Thursday, April 9, 2015

ஜெய ஜெய காந்தன்!


பொது உடமைப் பூங்காவில் புகுந்த புயல்;
பூந்தென்றல் போலிங்கு பொலிந்ததுண்டு;
புதுமைமிகும் எழுத்தாளும் புதுமைப்பித்தன்
போலவொரு வடிவத்தைக் கண்டதுண்டு;

பாரதியின் நேர்முகமாய் நின்றதுண்டு
பலகாலும் புகைபிடித்துக் கொண்டதுண்டு;
நேர்மைமிகும் நிஜமான சிந்தனையில்
நிலைத்திருந்த வடிவத்தைச் சொல்லுகின்றேன்!

நேர் இருந்து இவரோடு கலந்து பேசி
நிறைவான நட்பை நான் உணர்ந்ததுண்டு;
யார் இவர்க்கு ஒப்பாக முடியும்? என்று
எண்ணியெண்ணிப் பெருமையுடன் நிமிர்ந்ததுண்டு!

கூர்மைதிகழ் எழுத்துக்கள் உருவாகும்
கொஞ்சுதமிழ்ப் பட்டறையின் கொள்கைக்காரன்;
சீர்படுத்தும் சமுதாயக் கதைகள் எல்லாம்
செம்மாந்த நடை மிடுக்கில் சொக்க வைத்தான்!

இவருக்கு நிகராக எவரும் இங்கு
இதுவரையில் பிறக்கவில்லை;பிறந்தால்கூட
இவர்போல எழுதுகின்ற அறிவு கொண்டு
இருப்பாரோ,அறியோம்; நாம் உண்மைதானே?

வரிப் புலிக்கு நிகராக வரித்துக் கொண்டு
வாய் திறக்கும் பூனையெலாம் புலிகள் ஆமோ?
கரிக்குதவாக் கட்டைஎலாம் காய்ந்து காய்ந்து
கடை விரித்த போதும் அவை விலை போகாதே?

எழுத்தாளன் என்கின்ற இலக்கணத்தின்
எழுத்தாளர் யார்? என்று தேடுகின்றேன்:
கொழுப்பெடுத்துப் பலரிங்கு எழுதுகின்றார்;
குறைமதியை நிறைமதிபோல் காட்டுகின்றார்!

எவருக்கென் ஜே.கே.வின் கர்வம் உண்டு?
எவர்இந்த உரைநடைக்கு உயர்வு தந்தார்?
எவருக்கு ஜெயகாந்தன் தோற்றம் உண்டு?
எவர் இவர்போல் துணிவோடு நின்றதுண்டு?

ஜெயகாந்தன் எழுத்துக்கள் இலக்கியத்தின்
செறிவான உரைநடைக்குச் சிகரம் என்றும் ;
நயம்மிக்க தமிழ் படைப்பின் மகுடம் என்றும்
நவிலாத வாசகர்கள் உலகில் உண்டோ?  

வறுமைக்கு எழுதாமல் வாழ்க்கையதன்
வளமார்ந்த சிந்தனைக்கு எழுத்தை ஈந்து;
மறுமைக்கும் இம்மைக்கும் அழியாப் புகழை
மலைபோலக் குவித்திங்கு வாழ்ந்து சென்றான்!

எப்போதும் சிந்தனையில் செழித்த முகம்
சிங்கம் போல் ஏறுநடை பயிலும் நேர்த்தி;
தப்பாமல் மானுடத்தை வெல்லும் நோக்கம்;
தவறாத கர்வத்தில் தழைத்த தோற்றம்!

இப்போது நினைத்தாலும் ஜே.கே என்று
இறுமாப்பு விளைவிக்கும் எழுத்து வேந்தன்;
எப்போதும் இலக்கியத்தின் உச்சம் நின்று
இணையற்ற ஜெயகாந்தன் வாழுகின்றார்!

இவண்-
கிருஷ்ணன்பாலா

9.4.2015

Tuesday, December 23, 2014

நான்.....


உலகக் கல்வியில் ஊறி மகிழ்பவன்;
உதவாக் கல்வியைக் காறி உமிழ்பவன்!
கலகப் பதர்களைக் கண்டு வெறுப்பவன்;
காணும் நிகழ்வெலாம் கவிதை வடிப்பவன்!

நேர்மையும் புத்திக் கூர்மையும் கொண்டு
நிதமும் வாழும் தவநெறி எய்தவன்;
வேர்வையும் விளைச்சலும் விரோதமான
வினோதம் கண்டதை ஆய்வு செய்தவன்!

குற்ற உறவுகள் முற்றும் பிரிந்தபின்;
கூடா உறவெனக் கண்டு தெளிந்தவன்:
அற்ற குளத்தின் அருநீர்ப் பறவைகள்
ஆனபின் அவற்றால் ஞானம் விளைந்தவன்!

நன்றி கெட்டோரும் நாணம் அற்றோரும்
நயந்து பணிந்து ,நாடகம் செய்தது,
இன்றில்லைஎன்னும் தெளிவு கொண்டதில்
இனியொரு துயரம் இல்லைஎன்பவன்!

நம்பிக்கை மோசடி இன்னது என்றும்;
நரகத் துயரம் இதுதான் என்றும்
இம்மண் வாழ்வில் உணர்வித்தவர்கள்.
எனக்கொரு ஞானம் வரவைத்தவர்கள்!

குன்றில் இட்ட விளக்கென அறிவு
கொலுவிற்றிருந்து தனிமைப் பட்டாலும்
நன்றி கொண்டவர் உறவு குன்றினும்
நானதில் தலையை நிமிர்த்தி நடப்பவன்!

நல்லது அல்லது இல்லறம் இல்லை;
நன்றி கொண்டவர் நம் உறவில்லை;
சொல்வது என்றும் அற உணர்வன்றி
சொல்லும் பொருள்நம் வாய்வழி இல்லை!

உடலையும் மனதையும் வேறு வேறாக
உலகில் காட்டி ஏய்த்துப்பிழைத்தவர்;
அடைவது நரகென உணர்ந்தபின் மனதின்
உறக்கம் கலைந்ததில்வருத்தம் அடைந்தவன்!

நன்றி மிக்கதாம் நாய்களை வளர்ப்போர்
நன்றியில்லாமல் வாழ்வதை அறிவேன்;;
நாயினும் கீழாய் நடத்தை கொண்டவர்
நாய்களை வளர்க்கும் காரணம் அறியேன்!

கல்வியினாலே பட்டமும் பதவியும்
கண்டவர் அந்தோ காரணம் மறப்பவர்;
செல்வமும் சிறப்பும் எதனால் என்று
சிந்தை கொள்ளாமல் செருக்கில் இறப்பவர்!

சொல்வது பொய்யிலை; பொய்நம் சொல்லிலை!
சொன்ன சொல்எதுவும் பொய்த்ததுமில்லை;;
செல்வமே பணத்தை சேமிப்பதென்று
சிந்தை கொண்டோர்கள் அறியார் இதனை!

நான் இதன் சாட்சி; நவில்வதென் நெஞ்சம்!
நற்றமிழ் கற்றோர் ஆழ்ந்திதை உணர்வார்;
வீண் பொருள் எதையும் விளம்புதல் இன்றி
விதைக்கும் கவிதைப் பெட்டகம் இதுவே!

உலகக் கல்வியில் ஊறி மகிழ்பவன்;
உதவாக் கல்வியைக் காறி உமிழ்பவன்!
கலகப் பதர்களைக் கண்டு வெறுப்பவன்;
காணும் நிகழ்வெலாம் கவிதை வடிப்பவன்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
23.12.2014