Monday, December 10, 2012

எங்கள் ராஜாஜி!













அண்ணல் ராஜாஜி 
அவதரித்த நாள் இன்று:
-----------------------------------------

வரைமுறை தவறிய
வாழ்க்கையைத் தூண்டும்
வகைசெயும் தீயவ ரான

வஞ்சக மானிடர்
வழிகளை எதிர்த்து
வையகம் புகழும் வண்ணம்

அரசியல் ஒளியை
அணைய விடாமல்
அரண்போல் காத்து நின்று

அண்ணலின் நிழலாய்
அணைந்தார் ஒருவர்;
அவர்தான் எங்கள் ராஜாஜி!

திரை விழுந்தாலும்
தெளி விழக்காமல்
திராவிடப் பொய்களை எதிர்த்து

திடமுடன் நியதி
தினம் வலியுறுத்தி
தேசத்தின் நன்மை கருதி

கறைபடும் மனங்கள்
கலங்கிடச் செய்யும்
கருத்துக்கள் நாளும் எழுதி,

கண்ணியம் என்னும்
கரைதனில் நின்ற
கலங்கரை எங்கள் ராஜாஜி!

கீதையின் சாரமும்
ராமனின் காதையும்
கேட்டவர் வியக்கப் படைத்து

கீர்த்திகொள் தமிழில்
கேடறு கருத்தினை
கிளர்ந்தெழச் செய்து நிறுத்தி

நீதிசொல் இலக்கியம்
நின்றிடும் வாழ்வினில்
நேர்ந்திடும் மேன்மையைக் காட்டி

நஞ்சுறை எழுத்தினர்
நடுங்கிட வைத்த
நல்லவர்;மாமுனி ராஜாஜி!

பாதகம் கூட்டு மோர்
பாதையை வகுத்திடப்
பார்த்திடும் நாடுகள் யாவையும்

பரிவுடன் அணுகிடும்
பண்புடைத் தூதராய்ப்
பார்த்தது ஐக்கிய நாடுகள்;

ஆதலால் மோதலும்
அணுக்கதிர்ச் சேதமும்
ஆவதைத் தடுத்ததோர் தமிழர்;

அவர்,இவர் என்பதை
அறிந்தவர் மிகச் சிலர்;
அறிவிலிக் கூட்டமோ அதிகம்!

ஆதவன் போலொரு
அறிஞனாய் வந்தனன்;
ஆகவே அவனொரு அந்தணன்;

ஆகையால் அவன் புகழ்
ஆவதைத் தடுத்தவர்
அறிவிலிக் கூட்டமே அன்றி

நீதியைச் செய்தவர்;
நேர்மையைப் புரிந்தவர்
நிச்சயம் இவர்கள் அல்லர்!

அறவழி நின்றவர்
அந்தணன் என்றனன்;
அறநெறி வள்ளுவன் அன்றோ?

அண்ணல்ரா ஜாஜிதான்
அறவழி நின்றவர்;
ஆகவே அந்தணர்,நண்பரே!

நெறிமுறை அரசியல்
நின்றவர் அவர் பெயர்
நெஞ்சில் வைத்திடல் வேண்டும்;

நேர்வழி;அவர்வழி
நிஜம்;அது நம்வழி
நித்தமும்; அவர்புகழ் வாழி!

இவண்-
கிருஷ்ணன் பாலா
12.12.2012

No comments: