இன்றைய காலகட்டத்தில் இளைஞர் - இளைஞிகளிடையே உருவாகும்
காதல் ஈர்ப்புக்களையும் அது தொடர்பான புனைவுகளையும் நான் அங்கீகரிப்பதில்லை.
’உலகமயமாக்குதல்’ என்பது பொருளாதரச் சீர்மைக்கும் வளமான வாழ்க்கைத்தேர்வுக்கும் மட்டுமே பொருந்தும் என்பதை ஏற்பவன் நான். இதில் காதல் என்கிற சாத்தானின் ஆளுமையையும் இந்திய
இளைஞர் சமூகம் ஏற்றுக் கொண்டாடுவதைக் கடுமையாகச் சாடுகின்றவன்.
%2B-%2BCopy.jpg)
எனவேதான், பொருந்தாக் காதலையும் சமுதாயம் அதனால் சீர்கெட்டுப்
போகிறதே, என்பதில் வருந்தாக் கொள்கையாளர்களையும் நான் எதிர்த்தே எழுதி வருகின்றேன்.
காதல் என்பது கட்டாயம் இதயங்களைச் செம்மைப் படுத்திச் சிந்திக்க வைக்கின்றதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்போது அத்தகைய காதலை இலக்கியப் பண்பாட்டின் சின்னம் என்று சிறப்பிக்க நான் தயங்க மாட்டேன். வெறும்
பருவக் கிளர்ச்சியால் ஏற்படும் பாலினச் சேர்க்கைக்கு சட்டப் பாதுக்காப்பு அளிக்கும்
நிலையை இழிவானதெனவே எண்ணுபவன் நான்.
இளமையின்
உந்துதல் காதலைக் களவுத்தனமான இன்பநிலையை உருவாக்குகிறது. ஆனால் அதையும் தாண்டிய உள்ளுணர்வு
அதை எப்படியும் கட்டி வைத்து விடுகிறது,
இதை மெய்ப்பிக்கவே
இந்தக் கவிதை இங்கே பதிவு செய்யப் படுகிறதே ஒழிய காதலை ஊக்குவிக்க அல்ல’ என்பதை உறுதிபடத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இளமையில்
என்னை வசீகரித்த பெண்மையை நான் ரசித்தேன்; அந்த ரசனையில் அந்தப் பெண்மையின் அழகை உவமையோடு
வர்ணிக்கின்றது இக்கவிதை.
எனது இளமைப் பிராயத்தில் என்னை எதிர்கொண்ட காதலை நான் பண்பாட்டின் எல்லையோடு பக்குவமாக நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றேன்
என்பதற்குச் சாட்சியாக,மெய்தீண்டாக் காதலெனக் கழிந்துபோன அந்த நாட்களின் நினைவை எனது
பழைய டயரிக் கிழிசல்களிலிருந்து, எடுத்துரைக்கின்றேன்,இங்கே:
-கிருஷ்ணன்பாலா
14.11.2014
-கிருஷ்ணன்பாலா
14.11.2014
அந்தக் கவிதை அம்புகள்……..
சித்திரம் போல சிரிக்கும் விழியும்
செந்தேன்போல இனிக்கும் மொழியும்
உத்தமி உனக்கே தனிப்பெரும் சொந்தம்;
உன்னிடம் மட்டும் மயங்குது நெஞ்சம்!
பெயரில் புனித’ யமுனா’ நதியாள்;
பேச்சில் சாகச தந்திர மதியாள்;
உயிரில் உணர்வில் கலந்திடும் விதியாள்;
உயர் கவிதைக்கே பொருள் தரும் ரதியாள்!
எளிமையும் தூய்மையும் அன்பினில் உறைய;
இரக்கம் பெருமை பண்பினில் நிறைய;
நளினமும் நாணமும் அறிவினில் மலர
நவின்றாள் என்மனம் கவிதையில் கரைய!
கிருஷ்ணன்பாலா
10.12.1978 (6:15pm)
இன்று
என் வாழ்வில் மறக்க இயலாத பொன்னாள்.
மன்மத
அம்புகளால் என்னை இம்சைப்படுத்திய அவளை
எனது
கவிதை அம்புகளால் சரணடையச் செய்தேன்.
ஆம். அவள் குறுந்தொகைக் காட்சியினை என் முன் உரக்கப் படித்துக் காட்டுகிறாள்:
“உன்
தாயும் என் தாயும் வேறு வேறு; என்றாலும் தெய்வ வசத்தால்
ஒருவரை
ஒருவர் சந்தித்து உயிர் கலந்தோம்’’ என்று குறிப்பால் உணர்த்தி என்னைக் கடந்தவாறு புத்தகத்தைப் பார்ப்பதுபோல் நின்று ஓரக் கண்ணால் என்னப் பார்க்கின்றாள்.
அந்தப்பரி பாஷையைப் புரிந்து கொண்ட என் மனம் அவளுடைய மறைபொருள் உணர்த்தலில் உடனே கவிதை ஒன்றை அங்கேயே எழுதுகிறது.
நான் எழுதும் கவிதையைப் பின்னால் நின்று படித்த அவள் வெட்கத்தால் தலை குனிந்தவாறு வீட்டுக்குள் ஓடி மறைகிறாள்..
-கிருஷ்ணன்பாலா
10.12.1978 (6:15pm)
10.12.1978 (6:15pm)
No comments:
Post a Comment