Monday, February 28, 2011

இது எனது இயல்பு!

வந்த வழி தெரியாது
வாழும் நிலை புரியாது
எந்த வழி சென்றால்
எளிதான நல்வாழ்வை
துன்பமின்றி நாம் அடைவோம்?
தொல்லைகளில் விடுபடுவோம்?
என்பதனை எவர் அறிந்து
எழுதுகின்றார் இவ்விடத்தில்?
அவரவர்கள் இஷ்டப்படி
அவிழ்த்துவிடும் கட்டுரைகள்
தவறான கருத்துக்கள்;
தடுமாறும் தமிழ்ச்சொற்கள்;
இனமானம் எனும் பெயரில்
இல்லாத இன பேதம்;
தனதென்னும் கர்வத்தில்
தடம்புரண்ட பிதற்றல்கள்…
இவைதானே முக நூலை
எல்லோர்க்கும் சொல்கிறது!
சுவையான தமிழ் எங்கு,
சுலபத்தில் புரிகிறது?
அதனால்இம் முகநூலில்
அனர்த்தம்தான் மிளிர்கிறது;
இதைநானும் புரிந்திங்கு
எதிர்கொள்ளத் தயங்குகிறேன்.
அறிவோடும் பண்போடும்
ஆன்மீகச் செறிவோடும்
சிறப்பான எழுத்துக்கள்
சிலரிடத்தில் மட்டும்தான்-
சிலநேரம் பொழிகிறது;
சிந்தனையும் விரிகிறது!
நலமான உணர்வுடையோர்;
நட்புத்தான் நிலைக்கிறது!
நானவரை நினைக்கின்றேன்;
நட்போடு இருக்கின்றேன்;
ஆனவரை மறவாமல்
அகம் வைத்துப் பார்கின்றேன்!
எவரெல்லாம் பண்போடு
எழுத்துக்கள் தருவாரோ;
அவரெல்லாம் என் நண்பர்
அவர்க்கெனது வாழ்த்துக்கள்!

நண்பர்கள் எண்ணிக்கை
நாள்தோறும் கூட்டுகின்ற
எண்ணத்தில் எழுதாமல்,
இலக்கோடு எழுதுகின்றேன்.
முக்காட்டுகுள்ளிருந்து
முகவரிகள் இல்லாமல்
இக்கோட்டில் நுழைவோரை
எதிர்கொள்ள மறுக்கின்றேன்.
வெறுந்திண்ணைப் பேச்சுக்கும்
வீண்பொழுது போக்குக்கும்
இறுமாப்புக் குணத்துக்கும்
எழுதுவதென் இலக்கன்று!
சிறுபிள்ளைத் தனமாக
சினமூட்டும் பேர்களுக்கு;
மறுக்கின்றேன் எனதிடத்தை
மன்னிப்பீர்,நண்பர்களே!
நட்புடன் –
கிருஷ்ணன் பாலா
28.2.2011

3 comments:

Anonymous said...

”இனமானம் எனும் பெயரில்
இல்லாத இன பேதம்;
தனதென்னும் கர்வத்தில்
தடம்புரண்ட பிதற்றல்கள்…

இவைதானே முக நூலை
எல்லோர்க்கும் சொல்கிறது!
சுவையான தமிழ் எங்கு,
சுலபத்தில் புரிகிறது?

அதனால்இம் முகநூலில்
அனர்த்தம்தான் மிளிர்கிறது;”

உண்மையான வார்த்தைகள் ஐயா! நானும் உணர்ந்த உண்மை!

Anonymous said...

! - கீதா ராமஸ்வாமி

V.Rajalakshmi said...

//சுவையான தமிழ் எங்கு,
சுலபத்தில் புரிகிறது?//

சுவையான தமிழ் இங்கு
சுலபத்தில் புரிகிறது ஆகையால்

கானம் பாட பல பறவை
அனுதினமும் வருகிறது