Saturday, June 30, 2012

எனக்கருள் ஞான மலையே!


‘சித்தர் மகான்’ சற்குருநாதர் ஸ்ரீ ராஜகிரி ஸ்வாமிகள்
(ஜீவ சமாதி 1985)

நல்வழி செப்பியே
                நலம் தரும் நூல்வழி
                                நாடிநான் சென்ற தில்லை!

கல்வியின் பயனிலும்
                கற்றதன் வினையிலும்
                                கருத்துடன் நின்ற தில்லை!

நல்லற நினைவுகள்
                நாள்எலாம் தோன்றிட
                                நற்றவம் வென்றதில்லை!

இல்லறம் தன்னிலும்
இலக்கண நியதிகள்
ஏற்றவன் என்ற தில்லை!

ஆயினும் என்னுளே
அன்புடன் முகிழ்த்துநீ
அருள்மழை பொழிய லுற்றாய்!

தாயினும் சாலவே
தயவுடன் பரிந்துஎன்
தமிழ்தரும் கவிதை பெற்றாய்!

உன்னையே அன்றிநான்
உணர்ந்திடும் பொருளிலை:
உண்மை:உன் நினைவுதானே?

என்னையே அன்றிஉன்
இறைமொழி பேணுவார்
இனி,இலை;அதற்கு நானே!

அன்னைபோல் உன்னையே
அணுகுவேன்அணுகுவேன்;
                                அடைக்கலம் நினதுதாளே!

அன்பிலே மலைகளும்
அகப்படும் என்பதை
அறிந்தவன் மொழிகள் கேளே!

இருமனம் கொண்டுநான்
எண்ணுவேன்;ஆயினும்
எனக்கருள் ஞானமலையே!

ஒருநினை வாகவே
உழலுவேன் ஆயிடின்
                                உனக்கொரு பாடல் இலையே!



-----------------------கிருஷ்ணன்பாலா--------------------
--------------------------------------------------KB/25/1/1982----------------------------------------------------
         

காமமா? ஞானமா?



-------------------------------------------------------------------------------------------

காதல்வசப்படும் மனதில் ஞானத்தின் குழப்பமும்
ஞானத்தைத் தேடும் மனதில் காமத்தின் குறுக்கீடும்
கவிஞனைப் படுத்தியபாடு இருக்கிறதே,அது ஒரு
குழப்பமான ஆனந்த அவஸ்தைதான்.

அந்த அவஸ்தையின் வசத்திலிருந்து மீள்வதற்கும்
ஆள்வதற்கும் அது சற்குருநாதனைச் சரண் அடைந்து
பேசும் கவிதை ஓர் ஞானானந்த அனுபவம். இது 1984ல்.

கவிதையின் உயர் கோப்பும் மனச் சான்றின் மாறான
தீர்ப்பும் ஒருசேரப் பாய்ந்து வரும் இந்தப் பண்பாட்டுப்
படைப்பைச் சுவைப்பதற்கோர் ஞானம் வேண்டும்!

----------------------------------------------------------------------------------
அச்சமோர் புறத்திலும்
ஆசைஓர் தரத்திலும்
அனுதினம் நெஞ்சிலே புரள

அருளெலாம் மேவிடும்
அய்ய,நின் பாதமே
அடிமைஎன் நினைவிலே திரள

இச்சையால் நேரிடும்
இழிநிலை யாவையும்
எண்ணிஎன் உள்மனம் குமைய

இந்தநாள் உணர்ச்சியில்
இருதலைக் கொள்ளியுள்
எறும்பென என்நிலை அமைய

இம்சைகள்   மீளவும்
என்னையே ஆளவும்
இருந்திடும் நிலையினில் அழுதேன்!

என்னைநீ மீட்கவே
இன்பமே காக்கவே
இணையிலா உன்அடி தொழுதேன்!

சம்மதம் கொண்டுஎன்
சஞ்சலம் கொன்றிடும்
சத்திய ஜோதிநீ வருக:

சச்சிதா னந்தமாய்
சகலமும் அறிந்தஎன்
சற்குரு நாதனே அருள்க!

கயல்விழி மாதரை
கடலெனும் ஆசையில்
கவிமனம் தேடுதல் தவறா?

கச்சவிழ் கொங்கையில்
கண்களே வீழ்ந்தபின்
கவலைதா விடுவது சரியா?

இயல்படு மானுடர்
இலக்கணம் காமமாய்
இருப்பதே இல்லற வழக்கா?

ஈருடல் கலப்பது
இறைவனின் நினைப்பெனில்
என்நிலை அதில்விதி விலக்கா?

இன்றுநான் கேட்கிறேன்;
என்னையே பார்க்கிறேன்;
என்னுளே இருப்பது நீயே!

ஏதுநான் செய்கினும்
எப்பிழை ஆயினும்
என்னைநீ காத்திடு தாயே!

சன்னதி உன்னடி
சந்ததம் தேடினேன்;
சத்தியத் தெய்வம்நீ வருக!

