Saturday, January 1, 2011

வருக,வளமான புத்தாண்டு!



ஆண்டுகள் தோறும் புதிய
ஆண்டினை வரவு கூறி
பூண்டிடும் உணர்வினாலே
புதுமையை நாடு கின்றோம்;

வேண்டுதல் மட்டும் எண்ணி
வேறொன்றைச் செய் வதாலே
ஆண்டவன் எண்ணம் வேறாய்
ஆனதைக் காணு கின்றோம்!

எதுநலம் தருமோ;அதனை
எண்ணிடும் அறிவு கெட்டு
பொதுநலம் உணர்ந் திடாமல்
புன்மையை நாடு கின்றோம்!!

சுயநலப் பேய்கள் செய்யும்
சூழ்ச்சியில் மூழ்கி;வாழ்வுப்
பயனதை உணர்ந் திடாமல்
பள்ளத்தில் வீழு கின்றோம்!

பிறர் மனம் கண்டு அன்பு
பேணினோம் இல்லை;ஏழை
வறுமையில் வாடக் கண்டும்
வசதியைக் குறைத்தோம் இல்லை!

அறம் எனக் கண்டும்;வாழ்வில்
அடுத்தவர் துன்பம் நீக்கும்
நெறிகளில் நின்றோம் இல்லை;
நேர்மையைக் கொண்டோம் இல்லை!

வரைமுறை இன்றி ஆசை
வளர்த்திட வாழு கின்றோம்:
திரைமறைவாகச் செல்வம்
தேர்ந்திட வாடு கின்றோம்!

அரசியல் நேர்மை கெட்டு
அறநெறி முறையும் கெட்டு
தரம்மிகு கொள்கை தன்னைத்
தலைமுறை தவற விட்டோம்!

எது சரி என்னும் நல்ல
இலக்கணம் மறந்து இங்கு
பொது நலம் அழிய; நித்தம்
பொய்களில் விளைந்து விட்டோம்!

பொல்லாங்கு எல்லாம் இன்று
பொசுங்கிட வேண்டும்; மக்கள்
எல்லோரும் ஒன்று போல
இறைவனை வேண்ட வேண்டும்!

எல்லோரும் இன்புற்றிருக்க
இறையருள் நினைப்ப தல்லால்
நல்லோரின் எண்ணம் வேறு
நாடுதல் இல்லை அன்றோ?

வருகின்ற காலம் நாட்டில்
வளம் எலாம் சேர; மக்கள்
பெருமையே கொள்ளும் வண்ணம்
பிறக்கட்டும் புதிய ஆண்டு!

அனைவருக்கும் வாழ்த்துக்களுடன்,
கிருஷ்ணன் பாலா
31.12.2010

No comments: