Monday, October 14, 2013

காகித பூஜை!

எல்லோருக்கும் இன்று ஆயுத பூஜை;
எனக்குமட்டும் காகித பூஜை!

ஆம்!.
கவிதை மலர்களால் மாலை தொடுத்து
அன்னை கலைவாணிக்கு
அணிவித்து மகிழ்ந்த காகித பூஜை!

-கிருஷ்ணன்பாலா
13.10.2013

வாணிக்குக் காணிக்கை!

தீதிலன்,உலகில் யானோர்
தெளிவுளன், நினதருளாலே;
யாதெனை வெல்லும்?;உன்னை
யாசித்தேன்இன்றிப் போது,
ஓதிடும் உன்றன் நாமம்
ஒளிர்செயக் கண்டேன்;வாணீ,
சோதியே வருக என்னுள்;
சுடர்கஇவ்வுல கெல்லாமே!
·        


பூவிற் பொலியும் வாணிஎன்றன்
நாவிற்புகுந்து நற்றமிழ் செய்தாள்;
தேவி அவளென் அன்னை;என்னைத்
தேர்ந்தே இப்புவி வைத்தாள்!

கூவி அழைத்துஅவள் தமிழைக்
குவிக் கின்றேன் நான்முகநூலில்
தேவை யுடையீர்,வாருங்கள்;என்
தேன்தமிழ் விருந்தில் சேருங்கள்!

அற்புதமாக ஆர்ப்பரிக்கும்;சொல்
அடுக்கடுக்காக சரம் தொடுக்கும்;
கற்பனையிங்கே படை எடுக்கும்;அது;
காட்டா றெனவே கரை உடைக்கும்!

சிற்சில போழ்து இலக்கணத்தை
சிதறச்செய்யும்தனை மறக்கும்!
கற்பது யாதெனக் கேட்காதீர்
கலைமகள்;அவளைக் கேளுங்கள்!
·        

முன்னைப் பழம் விதியின்
முழுப் பயனில் வைத்திங்கு;
என்னைப் படைத் துலகை
எந்நாளும் காப் பவளை;
அன்னை வாணி எனும்
அறிவுடையோர் கருப் பொருளைப்
பின்தொடரும் பிள்ளை எனப்
பேசுகின் றேன்அறி வீரோ?

மானுடத்தின் மத்தியில் ஓர்
மனிதனெ எனைப் படைத்து,
வான்புகழும் தமிழ் மறைகள்
வளமைமிகும் இலக்கி யங்கள்
நான் படிக்க அருளியவள்;
நான்முகனின் தேவி யவள்;
வானவரும் போற்று கின்ற
வாணியைதநான் வணங்கு கின்றேன்!
·        ·
வாக்கிலே வந்தாள்; அன்னை
வாணியே; ;வந்து,அந்தப்
போக்கிலே புகல வைத்தாள்;
பொய்யிலாச் சேதி;உண்மை1
நோக்கியே சொன்னேன்;நானும்
நுகர்ந்திடும்  மொழியை யிங்கு
தூக்கியே நிறுத்தி என்றும்
தோல்வியைத் தவிர்ப்பாள் வாழி!

·        ·

வாக்கிலே என்றும் உனது
வார்த்தையே வேண்டும்என்றன்
நோக்கிலே பிழைகள் அற்ற
நுகர்ச்சியே வேண்டும்;வாழ்க்கைப்
போக்கிலே பொய்ம்மை சேராப்
புதுமைகள் வேண்டும்;நெஞ்சில்
தேக்கிநான் வேண்டுகின்றேன்;
தேவைகள் அருள்வாய்,வாணீ!

·        ·

கல்விதான் பெரிதாசெல்வம்
காண்பதே பெரிதாஇதிலே
நல்லது யாதென் றிங்கு
நவில்வதைச் சிந்திக்கின்றேன்:
செல்வத்தைச் செல்வம் என்று
சிந்திக்கும் அறிவில் லாது
செல்வதைப் பெற்ற வாழ்க்கை
சிதைந்துதான் போகும்,வீணே!

கல்வியைப் பெற்ற வாழ்வில்
கசடுகள் சேராஅதுவே
செல்வமாய்த் திகழ வாழ்வோர்
சிதைவதும் இல்லைஅதனால்
கல்வியே உயர்ந்த தென்று
காண்கிறேன்வாணி என்றன்
செல்வமாய்த் திகழு கின்றாள்;
சிந்தனை வேறு எதற்கு?

·
உலகிடைப் பிறந்த மாந்தர்
உணர்கின்ற அறிவைப் பெற்று
நலமெதுதீதெது?’ என்று
நாடினால் அதுதான் வாழ்வின்
பலம் மிகு துணையாய் மாறி
பலவிதம் உயர்த்தும்;அதனால்
கலைமகள் மாந்தர் வாழக்
கருப்பொருள்கண்டீர் இங்கே!

·

வாணியைப் போற்றி நின்றால்
வாழ்க்கையில் அறிவு கூடும்;
வாணியால் சேரும் செல்வம்
வளர்ந்திடும் நித்தம் நித்தம்!
வாணியால் தோல்வி இல்லை;
வாழ்க்கையில் வெறுமை இல்லை;
வாணியேவா,நீ’ என்று
வணங்குதல் செய்வோம் வாரீர்!
·      · 
ஊனெடுத்துப் பிறந்த பின்பு
ஓய்ந்து விழும் நாள் வரைக்கும்
நானெடுத்து நடிக் கின்ற
நாடகத்தின்,பாத்திரத்தைத்
தானுரைக்கும் கவிதை இவை;
தருகின் றேன்,நண்பர்களே!
யானுளநாள் வரை’,இவற்றை
யாத்திடுவேன்புரிவீரே!

இவண்-
கிருஷ்ணன்பாலா


13.10.2013

2 comments:

Unknown said...

"Munnai Pazham Vidhigal". I have left a comment on Mr.marabin Mainthan Muthaiya's Time line. May I request you to offer your views on it in my/your Time line please.-Ramanathan Lakshmanan.

இளம்பரிதியன் said...

அருமை ... அன்பரே ... மரபும் உடையும்... உடைத்தவள் ஏற்பாள் ... ஒண்தமிழ் ஓங்கு நும் நடை கண்டு வியந்தே ... வணக்கங்கள் ... வாணிபதம் ... வாணிதனை மயக்கும் உம் உண்மை நடைக்கும் ...