சச்சிதா னந்தமாய்
சகலமும் அறிந்த என்
சற்குரு நாதனே அருள்க!

காதலில் ஞானமா?
காதலே ஞானமா?
கலங்கி நான் நிற்கிறேன் இன்று;

கவிஞனாய் இருப்பதால்;
காமமே ரசனையாய்க்
கவிதைகள் படைக்கிறேன் நன்று!

போதைநீ தருவதாய்
புரிகிறேன்;சரிகிறேன்;
புண்ணிய பாவம்யா ரென்று?

புத்தியே நீஎன
பூண்டஎன் நெஞ்சினில்
புண்படச் செய்தல்நன் றன்று!

யாவையும் நீஎன
ஏற்றவன் செயலினால்
                    என்னகோ பங்கள்நீ கொள்வாய்?

என்னைநீ ஏற்றது
           உண்மையே தானெனில்
                     என்பிழை யாவுமே கொல்வாய்!

சாவையும் வென்றஎன்
           சத்தியக் கவிதையில்
                     சார்ந்திடும் கருவென வருக!

சச்சிதா னந்தமாய்
          சகலமும் அறிந்தஎன்
                     சற்குரு நாதனே அருள்க!


------------------------------கிருஷ்ணன்பாலா---------------------------------------

----------------------------------------------KB/11.5.1984------------------------------------------------------------


Tuesday, June 19, 2012

‘நான்’ இனி,நீங்கள்’!

நான்எனும் அகந்தை கொண்டு
நான்சொலும் செய்தி எல்லாம்
தேன் பொழித் தமிழின் வீரம்
தெளிவுறக் காட்டு தற்கே!

ஆணவம்என்று இதனை
அளப்பவர் யாரும் எழுத்தின்
மாணவர் என்றே சொல்வேன்
மற்றவர் எனது தோழர்!

யாரெது சொன்ன போதும்
எதிர்ப்பிலும் நிமிர்ந்து நின்று
நேர்பட உரைத்தல்;உண்மை
நிலைத்திடச் செய்யத் தானே?


நாட்டிடைத் தீயோர் தலைமை
நாசத்தைச் செய்யும் போது
கேட்டிட யாரும் இல்லாக்
கேவலம் நிலைக்க லாமோ?

ஆட்சியைப் பிடிப் பதற்கே
அரசியல் செய்வோர் தமது
சூழ்ச்சியை எதிர்க்கும் சக்தி
சொல்எனும் எழுத்துக் குண்டு!

தமிழர்தம் வாழ்வும் தூய
தரம்மிகும் பண்பும் இன்று
நமைமிக வருந்த வைக்க
நலங்கெட எழுத லாமோ?

நாட்டிலே லஞ்சம்;மக்கள்
நம்பிக்கைத் துரோ கங்கள்
வாட்டிட வளைந்து நின்று
வரைவது எழுத்தா,என்ன?

பேய்களே ஆட்சி செய்தால்
பிணந் தின்னும் சாத்திரங்கள்;
நாய்களே வாழும் என்றால்
நரகல்தான் நமது வாழ்வு!

கொஞ்சமும் இரக்க மின்றி
கொடுங்கோ லாட்சி இங்கு
வஞ்சகம் புரியும் போது
வாய் பொத்தி நிற்கலாமோ?

ஓய்விலாக் கவலை;நாட்டின்
உறக்கத்தைக் கெடுக்கும் போது;
ஓய்வாகப் படுத்துக் கொண்டு
உறங்குவோன் தமிழன் அல்ல!

சத்தியம் நேர்மை வீரம்
சாற்றிடும் பண்பு யாவும்
செத்ததேன்? என்று இங்கு
சிந்தித்தால் தூக்க மில்லை!

திருடர்கள் கூட்டம் இங்கு
தெருத் தெருவாக நின்று
பெருமைகள் பேசு கின்றார்;
பிறகு நாம் என்ன செய்ய?

சாட்டையை எடுத்து இங்கு
சாடியே கயவர் கூட்டம்
ஓட்டவே செய்யும் எழுத்தின்
உறுதியைக் காட்ட வேண்டும்!

எழுத்திலே வீரம் கெட்டால்
எறும்புக்கும் அஞ்ச வேண்டும்;
கருத்திலே உண்மை நின்றால்
கயவரும் அஞ்ச வேண்டும்;

எழுதுவோர் எல்லாம் இந்த
இலக்கணம் அறிந்து, நமது
பழுதிலா வாழ்வு காக்கப்
படைத்தலே அறிவு என்பேன்!

தேங்கிடும் தேசப் பற்றில்
தெளிவுடன் பார்வை கொண்டு
ஓங்கிடும் உறுதி யோடு
உரைப்பதென் நோக்கம்;அறிக!

மிடுக்குடன் மிளிரும் எழுத்தில்
மிதந்திடும் செறுக்கை நீங்கள்
வெடுக்கெனப் புரிவீ ராயின்;
விளம்புவேன்;’நான்;இனி நீங்கள்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.6.2012