Tuesday, January 10, 2012

பிரமாணப் பத்திரம்!



அவ்வை சொன்னாள்; அகரம் எனக்கு;
அதுவே என்றன் வாழ்வின் கணக்கு;
கவ்விய மனது; கருதுவ தெல்லாம்
கவிதையை இங்கு விதைப்பதன்பொருட்டு!

வள்ளுவன்,மூலன்,வார்த்தைகள் எல்லாம்
வரிசை கட்டிய தமிழ் ஊற்றாக
வள்ளல் பெருமான் போன்றோர் வடிவில்
வந்த ஞானியர் திருக் கூற்றாக;

விதைத்துச் சென்ற வித்துக்கள் மண்ணில்
விளைந்தவை இங்கு அடர்வனம் ஆக;
புதையலைப் போலத் தேடி அவற்றைப்
புலவர்கள் அமுதப் பொங்கலிட்டனர்!

சித்தரும் முத்தரும் சிந்தித்த மொழியென
பித்தன்யானும் பேயாய் அலைந்து-
புத்தியில் அவற்றைப் புரிந்து கொண்டே
புதுப்புது விளைச்சலை அறுவடை செய்து-

நட்ட நிசியிலும் நடுநின்றுணர்ந்து
எட்டிப் பிடித்ததை இம்மொழியாக்கி,
எட்டுத்திசையிலும்கொட்டி முழங்கி
எவரும் உண்ணத் தகுந்தவை என்றே-

கம்பன்
 இளங்கோ,காட்டிய தமிழில்
கொம்பன்
 பாரதிகூறிய வாறே
நம்தொழில் எழுத்தென;நாட்டுக் கீந்து,
நல்லவை நவின்று சோரா திருப்பது!

நம்பிக்கை கொண்டு நாடிடுவோர்முன்
நாளும் இதையே நந்தா விளக்கென-
தெம்புடன் சொல்லித் தெளிவுடன் வாழ்வது:
தேசம் இதனைத் தெரிந்து கொள்க!

எதையும் இங்கு எதிர்கொண் டிருந்து
எதிலும் கலங்கா மலைபோல் நின்று
விதியை மாற்றும் விதியை எழுதி
விதைப்பது தான்என்
 எழுத்தின் இலக்கு!

இவண்-
கிருஷ்ணன்பாலா
10.1.2012

1 comment:

V.Rajalakshmi said...

//கவ்விய மனது; கருதுவ தெல்லாம்
கவிதையை இங்கு விதைப்பதன்பொருட்டு!//
வித்துக்கள் எல்லாம் சத்து என்று வானம் தொடும் விருட்சம் சொல்கிறது