Sunday, June 9, 2013

என் நூல் அகம்!




எங்கே சுற்றித் திரிந்தாலும்
எதுவும் எனக்குச் சுவையில்லை:
இங்கே என்றன் நூலகத்தில்
இருப்பதைப் போன்ற சுகமில்லை!

உலகை நினைத்துக் கவலை யினால்
உள்ளம் தோய்ந்து கசக் கின்றது;
உலகை இங்கே மறக் கின்றேன்;
ஒவ்வொரு நொடியிலும் பிறக்கின்றேன்!

மூடர்கள் கூடி சபை நடத்த
முதல்வன் போல வீற்றிருந்து
தேடும் போலிக் கவுரவத்தைத்
திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை!

பீடும் பெருக்கும் பிழையறுக்கும்
பெருமைக்குரிய அறவாழ்வை
நாடும் மனத்தின் நற்றிசையாய்
நன்னூல் பலவும் குவிந்திருக்கும்

வீடாய் எனது நூல்அகத்தை
விரும்பி அமைத்தே மகிழ்கின்றேன்;
தேடாநிலையில் தெளிவெல்லாம்
தேடி வரநான் காண்கின்றேன்!

ஒவ்வொரு நூலிலும் என்அன்னை
உள்ளே இருந்து அழைக் கின்றாள்;
ஒவ்வொரு நூலிலும் என்உணர்வை
உயிராய்க் காத்து வளர்க் கின்றாள்!

பிறந்தால் மீண்டும் மண்ணில்நான்
புத்தகப் புழுவாய்ப் பிறந்திடவும்;
இறந்தால் இந்தப் புத்த கங்கள்
என்னை மூட, இறந் திடவும்

வரம் தாஎன்றே வேண்டுகின்றேன்;
வழங்கிடுவாய் என் குருதேவே!
பரம்பொருள் வடிவில் வாழ்பவனே;
பாரினில் இதுவே என் ஆசை!

    

இவண்-

கிருஷ்ணன்பாலா
9.6.2013 






1 comment:

Anonymous said...

மீண்டும் மீண்டும் தொடர்வேன் தட்டி விட்ட நூல்களின் மேல் பதிந்த தூசு என்ற பற்றாக....