Monday, June 16, 2014

இல்லறம் கண்ட நாள்!

 
இன்று (25.5.2014) எனது நண்பன் தாரைக் கிட்டுவுக்கு (கிருஷ்ணசாமி)
திருமண நாள். கிட்டுவும் அவர் மனைவியும் எனது அன்புக்குரிய தங்கையுமான திருமதி லட்சுமியும் மகிழ்வும் வளமும் பெற்று வாழ்ந்திருக்க வாழ்த்துக்கள்.


இல்லறம் கண்ட நாள்!
---------------------------------
எல்லோர்க்கும் இன்சொல் ஈந்து
எவரையும் நட்பாய் ஏற்க;
அல்லும்ப கலுமாய் எழுதி
ஆனந்தம் கொள்ளும் கிட்டு;
தொல்லை யில்லாத எண்ணம்
துலங்குமோர் வெள்ளை உள்ளம்;
நல்லவன் அவனை என்றன்
நண்பனாய் மகிழு கின்றேன்!

அவனென்றன் பள்ளித் தோழன்;
ஆணவம் அறியாப் பிள்ளை;
தவறுகள் செய்யத் தெரியான்;
தமிழ்எனில் தவறி வீழ்வான்!
கவலைகள் இருந்த போதும்
கவியர சென்றால் துள்ளி
உவமைகள் சொல்லி மகிழும்
உன்னத ரசிகன் கிட்டு!

திருமகள் பெயரில் நல்ல
திறம் மிகும் துணையாள்;
உருவத்தில் கருத்தாள்;எனினும்
உள்ளத்தில் பழுத்தாள்;கணவன்
கருவத்தில் சிரித்தாள்;தனது
கடமையில் செழித்தாள்;அந்த
மருமத்தைச் சொன்னால்;’எனது
மாமன்தான் அனைத்தும்’ என்பாள்!

இத்தினம் இருவ ருக்கும்
இல்லறம் கண்ட நாள்தான்;
அத்தையின் மகளும், அந்த
அம்மானின் மகனும் சேர்ந்து
வித்தைகள் படித்தும் காதல்
வேள்விகள் செய்தும் நல்ல
புத்தகம் போன்றும் வாழ்வைப்
புரட்டியே மகிழ்வ தாக!

அத்தையின் மகளைக் கட்டி
அருந்தமிழ்க் காதல் கொள்ளும்
வித்தையில் தேறி,கவிதை
விளக்கங்கள் எழுதும் ஆற்றல்
சொத்தெனக் கொண்டே,கிட்டு;
சுவைபட எழுது கின்றான்!
முத்தமிழ் அன்னை இவனை
முழுவதும் காக்க, வாழ்க!

அன்புடன்,
கிருஷ்ணன் பாலா
25.05.2014