Thursday, August 18, 2011

இணைய தளம்: ஓர் எச்சரிக்கை!

அறிவுடை நண்பர்க் கெல்லாம்
அன்புடன் வேண்டிக் கொள்ளும்
நிறை மனதுடையேன் வணக்கம்!
நெஞ்சிலே பதிய வைப்பீர்:

கணினியைக் கையில் கொண்டு
கற்றிடும் அறிவி னோடு
இணைய தளங்கள் தேடும்
இதயங்கள் அறிவ தாக!:

இதுவரை உலகம் காணா
இயங்கியாம் இம் 'முகநூலில்'
'எதுவரை செல்'வ தென்னும்
இலக்கினை வகுத்து கொண்டு-

'ஒருவருக் கொருவர் அறிவை
உணர்த்திடும் பரிமாற்றங்கள்
பருகிட மட்டும்' என்றே
பயன் கொளச் செய்தல் நன்றாம்!

இளங்கன்று போலே இங்கு
இளைஞரும் இளங் கன்னியரும்
களங்க மற்றிருந்த போதும்
கணினியோ களங்கம் செய்யும்:

காட்சிகள்;கருத்துக் கெட்டக்
காமத்தைத் தூண்டும்;தீய
சாட்சிகள்; சண்டா ளர்தம்
சமத்துவக் கொள்கை எல்லாம்-

தடை யின்றிப் பார்ப்பதற்கும்
தயவின்றிச் சேர்ப்பதற்கும்
கடைவிரித் திருப்ப தாலே
கவனம்நாம் கொள்ள வேண்டும்!

நல்லதைப் பார்க்க வேண்டும்;
நல்லதைப் படிக்க வேண்டும்;
நல்லதை எழுத வேண்டும்;
நல்லதே அனுப்ப வேண்டும்!

படித்தவர்;பண்பு மிக்கோர்;
பழுதிலாக் குடும்ப வாழ்வு
படைத்தவர்; பாரம் பரியம்
பார்க்கவே நினைப்போ ரெல்லாம்-

கருத்திதைப் பதிய வைப்பீர்;
கவனமோ கவனத்தோடு;
உரைத்திடும் எனக்கு உண்மை
ஒருபடி மேலே தெரியும்!

புதுமையைப் பகிர்ந்து கொள்வோம்;
புகுவதில் நிமிர்ந்து செல்வோம்;
எதுவெல்லாம் மனித நேயம்
ஏற்குமோ,எடுத்துக் கொள்வோம் !

நல்லதைச் சொல்லு கின்றேன்;
நாட்டுக்கே சொல்லு கின்றேன்;
இல்லையேல் எதிர் காலத்தில்
இந்தியா மரித்துப் போகும்!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
----------------------------------------------------------------------------------------------
குறிப்பு:
இக் கவிதை சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்டு, முக நூலில் பதிவு செய்யப்பட்டதுடன் ‘திரி சக்தி’ இதழிலும் பிரசுரம் ஆனதுதான். புதிய நண்பர்கள் பலரும் உணர்வதற்காக மீண்டும் இங்கே ….-KB

1 comment:

V.Rajalakshmi said...

நன்றி, தேர்ச்சியில் வெல்ல தேடுதல் ஆரம்பம்...