Wednesday, October 16, 2013

நான் இங்கு எழுதுவது....?


சொல்லும் பொருளும் சேர்ந்திருக்கும்
சுவைமிகு கவிதைகள் பதிகின்ற
எல்லை;எனது இப்பகுதி;
இதனுள் வருவோர் மிகச் சிலர்தாம்!

வருவார் எல்லாம் பொருளுணர்ந்து
வாசித் துண்மை உணராமல்;
தருவார் ‘விருப்பம்’;அது அவர்தம்
தகைமை நட்பே என்றிருப்பேன்!

வாரா தவர்கள் பார்வையிலே
வழுக்கிச் செல்லும் நேரத்தில்
ஏரா ளமாய்ப் பதிவுபல
இல்லாததுபோல் சென்றுவிடும்!

இதுபோல் நல்ல பதிவு பல
இருப்பதைப் பலரும் உணராமல்
’விதியே’என்று அர்த்தமற்ற
வீண் கருத்துக்கள் தான்படிப்பர்!

என்றோ ஒருநாள் விடுபட்ட
இலக்கியப்பதிவைப் பார்வையிட்டு
’நன்றொ நன்று’ எனப் புகழ்ந்து
நவில்வார் சிலரும் இங்குண்டு!

பரபரப்பாக இருந் திங்கு
படிப்பதைப் படித்து உணராமல்
அரைகுறைகள்தம் வார்த்தைகளில்
அர்த்தம் தேடி அலைவதுவும்;

தரமில்லாத பதிவுகளில்
தங்கள் அறிவைக் காட்டுவதும்
பரிதாபத்தின் சாட்சிகளாய்ப்
பலரை இங்கு நானறிவேன்!

எனினும் என்றன் பதிவுகளை
இங்கே வைப்பதன் காரணத்தை
நினைவு கூர்ந்திடச் சொல்கின்றேன்:
நெஞ்சில் வைப்பீர் நண்பர்களே:

இலவசமாக எழுதியிங்கு
என்னைக் காட்டிக் கொள்வதன்று;
நலமிகு உள்ளம் கொண்டோரின்
நாட்டமும் அறிவும் உணர்வதற்கே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
16.10.2013

1 comment:

V.Rajalakshmi said...

சுத்திகள் பல பல சூழ்ந்த போதும்
நெருங்க விடாத நொறுங்கா பாறை!
புத்திகள் மட்டுமே புலமையில் தெரியும்
படைப்புகள் அனைத்தும் கல்வெட்டாகும்

அறிவை பிரித்து அல்லார்க்கு வழங்கும்
அன்னவாகனளின் அருமை புதல்வன்
திகட்டும் பகட்டை திரும்பி பார்க்காத
முரட்டு பார்வையில் பரிவும் அடக்கம்

புலமையும் திறமையும் ஆலம் வேராம்
இயலாமை என்பது இருட்டில் நிழலாம்
கலைவாணி இவணின் சகியாம்
அவள் கருணை பார்வை விரலின் அபயமாம்

சத்தியம் சொல்லும் சமயம் எதுவும்
எதையும் தாங்கும் இறுகிய இதயம்
எழுத்தின் சீற்றம் எரிமலையின் அழுத்தம்
அது அறிவிலி எதிரில் வெடித்து தணியும்

நல்லதோர் வீணை செய்து அதை
நலம் கெடாமல் தமிழுக்கு தந்த சக்தியே
கல்லாதவர்க்கு கற்பிக்கும் கடலை தந்தாய்
செல்லாத இடம் தேடி செல்பவரை
தள்ளாடாமல் இங்கே நிற்க வைப்பாய்