Saturday, June 30, 2012

எனக்கருள் ஞான மலையே!


‘சித்தர் மகான்’ சற்குருநாதர் ஸ்ரீ ராஜகிரி ஸ்வாமிகள்
(ஜீவ சமாதி 1985)

நல்வழி செப்பியே
                நலம் தரும் நூல்வழி
                                நாடிநான் சென்ற தில்லை!

கல்வியின் பயனிலும்
                கற்றதன் வினையிலும்
                                கருத்துடன் நின்ற தில்லை!

நல்லற நினைவுகள்
                நாள்எலாம் தோன்றிட
                                நற்றவம் வென்றதில்லை!

இல்லறம் தன்னிலும்
இலக்கண நியதிகள்
ஏற்றவன் என்ற தில்லை!

ஆயினும் என்னுளே
அன்புடன் முகிழ்த்துநீ
அருள்மழை பொழிய லுற்றாய்!

தாயினும் சாலவே
தயவுடன் பரிந்துஎன்
தமிழ்தரும் கவிதை பெற்றாய்!

உன்னையே அன்றிநான்
உணர்ந்திடும் பொருளிலை:
உண்மை:உன் நினைவுதானே?

என்னையே அன்றிஉன்
இறைமொழி பேணுவார்
இனி,இலை;அதற்கு நானே!

அன்னைபோல் உன்னையே
அணுகுவேன்அணுகுவேன்;
                                அடைக்கலம் நினதுதாளே!

அன்பிலே மலைகளும்
அகப்படும் என்பதை
அறிந்தவன் மொழிகள் கேளே!

இருமனம் கொண்டுநான்
எண்ணுவேன்;ஆயினும்
எனக்கருள் ஞானமலையே!

ஒருநினை வாகவே
உழலுவேன் ஆயிடின்
                                உனக்கொரு பாடல் இலையே!



-----------------------கிருஷ்ணன்பாலா--------------------
--------------------------------------------------KB/25/1/1982----------------------------------------------------
         

No comments: