Wednesday, November 24, 2010

கொத்தான முத்துக்கள்!

 ·        ஒரு முன் குறிப்பு!
நீங்கள்
உண்மையை
அறிய வேண்டுமாயின்
இதோ-
என்னைப் பற்றிச் சொல்கிறேன்;

என்னை
அறிய வேண்டுமா?
           
அப்படியானால்
உங்களைப் பற்றியே
சொல்கிறேன்!


·        தராசு!
என் எழுத்தைப்
பொன் எழுத்தாய்ப்
பொறித்து வைப்பேன்!

போற்றுவதும்
தூற்றுவதும்
உங்கள் தலை எழுத்து!

     முதிர்ச்சி!

அனுபவங்களுக்காகக்
காத்திருந்தது அறிவு;
            
பிறகுதான் தெரிந்தது:
காத்திருப்பதே,
நல்ல அனுபவம்
என்பது.



அடையாளம்!

யாரது...
தொழிலாளர் நலனுக்கா
உயிரைக் கொடுப்பேன்
என்று
லட்சியக் குரல் கொடுப்பது,
யார் அது?”

வந்தது பதில்:
வருங் கால முதலாளி

·                             மீன் குஞ்சு!
       தொழில் முன்னேற்றத்துக்காக
            சிறு தொழில் செய்யாமல்
            பெருந்தொழில் செய்வேன்
            என்று-
            உன் கல்லூரி
            இலக்கிய விழாவில் பேசி
            கலக்கி விட்டாயாமே?
            மகனே,
            என்ன செய்யப் போகிறாய்?”

            பீடித் தொழில் நடத்தும்
            பெரிய அரசியல்வாதி,
            தன் பிள்ளையை
            இப்படித் தயவாய்க் கேட்டார்.

            பாச மைந்தன்
            ’பளிச்செனச சொன்னான்:
            ‘சுருட்டுத் தொழில்!’

·        நாணம்!
ஆச்சர்யம்!
நேர்க் கோடு.
கேள்விக் குறியானது!

…!
பதினாறு வயதுப்
பாவை!



·        கவிஞன்!
ஒரு
பெண்ணைப் பார்த்துக்
கற்பனை செய்யும்
காமுகர்களுக்கு

நடுவே-

கற்பனையில்
பெண்ணைப் படைக்கும்
நான்.


·        காதல் என்பது…..

உங்களை
சொர்க்கத்தின் வழியாக
நரகத்துக்கு அழைத்துச் செல்லும் வழி!

புரியவில்லையா?

EXit of the HEAVEN
ENtry to the HELL.

·        அழைப்பிதழ்கள்!

தாழிடப் படாத கதவு;

பையை விட்டு
நீட்டிக் கொண்டிருக்கும்பர்ஸ்         

உண்மையை
மறைக்கத் தெரியாத உதடு;

பெண்ணின்
தோளை விட்டு
விலகியிருக்கும் முந்தானை;

இவை-
குற்றவாளிகளை
அழைக்கும் அழைப்பிதழ்கள்!

·        லாபம்!
வாழ்க்கைக் குளத்தில்
செல்வக் கற்களை
எறிந்ததில்
அனுபவ வளையங்கள்..
எத்தனை மகிழ்ச்சி?

….
நஷ்டம் என்பது.
அனுபவத்தின் லாபம்!

·        ஞானம்!
என்னைத்
தெரிந்து கொள்வதற்காகச்
சிந்தித்தேன்

விளைவு,
அதில்-
நான் மறைந்து போனேன்.

பிறகுதான் தெரிந்தது:
சிந்தித்ததே
என்னைத் தெரிந்ததால்தான்!

                              அர்த்தம்!
ஆர்ப்பாட்ட வாழ்க்கையை
அமைதியாகச்
சிந்தித்து மனம்.
மெளனம் சப்தித்தது.

…..
நான் பேசுவதற்காக
வரவில்லை;
பேசப் படுவதற்காக!



·        ’புள்ளி’ விவரம்!
உண்மையில்-
சிறு புள்ளி;
ஊருக்குப் பெரும்புள்ளி;

உரசிப் பார்த்தால்-
கரும்புள்ளி


·        ’புள்ளி’ விஷயம்!
ஒரு சிறு புள்ளிதான்
சிறந்த கோலங்களின்
தொடக்கமும்
ஆகலாம்;
அலங்கோலங்களின்
முடக்கமும் ஆகலாம்!

அது-
புள்ளிகளைப் பயன்படுத்துகிற
புள்ளிகளைப் பொறுத்தது!

·        முடிவல்ல ஆரம்பம்!

ஒரு வாக்கியத்தின்
முற்றுப் புள்ளி
அந்த வாக்கியத்தை
முடித்து விட்டதாய்
யார் சொன்னது?

அது முடிவல்ல;
அடுத்த வாக்கியத்தின் ஆரம்பம்!


·        எடை!
ஏந்தி கிடந்ததை
எடுத்து வைத்தேன்;

இருந்த பொருளும்
எங்கோ தொலைந்தது;
இருப்பதை எடுத்து
அன்புடன் ஈந்தேன்;
இரட்டிப்பாகத்
திரும்பி வந்தது!

செல்வம் என்பது-
சேர்வதில் அல்ல;
அது,
எப்படிச் செலவிடப்படுகிறது
என்பதில்!


        ·        எழுத்து!

நண்பனே!
நான்
எழுதுவது-
என்னை அறிமுகம்
செய்வதற்கு அல்ல;
உன்னை
நான் அறிவதற்கே!



·        பேனா!
ச்சே!
ஐந்து விரல்களால்
என்ன பயன்?
தின்னத்தானே முடிகிறது.

இதோ-
இந்த ஒரு விரலே போதும்;
உலகம் தின்ன!


·        இப்படியும் ஓர் உயில்!
 
பிச்சைக்காரன் ஒருவன்
இப்படி
ஓர் உயிலை
ஊருக்கு எழுதி வைத்தான்;     

            ”எழுதுங்கள்:
            என் கல்லறை மீது;
            இவன் –
            சில்லறையில்லாமல் செத்தான்;
            ஆனால்
            சில்லரையாகச் சாகவில்லை

இவண்-   

கிருஷ்ணன்பாலா

   
இந்தக் கொத்தில் உள்ள பல முத்துக்கள் 1984-களில் தமிழ் உலகம்என்ற இதழிலும்
மீதி 1988-ல் வெளியான எனது,’இந்த ராஜ பாட்டையில்….’ என்ற நூலிலும் பிரசுரம் பெற்றவை;
சில பிற்சேர்க்கைகள். -கிருஷ்ணன் பாலா .

Wednesday, November 3, 2010

தமிழா,தமிழா...!
















அன்பிற்குரிய நண்பர்களே;
           அறிவிற்சிறந்த தமிழர்களே!
ஒன்று உரைத்திட விழைகின்றேன்;
           உண்மையைப் பகிர்ந்திட வாரீரே!

அன்றைய தமிழர் வாழ்வுச் சிறப்பினை,
           அடுக்கடுக்காகச் சிந்தித் தால்,
இன்றைய நிலையில் நமக்குள் எழுவது,
           இதயம் வெடிக்கும் பெருமூச்சே!

தமிழர்நாம்' எனும் தனிப் பெருங் குணங்களில்
           தரணியில் நிமிர்ந்து நின்றிருந்தோம்;
அமிழ்தினும் இனிய தமிழ் மொழி கொண்டு'
           அரிமா' நாங்கள் என்றிருந்தோம்;

எல்லை விரித்து இமயம் வரைக்கும்
           இணையறு வீரம் படைத் திருந்தோம்
இல்லை'என்பதை இல்லா தொழித்து
           எல்லா வளமும் செழித்திருந்தோம்!

மானுட தர்மம் நிலைத்திடும் வகையில்
           மண்ணில் ஆட்சியைப் பெற்றிருந்தோம்;
வான்மழை பொய்யா திருந்திடும் வண்ணம்,
           வழுவா அறநெறி கற்றிருந்தோம்!

ஆழ்கடல் மூழ்கி முத்துக் குளித்து
           அன்னியர் நத்திட வாழ்ந்திருந்தோம்:
ஏழ்கடல் யாவிலும் கப்பல் செலுத்தி
           எங்கும் தமிழ்மணம் சூழ்ந்திருந்தோம்;

திரைகடல் ஓடியும் திரவியம் தேடி
           தேசங்கள் எல்லாம் தெரிந்திருந்தோம்;
வருவதை உரைக்கும் வல்லமை திகழும்
           வான சாத்திரம் அறிந்திருந்தோம்!

யாழும் முழவும் சூழும் இசையில்
          யாவரும் மயங்கும் கலை படைத்தோம்;
ஊழும் ஒதுங்கும் ஆலயம் செய்து
          உன்னத நுட்பச் சிலை வடித்தோம்!

"என்று பிறந்தது?' என் றுணராத
          இலக் கண மரபு கொண்டிருந்தோம்;
தொன்று புகழ்நிறை தொல்காப் பியத்தால்
          தூயதமிழ் நெறி கண்டிருந்தோம்!

எந்நாட்டவர்க்கும் எடுத்துரைக்கின்ற
          இலக்கிய ஞானம் தெளிந்திருந்தோம்;
சன்மார்க்கத்தின் தனி ஒளி பரவிட
          சமதரு மத்தில் கனிந் திருந்தோம்!

அன்று நிறைந்ததனைத்திலும் வலிமை
          அடுக்கடுக்காக இழந்து விட்டோம்;
இன்று பழமையை எண்ணும் பெருமை
          இருப்பதில் மட்டும் உயர்ந்து விட்டோம்!

இன்று நமக்கிது நல்வழியா?
          இனி,நாம் தொடர்வதும் இதைத்தானா?
நன்று,நற்றமிழ் நண்பர்களே...!
          நாளை,நம்செயல் விதி வழியா?

என்று தொலைந்திடும்? என்று கலைந்திடும்?
         எங்களின் இருட்டு வெறும் கனவு?
என்று புலர்ந்திடும்? என்று மலர்ந்திடும்?
       எங்களின் உண்மைப் புத்துணர்வு?

  ---------கிருஷ்ணன் பாலா--------