என்னை இந்த உலகிடையே
இட்டவன் யார் என்பதை
முன்அறிந்து சொல்பவர்யார்?கேட்கிறேன்-அதை
மொழியும்வரை முளைப்பதில்லை ஞானம்!
ஒத்தையடிப் பாதையில்
ஒற்றைமர நிழலிலே
’நத்தி நின்றால் போதும்’ என்று யாரும் - நின்று
நம்புவதால் வருவதில்லை ஞானம்!
பத்தினியாய் இருப்பவள்தன்
பதியினோடு வாழ்ந்திடில்
எத்தனைதான் சுகம் இருந்த போதிலும் - அதில்
எட்டிவந்து சேர்வதில்லை ஞானம்!
வெட்டுப்பட்ட புண்ணிலும்
விம்மி நிற்கும் சதையிலும்
கட்டுப்பட்டுப் போகும் இந்தக் காயம் - அது
கசக்கும்வரை காண்பதில்லை ஞானம்!
கட்டளையை இட்டு உனைக்
கட்டிப் போடும் ஆசைகள்
சுட்ட பின்னர் தெரிந்திருக்கும் பாடம் - அதன்
சுவை மறந்தால் சுடுவதில்லை ஞானம்!
பட்டணத்து வாழ்க்கையில்
பட்டினத்தார் பார்வையில்
ஒட்டிக் கொண்டு இருப்பதில்லை யாரும் -அந்த
உறவுகளில் தெரிவதில்லை ஞானம்!
காதல் என்று காமத்தை
ஓதி நின்று பேசினால்
நீதி என்று ஆவதில்லை, பாரும்! - அந்த
நெஞ்சத்திலே நெகிழ்வதில்லை ஞானம்!
அப்பனோடு அம்மையை
தப்பி வந்து பார்ப்பவர்க்கே தோணும் -அது
தழைக்கும்வரை முளைப்பதில்லை ஞானம்!
ஞானம் பெற்ற புத்தனும்
ஞானம் அற்ற பித்தனும்
ஞானியர்க்கு ஒன்றுதானே ஆகணும்? - இதை
அறிந்திடாமல் புரிவதில்லை ஞானம்!
தேடும்,
கிருஷ்ணன்பாலா
24.3.2012
2 comments:
ஞானம் பெற்ற புத்தனும்
ஞானம் பெற்ற பின்னரும்
எண்ணவில்லை தான்மணந்த மாதை - அவள்
செய்த பாவம் விளக்கியதோ அஞ்ஞானம்...?!
அருமையான கருத்து ஐயா!! புத்தனைப் பற்றி படித்ததும் மனதில் எழுந்த கேள்வி....! பிழையிருப்பின் மன்னிக்கவும்! :)
வழக்கம்போல் பெயரிட மறந்தேன்!
- கீதா ராமஸ்வாமி
Post a Comment