Tuesday, July 30, 2013

செழுந்தமிழ் நட்பு!

கவிதையெனும் பெயரிலிங்கு கண்டபடி
கருத்துக்கள் எழுதுகின்றார் சிலபேர்கள்;
கவிதை என்றால் என்னவென்று அறிந்திடாத
கடைகெட்ட மூடர் அதை ரசிக்கின்றார்கள்!

பெண் என்ற பெயராலே எழுதிவிட்டால்
பேயாக ரசிப்பது போல் கருத்துச் சொல்லி
கண் என்றும் உயிர் என்றும் கசிந்துருகி
கருத்துக்கள் சொல்லி,அதை ருசிக்கின்றார்கள்.

மூடர்கள், முட்டாள்கள், தமிழ் மொழியின்
முடவர்கள், குருடர்கள், செவிடு கொண்ட
கேடர்கள் அவரைநாம்நாம் என்ன சொல்ல?
கிறுக்கர்கள்தாம் அவரை மன்னிப்போமா?

நல்ல தமிழ் எதுவென்று அறிந்ததில்லை;
நயமான கற்பனைகள் கொண்டதில்லை;
சொல்ல வரும் கருத்தில் ஓர் புதுமையில்லை;
சுவையாக எழுதிடவும் பழக்கமில்லை!

முகநூலில் வீண் உரைகள் புனைகின்றார்கள்;

முக்காட்டுக் குள்ளிருந்து முனகுகின்றார்;
தகவின்றித் தமிழ் நடையின் சிறப்பை யெல்லாம் 
தகர்ந்த்தெறிந்து தத்துவங்கள் பேசுகின்றார்!

ஆனாலும் அவர் பின்னே ஓடுகின்ற
அறிவிலிகள் கூட்டம்தான் அதிகம் இங்கு;
நானாக அவர்கருத்தில் சென்று அங்கு
நம்கருத்தை எழுதுவதால் பயனே இல்லை!

அறிந்திடுவீர்; என் குணத்தை எனக்கு என்று
இறுமாப்பு மிகவுண்டு;தமிழை இங்கு
குறைப்படுத்தி எவரேனும்எழுதி என்முன்
குலவுகின்ற மூடமைக்கு இடமேஇல்லை!

குறிப்பாகக், கவிதை என்று எனது பக்கம்
கூறுதற்கு முனையாதீர்;முனைவீர் என்றால்
செறிவான எழுத்தோடு என்முன் வாரீர்
செழுந்தமிழைச் சேவித்து நட்புக் கொள்வோம்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.12.2011

1 comment:

Anonymous said...

அசை, சீர், அடி படிக்கவில்லை
மரபு கவிதை மாறாமல் படைத்திட;
"ஞானத்தினும் ஞானம் மெய்ஞானம்
அந் ஞானம் பயில அஞ்ஞானம் விலகும்" என
எண்ணங்களை சந்தமாக்கி எம்மொழியில்
வார்த்த என் செந்தமிழின் மென்வரிகள்!

திறம்பட தமிழை வளர்க்க வில்லை
இயல்பு கவிதை இசைந்து படைத்திட;
"பற்றற்று பற்றிய பற்றும் பற்றாமல்
பற்றில்லா முற்றும் பெற்றது" என்று
எதுகை ,மோனை உரம் இட்டு எம்மொழியில்
வளர்த்த என் செந்தமிழின் சிறுசெடிகள்!

என் எழுத்தில் தொடர்வது ஆர்வம்
எக் கருத்திலும் வளராது கர்வம்
இதை சிறுத்து உரைக்கவில்லை நிஜம்
எனை மறுத்து விலகவில்லை காலமும்!
கற்பனையில் உதித்த ஓசை, இதுவே
ஒப்பனையில்லா என் சிந்து இசை!

அடிப்படை அறியா அறிவிலி அவள்/ன்
ஞானஒளி தேடும் வானம்பாடி _ எவை
செறிவான எழுத்து என அறியாமல்
செந்தமிழை சேவித்து முன் வருவேன்
தோழைமையாய் பாவித்து தொடர அல்ல
ஞான பேழையிடம் ஞானம் யாசிக்க!