Sunday, October 30, 2011

கண் சிமிட்டும் கண்ணன்!






கண் சிமிட்டும் கண்ணனையே பாடுங்கள்;அவன்
கண்ணசைவில் துயரம் தீரும் பாருங்கள்;
மண்ணைத் தின்ற மழலையவன் காணுங்கள்;நம்
மனதில் வைத்துத் தினம் அவனைப் பேணுங்கள்! 
                                                            ( அந்தக் கண் சிமிட்டும்).
                                                                                            
கண்ணனையே எண்ணுகின்ற மனதிலே;அவன்
காதலியாம் ராதை வந்து ஆடுவாள்;அந்தப்
பெண்ணழகி ஆடுகின்ற நினைவிலே;இந்தப்
பிள்ளை தோன்றிக் குழலிசைப்பான் கேளுங்கள்!
                                                        (அந்தக் கண் சிமிட்டும்...).

ராதையிடம் போதை கொண்ட மேதையாம்;அந்த 
ரகசியத்தை யாரறிவார் மண்ணிலே?- கண்ணன்
ராதையோடு மகிழ்ந்திருப்பான் என்பது;;நாம்
ராதைபோன்று அவன் நினைவில் வாழவே!
                                                      (அந்தக் கண் சிமிட்டும்...)

கண்ணன் எந்தன்தந்தை என்று காட்டவே; என்னைக்
கவிதையிலே பாலன் என்று கூறுவேன்!
மண்ணில் அந்தக் கிருஷ்ணனுக்குப் பாலனாய்;நான்
மகிழ்ந்திருந்து பாடுகிறேன்;கேட்கிறான்!  
                                                        (அந்தக் கண் சிமிட்டும்...)

பாடுபொருள் பரம்பொருள்என் கண்ணனே;நான்
பாடுவதைக் கண்சிமிட்டி ரசிக்கிறான்;இங்கு  
தேடுபொருள் அவன் ஒருவன் மட்டுமே; எட்டுத்
திசைகளிலும் மறைந்திருந்து சிரிக்கிறான்!
                                                       (அந்தக் கண் சிமிட்டும்...)

 இவண்-
கிருஷ்ணன்பாலா
31.10.2011

2 comments:

V.Rajalakshmi said...

கண்களை படிக்கவிடாமல் என்ன மாயம் இது?

Anonymous said...

//பாடு பொருள் பரம்பொருள் என் கண்ணனே;நான்
பாடுவதைக் கண்சிமிட்டி ரசிக்கிறான்;இங்கு
தேடுபொருள் அவன் ஒருவன் மட்டுமே; எட்டுத்
திசைகளிலும் மறைந்திருந்து சிரிக்கிறான்!//

கண் சிமிட்டி சிரிக்கும்
இந் நந்தவன ரசிகன்!