
புத்தாண்டு பிறக்கின்ற இந்நன் னாளில்
புதியபல சிந்தனைகள் பிறக்க வேண்டி
இத்தினத்தில் நெஞ்சார வாழ்த்தி இங்கு
எழுதுகிறேன் நண்பர்களே;ஏற்பீராக!
அறிவார்ந்த இலக்கியமும்;ஆன்ம நேயம்
அணிகின்ற சிந்தனையும் கொண்டு இங்கு
செறிவார்ந்த இடமாக இம் முற்றத்தைச்
செய்கின்ற இடமாக்க எழுத வாரீர்!
முந்திவரும் செந்தமிழின் உணர்வை இங்கு
முறைப்படுத்தி எழுத்தாக்கி; படிப்பவர்தம்
சிந்தனையைத் தூண்டுகின்ற வண்ணம்;உங்கள்
சிறப்பான எண்ணங்களைச் செதுக்க வேண்டும்!
எந்தஒரு எழுத்துக்கும் அழுக்கு இன்றி
எழுதுங்கள்;எண்ணுங்கள்;நூலோர் சொன்ன
எந்தஒரு கருத்துக்கும் இழுக்கு இன்றி
எதிர்காலச் சந்ததிக்கு எழுத வேண்டும்!
பிணக்கின்றி எழுதுங்கள்; தமிழில் நன்கு
பிழையின்றி எழுதுங்கள்;நன்மை,என்றால்
கணக்கின்றி எழுதுங்கள்;காலம் எல்லாம்
கரைகடந்து நிற்கின்ற எழுத்தை இங்கே!
வருத்ததைச் சொன்னாலும்;வாழ்த்துச் சொல்லும்
வார்த்தைகள் என்றாலும் மொழியில் நல்ல
அர்த்தங்கள் பொதிகின்ற எழுத்துக் காட்டி
அறிவார்ந்த முற்றமெனச் செழிக்க வைப்பீர்!
எம்மதமும் நம் மதமாய்க் கொண்டு இங்கு
எவர்மனமும் புண்படாதெழுதி; இங்கு
உம் உணர்வைப் பண்போடு சொல்லி,நட்பின்
உயர்வொழுக்கம் வழுவாது நாட்டுவீரே!
நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
1.1.2012
4 comments:
ஒரு முறை பாடி பார்த்தேன் சில இடங்கள்???!!!
அருமையான வாழ்த்து பாடிபார்த்தேன் சில இடங்கள்???!!
அன்புள்ள ராஜ லட்சுமி அவர்களே,
அதென்ன,சில இடங்கள்.... கேள்வியும் ஆச்சர்யக் குறிகளுமாய்?
அவை இடறுபவைகளா? இடறி விழ வைப்பவைகளா?
இடறி விழ வைத்தவை!........
மீண்டும் எழுந்து பாடுகின்றேன்,வரவில்லை,
வார்த்தைகளை
பதம் இணைத்து நீங்கள் பாடியது நான் அறியேன்,என்றாவது தாங்களை நேரில் கண்டு பாடி பயில்கிறேன் உங்களுக்கு நேரமிருந்தால்......
Post a Comment