Saturday, November 30, 2013

தாயுமானவனே!

என் தந்தையை எண்ணி ......
-------------------------------------------

எண்ணத்துக்கும் செயலுக்கும்  இடைவெளியோ வேறுபாடோ இருக்கக்கூடாதென்கின்ற இலக்கைப் பாதையாக அமைத்துக் கொண்டு செயல்பட்டவர் என் தந்தை.

ஏழை ஆயினும் செறுக்கில் செல்வந்தர்;
வறுமைக் கோட்டை வளைக்க முடியாமல் வாழ்ந்த போதும்  எவருக்கும் வளையாமல் நிமிர்ந்தே வாழ்ந்து மறைந்து விட்டவர்.

சின்னஞ்சிறுவயது முதலே பற்றாக் குறையின் உஷ்ணம் என்மீது படிந்து விடக்கூடாது என்பதற்காகவே தன்னை எனக்கு நிழலாகத் தந்து வளர்த்துக் கனவுகள் கண்டவர்.

மனிதாபிமானம் இல்லாது பிறருடைய  உழைப்பை உறிஞ்சி  வசதியான வாழ்வு கண்ட  முதலாளிகளை ‘டிஸ்மிஸ்’ செய்து கொள்கின்ற பழக்கத்துக்கு நான் ஆட்பட்டுப் போனதன் இயல்பே அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டதுதான் என்பதைப் போகப் போக புரிந்து கொண்டிருக்கிறேன்.

வறுமையிலும் என்னைச் சுயசார்புள்ளவனாகவே வளர்த்தார்; நான் ஓரளவு வசதியை அடைந்தபோது எனது உழைப்பில் இருந்து சல்லிக் காசுகூடப் பெற்று வாழாத தன்மானத்தோடு இவ்வுலகை விட்டு அகன்று  விட்டார்.

அதே தன்மானம்தான் என்னை இன்று தொடர்கிறது போலும்.

வாழ்க்கையின் பள்ளத்தில் இருந்தபோதும் ’மேட்டுப்’பாளையம் ’கிட்டுக் கவுண்டர்’ என்று சுற்றமும் நட்பும்  உயரத்தில் வைத்துப் பார்க்கும் உண்மையும் உறுதியும் கொண்ட சத்தியவானாக இன்றும் எனது நினைவுகளில் வாழும் என் தந்தையே இவ்வுலகின் முதல் ஆசான் எனக்கு.


கல்வியே பயிலாத அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைதான்  இன்று எனது எழுத்துக்களாய்  வலம் வந்து கொண்டிருக்கின்றன..

(KB/15/6/2014  பிற்சேர்க்கையாக)

எந்தை,’ தாயுமானவன்’ அமரர் கிருஷ்ணசாமிக் கவுண்டர்



அன்னைக் கருவ றையில்
என்னைச் சுமக்கும் முன்
அன்னை அவள் சுமந்த
உன்னுள் எனைச் சுமந்தாய்;

தந்தை என்றெ னக்குச்
சிந்தை உரைத் தவளை
முந்தி இருந்த உயிர்ச்
சொந்தம் உனை மறவேன்!.

வயிற்றில் சுமந் தாளை
வாழ்வில் சுமந் தாய்நீ;
கயிற்றில் வாழ்ந் தாளின்
கருத்தில் வாழ்ந்தாய் நீ!

பத்து மாதம் எனைப்
பதித்து வளர்த் தாளைச்
சொத்துச் சுகம் போலச்
சுமந்த உயிர் நீதான்!

உதிரப்பால் ஊட்டி
உயிரை வளர்த் தாளின்
எதிரில் இணை வைக்க
இல்லை ஒரு தெய்வம்!

எனினும் அவள் மேனி
இளைத் துவிடா திருக்க
உனது உதி ரத்தை
உழைப்பில் சிந்தி யவன்;

எனது தந்தை யென
எண்ணி நெகிழ்கின்றேன்!
மனதில் வைத் துன்றன்
மாண்பில் மகிழ்கின்றேன்;

தந்தை என்று மட்டும்
தனித்து இல்லா மல்,
எந்தை நீ எனக்கு
எல்லா முமாய் இருந்தாய்;

அறிவு புகட்டி எனை
ஆளாக்கி இம் மண்ணில்
உறவை உயிர் உணர்வாய்
ஓங்க வளர்த் தவனே!

தோயும் உணர்வுகளில்
தோய்ந்து தோய்ந்து உனைத்
தாயு மான வனாய்த்
தனித்து வணங்கு கிறேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
30.11.2013

1 comment:

V.Rajalakshmi said...

//தந்தை என்று மட்டும்
தனித்து இல்லா மல்,
எந்தை நீ எனக்கு
எல்லா முமாய் இருந்தாய்;

அறிவு புகட்டி எனை
ஆளாக்கி இம் மண்ணில்
உறவை உயிர் உணர்வாய்
ஓங்க வளர்த் தவனே!

தோயும் உணர்வுகளில்
தோய்ந்து தோய்ந்து உனைத்
தாயு மான வனாய்த்
தனித்து வணங்கு கிறேன்//


நந்தவனத்தை தேடி வந்த தேனீ
கொண்டு செல்லாமல்
கண்டு களித்த மெய்வரிகள்!
செல்லா காசுகளை பெற்று
செலவழிக்க எண்ணும்
இச் செல்வ மகள்!
தன் தந்தையின் நினைவால்
கண்கள் பனித்து கரைந்து
சிந்தையில் புரிந்த வரிகள்!
நிதானமாக அறிந்தாலும் இவை
நெஞ்சில் நின்றுவிட்ட ஒளிகள்!