Thursday, August 9, 2012

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியில்.....




கோதையர் எல்லாம் கோபியர் ஆக;

கொஞ்சும் காளையர் கோபாலன் ஆக
ராதைகள் அவனிடம் ரகசியம் பேச
ராத்திரி பகலாய் துக்கம் தொலந்திட

குவலயம் இன்று கோகுலம் ஆகட்டும்
கோபாலனருள் எங்கும் சூழட்டும்!

வீடுகள்தோறும் நந்த கோபனின்
விந்தை மிகுந்திடும் கால்கள் பதிந்திட;
கேடுகள் யாவும் தொலைக:கண்ணனின்
கீர்த்தி மிளிர்ந்திடும்  மகிழ்வு பெருகிட

குவலயம் இன்று கோகுலம் ஆகட்டும்;
கோபாலனருள் எங்கும் சூழட்டும்!


மானிடர் இடையே மயக்கம் தெளிந்திட
மக்களும் இறையும் ஒன்றெனப் புரிந்திட
நான்,நீ என்னும் அகந்தை மறைந்திட
நலம்சொலும் கீதையின் பெருமை விளங்கிட

குவலயம் இன்று கோகுலம் ஆகட்டும்;
கோபாலனருள் எங்கும் சூழட்டும்!

இறைவன் ஒன்று;அவன்பல தோற்றம்
எண்ணற்ற உயிர்கள் அவனது மாற்றம்
உறையும் மதங்கள் நதிகளைப் போன்று:
ஓடிக் கலக்கும் கடல் அவன் தான்என-

குவலயம் இன்று கோகுலம் ஆகட்டும்;
கோபாலனருள் எங்கும் சூழட்டும்!

கண்ணன் காட்டிய வழியினில் உலகைக்
காண்பதில் கர்வம் கொள்வோர் எல்லாம்
மண்ணில் அவன்வழி வந்தோர்;இன்று
மாண்பினைக் காட்டும் கிருஷ்ண ஜெயந்தியில்
  
குவலயம் இன்று கோகுலம் ஆகட்டும்;
கோபாலனருள் எங்கும் சூழட்டும்!



இவண்-
கிருஷ்ணன்பாலா
9.8.2012

No comments: