கமும் உணர்வ தில்லை:
ஆதலால் அவர்கள் இங்கு
அறியவே எழுது கின்றேன்:

ஆதிநாள் அவ்வை சொன்ன
அதன் பொருள்;இருபா லர்கள்
காதலில் ஒன்று பட்டுக்
காண்பதே இன்பம் ஆகும்!
காதலின் களவை, கற்பை
காமத்துப் பாலில் அய்யன்
ஓதிய பண்பைப் போன்று
உலகிடை யாரே காண்பர்?

சீதையைத் தமிழில் காட்டிச்
செதுக்கிய கம்பன் சொன்ன
காதலின் நுட்பம் எல்லாம்
காண்பதே தமிழ்ப் பண்பாடு!
மீதியை இளங்கோ,சாத்தன்
மென்மையாய் வடித்து இந்த
மேதினி தன்னில் காதல்
மேன்மையைச் சொன்னா ரென்பேன்!
  
காதலைக் குயில் பாட்டென்றும்
கண்ணம்மா மீதில் என்றும்
ஓதினான் பாரதி;பின்னர்
உயர்தனி எளிய நடையில்
போதையில் புலமை மிஞ்சப்
புகழ்ந்தவன் கண்ண தாசன்!
காதலை இவர்கள் வழியே
காண்கிலார் மூடர் என்பேன்!


பருவத்தில் வீழ்ந்து நட்புப்
பழகுவோர் காதல் எல்லாம்
அருகுபோல் கருகிப் போகும்;
அதன் வழி அன்பு சாகும்!
உருவமும் கெட்டு உண்மை
உள்ளமும் பட்டு,பகைமை
பெருகிடும் பாதை ஒன்றே
பெருந்துயர் சேர்வ தாகும்!

கண்டதும் காதல்;பருவக்
காமத்தில் மூழ்கி.நெஞ்சம்
கொண்டதே நட்பு;அறிவு
குறுகிட உணர்ச்சி பொங்க
பண்டைநாள் பெருமை சாக
பாழ்பட நின்று, இந்தப்
பெண்டுகள்,ஆண்கள் ஒன்றாய்ப்
பிணைவதில் காதல் இல்லை!
                       
ஒருவருக் கொருவர்;உள்ளம்
உருகிய வாறு பழகி;
பெரியவர்;பெற்றோர் ஏற்கப்
பிழையிலா நட்புக் கொண்டு
இருவுடல் ஓருயிர் ஆகி
இல்லறம் காணும்;வாழ்வைத்
தருவதே காதல் என்று
தமிழரின் பண்பு சொல்லும்! 

அஞ்சிலே அரும்பும் காதல்;
அன்னையின் மேன்மை கூறும்;
பிஞ்சிலே பழுக்கும் காதல்;
பிழைபட வைக்கும்;உண்மை!;
நெஞ்சிலே அரும்பித் தூய
நினைவிலே விளையும் காதல்
எஞ்சிடும் வாழ்நாள் வரைக்கும்
எச்சமாய் நின்று வாழும்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.2.2012

Thursday, January 26, 2012

வாழ்க,இந்தியக் குடியரசு!

















நண்பர்களே.
இந்தச் சிறுவன் இப்படிச் சொல்கிறான்:

“இந்திய தேசியத்தை
விற்றுப் பிழைக்கும்
சீமான்கள் பட்டியல்
உலகத் தர வரிசையில்
முதலிடம் பெற்று வருதுன்னு
சொல்றாங்க...

இதெல்லாம் எனக்குத் தெரியாது...

அதுல...
’நீங்கள் எல்லாம்
ரொம்ப ஆர்வத்தோட
சிந்தனை செஞ்சு வர்றது’
மட்டும்
எனக்குத் தெரியும்!

ஆனா...
நாங்க இந்த நாளில்தான்
நம்ம தேசியக் கொடியை
விற்றுப் பிழைக்கிறோம்!

எங்க பக்கம்
கடைக் கண் பார்வையைக்
காட்டறவங்க எத்தனை பேர்?
இன்னிக்குப் பார்க்கப் போறேன்!”

26.1.2012