Tuesday, October 26, 2010

இது தொடரும்....!





இன்பத்தில் மூழ்கி.இளமையைத் தொலைத்து
இனித்தது சில காலம் - பின்
துன்பத்தில் ஆழ்ந்து தொலைத்ததை எண்ணித்
துடித்தது சில காலம்……

நன்மையைத் தீமையைப் பிரித்தறியாமல்
நடந்தது சில காலம்-அதன்
பின்னணியில் ஓர் மடமையை உணர்ந்து
பிழைத்தது சில காலம்…

விரும்பியதெல்லாம் வெற்றிகள் ஆகிட
விளைந்து சில காலம்-அவை
அரும்பிய கனவெனத் தெளிந்தபின் மனது
அவிந்தது சிலகாலம்!

அழகிய பெண்கள் பழகிய விதத்தில்
அலைந்தது சில காலம்-அது
அழுகிடும் பொருளாய் ஆன பின்னாலே
அழுதது சில காலம்

கரும்பினித்ததுபோல் கவிதைகள் சுவைத்துக்
கனிந்தது சில காலம்-ஒரு
இரும்பும் துருவாய் ஆவதைப் பார்த்து
இளைத்தது சில காலம்!

செழுமனம் படைத்த சான்றோர் நிழலில்
சேர்ந்தது சில காலம்-பயன்
முழுதென வரும்முன் ஊழ்வினை தடுத்து
முறிந்தது சில காலம்!

இழிநிலை கொண்டோர் உறவினில் இரங்கி
இணைந்தது சில காலம்-வீண்
பழிகளில் சூழ்ந்து வழிதெரியாமல்
பதைத்தது சில காலம்!

நிரம்பிய அறத்தில் இருப்பதை இரைத்து
நிமிர்ந்தது சில காலம்-புகழ்
வரம்பினில் வாழ்க்கைச் சுமைகளை ஏற்று
வளைந்தது சில காலம்!

தாய்போல் பேயரைத் தாங்கித் திரிந்து
தாழ்ந்தது சில காலம்-தினம்
ஓய்வில்லாமல் உழைத்துடல் இளைத்து
ஓய்ந்தது சில காலம்!

கருமே கங்கள் கலைவது போல்துயர்
கலைந்தது சில காலம்-அட!
நிரந்தரம் என்று நம்பிய சுகமும்
நிலைத்தது சில காலம்

நிகழ்வதும் மறைவதும் சிருஷ்டியின் நிஜமாய்
நிலைப்பது நிகழ்காலம்-இதை
அகழ்ந்து ணராமல் சுகங்களைத் தேடி
அலைவது அலங் கோலம்!

சென்றவை யாவும் செலவினம் ஆக்கி
சிந்தையைச் செதுக்கு கின்றேன் - அதில்
நின்றவை நினைவின் நிஜமென வடித்து
நிம்மதி ஒதுக்கு கின்றேன்!

இன்றதில் வென்றேன்;நேற்றதில் தோற்றேன்;
இரண்டும் எனதில்லை-நான்
நின்றதை எண்ணி எழுதுகின்றேன்;பல
நினைவுகள்....முடிவில்லை….

-கிருஷ்ணன் பாலா-

8 comments:

ரத்தினகிரி said...

எதுகை மோனையுடன், கருத்துச் செறிந்த அனுபவக் கவிதை மிக அருமை. வாழ்த்துகள்.

Unknown said...

நன்றி.

ranga said...

Every human being should read this poem. So meaningful lessons and to avoid errors in our life

ranga said...

Beautifully put in poetry ,what a human being goes through in this life.

மன்னார் அமுதன் said...

//இன்றதில் வென்றேன்;நேற்றதில் தோற்றேன்;
இரண்டும் எனதில்லை-நான்
நின்றதை எண்ணி எழுதுகின்றேன்;பல
நினைவுகள்....முடிவில்லை…//

அருமையான கவிதைகளை வார்த்திருக்கிறீர்கள் ஐயா... எல்லா வரிகளும் கவிதைகளும் பிடித்தமானவையே... மேற்குறிப்பிட்ட வரிகள் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. அருமை

எதுகை மோனையும் துள்ளி விளையாடும் லயம் மிகுந்த கவிதை... வாழ்த்துக்கள் ஐயா

V.Rajalakshmi said...

//சென்றவை யாவும் செலவினம் ஆக்கி
சிந்தையைச் செதுக்கு கின்றேன் - அதில்
நின்றவை நினைவின் நிஜமென வடித்து
நிம்மதி ஒதுக்கு கின்றேன்!//
தெளிவான நிறைவு!
நல்லாயிருக்கு..

V.Rajalakshmi said...

//இன்றதில் வென்றேன்;நேற்றதில் தோற்றேன்;
இரண்டும் எனதில்லை-நான்
நின்றதை எண்ணி எழுதுகின்றேன்;பல
நினைவுகள்....முடிவில்லை…//

முடிவதில்லை

V.Rajalakshmi said...

வளையாபதிக்கு வழி நெடுக வானவில் வளையம் வைக்க வேண்டும்
வாழ்வின் களைகளை கலையும் வழிபயில பிறவிகள் பல வேண்டும்