Saturday, August 20, 2011

காதலைப் பாடுகின்றேன்!

காமத்தைப் பாடும்  மானிடர் இடையே
காதலைப் பாடுகிறேன்: ஒரு
ஜாமத்தில் நானும் பாரதியின் மொழி
சார்ந்து பாடுகிறேன்!

’காதல்;காதல்;காதல்;காதல் போயிற்
சாதல்;சாதல்;சாதல்’ என்று,
தீதறுங் காதலைச் சொன்னவன் பாரதி
தீட்டிய கவிதையைக் கேட்டவர்க்கே;

என்னருங் காதலின் மேன்மை விளங்கிடும்
இங்கதன் உண்மையைச் சொல்லுகிறேன்;
என்மனம் ஈர்த்தவள் எண்ணத்தை வார்த்தவள்
இருந்த விதம் அதைச் சொல்லுகிறேன்:

(வேறு)

கொத்தும் மலர்ச் செண்டு
கூந்தல் அலை பாய
குழையூசல் செவியில் ஆட

கொவ்வை இதழ் ஓரம்
கூட்டும் நகை ஆரம்
குறிப்பான கதைகள் கூற

புத்தம் புது நிலவு
போன்ற முகத்தில் இரு
பொய்வண்டு மேவும் விழியாள்;

பொதிகை மலைச் சாரல்
புகுந்த இளங் காற்றை
பொய்யாக்கி நகரும் இடையாள்

காமம் அரும்பாத காதற் கரும்பாக
காமன் கணை தொடுத்த தேனோ?;ஒரு
ஜாமம் முழுதாக பாவம், இவன்பாடு
ஜனனம் இதற்காகத் தானோ?


கொள்ளை இடுகின்ற
கள்ளப் பார்வை தனை
மெள்ள விரிக்கின்ற பாவை;

கொஞ்சும் மொழி கூட்டி
கொள்ளைத் தமிழ் காட்டி
நெஞ்சம் புகுந்தசீ மாட்டி;

பள்ளம் மேடுகளைப்
பார்த்து நடந்தவனின்
உள்ளம் மெழுகாகும் வண்ணம்

பாச வலை வீச்சில்
பண்பு மொழிப் பேச்சில்
பற்றிக் கொண்டதவள் எண்ணம்!

காமம் அரும்பாத காதற் கரும்பாக
காமன் கணை தொடுத்த தேனோ?;ஒரு
ஜாமம் முழுதாக பாவம், இவன்பாடு
ஜனனம் இதற்காகத் தானோ?

காதல் எதுவென்று
காணும் அறிவின்றிக்
காமம் வழிகின்ற பருவம்;

கடந்து முடிந்தவனின்
கனிந்த மனம் புகுந்து
கவிதை படிக்கின்ற வித்தை;

ஓதும் பைங் கிளியின்
ஓசை கேட்ட மனம்
உணர்விலின்று ஒரு கர்வம்; அது

உலக மானுடர் தம்
உண்மைக் காதல் நிலை
உரைத்த பாரதியி னாலே.!


(வேறு)

”காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம்;
கலவியினால் காதலுக்கு  இன்பம் உண்டாம்;
ஆதலினால் மானுடரே காதல் செய்வீர்’” என
அவன் மொழியைப் படித்ததனால் காதலுற்றேன்;

கண் விழித்தேன்;பாரதியின் கனவுரைத்தேன்
கருத்திடையே புகுந்தவளின் அழகுரைத்தேன்;
மண் பிறந்த பெருமையஎலாம் காதலினால்
மலர்கின்ற மாண்பதனைப் பொருள் உரைத்தேன்!

காதலுடன்,
கிருஷ்ணன் பாலா
20.08.2011 /01:00 am

2 comments:

Vinoth Kumar said...

அருமை அய்யா....

எனை தொட்ட வரிகள்....

காமம் அரும்பாத காதற் கரும்பாக
காமன் கணை தொடுத்த தேனோ?;ஒரு
ஜாமம் முழுதாக பாவம், இவன்பாடு
ஜனனம் இதற்காகத் தானோ?

V.Rajalakshmi said...

அழகிய குரலோசை!