Monday, October 22, 2012

அறிவுச் செல்வம் அளித்த அன்னை!




என்னைப் படைத் துலகை
எந்நாளும் காத்து வரும்
அன்னை கலை வாணியவள்
அடிமலரைப் போற்று கின்றேன்!

முன்னை வினை யாவும்
முற்றாக அழித்தவளின்
பின்னை யான் தொடர்ந்து
பெருமைகளைப் பூட்டு கின்றேன்!

'ஏதிலான் போல்' என்னை
இருக்க வைத்திவ் வுலகில்
ஏது இலான்இவன்?' என்று
இராஜனையும் அஞ்ச வைத்தாள்!

கற்றோர் சபை நிறுத்தி
கல்லாத என் உளத்தில்
மற்றோர் மயங்குகின்ற
மாத்தமிழை மிஞ்ச வைத்தாள்!

பொற்றா மரைக் குளத்தில்
புலவரெலாம் ஏங்கு கின்ற
நற்றாள் சுவடி எலாம்
நாடிவந் தெனக் கீன்றாள்!

அறிவென்னும் ஆயுதத்தை
அடையாளம் காட்டி அதில்
செறிவோடு சிந்திக்கும்
சிந்தனைக்குள் நிற் கின்றாள்!

பொன்னும் பொருளும்தினம்
பொய்நின்ற வாழ்வோடு
மின்னும் சுகங்கள் என
மேதைமையில் சிரிக் கின்றாள்!

திருமகளின் திருவடியும்
தீரத்தின் மலைமகளும்
பெருமைக்கு உரிய தெனப்
பேசுவதை ரசிக் கின்றாள்!

மதியிழந்து போனபின்னர்
மாளாத செல்வத்தின்
கதி என்ன ஆகும்? என
கண்சிமிட்டிக் கேட் கின்றாள்?

வீரமெனும் ஆற்றல்கள்
விளைவிக்கும் பெருமை எலாம்
கூர்மைமிகும் புத்தி முன்
குனியாதோ? என் கின்றாள்!

சிந்திக்கும் அறிவோடும்
சீரான தெளிவோடும்
வந்திக்கும் விதி அளித்து
வாழ்வளித்தாள் என் அன்னை!

உண்மை,உயர் நோக்கம்
ஒரு நாளும் தளராத
திண்மை மிகும் நெஞ்சம்;
தெளிவான தமிழ்த் தேடல்!

நேர்கொண்ட எழுத்துக்கள்
நிஜமான கருத் துக்கள்;
‘யார் என்னை எதிர்த்தாலும்
எதிர் நிற்க முடியாது!

பார்” என்று பறை சாற்றும்
பைந்தமிழின் வல் லோனாய்
வார்த்தென்னை வைத் தாளை
வணங்கு கின்றேன் இந்நாளில்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
22.10.2012

Monday, October 8, 2012

எழுத்தின் இலக்கு



ஊர் பற்றி யெரிந்தாலும் கவலையின்றி
உறங்கிடுவோர் ஒரு கோடி ஆனாலும்
சீர்கெட்ட மதியுடையோர் அவர்க்கின்றி
சிந்திப்போம்; சிலருக்கே;நமது எண்ணம்
வேர்பற்றி எழுகின்ற ஆலம் போல,
விழுதூன்றும்;நல்லோரின் நெஞ்சிலிங்கு;
ஓரிருவர் என்றாலும் அவர்பொருட்டே
உறுதியுடன் எழுதுவதே,இலக்கு என்போம்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
8.10.2012