.jpg)
முகநூல் மற்றும் வலைத் தளம் என்று
முனைந்து எழுதிடும் நண்பர்க்கெல்லாம்:
அகம்எழும் உணர்வில் தமிழ் நலன்கருதி
அன்புடன் எழுதும் பண்புரைக் கடிதம்:
சமூகத் தளமென இதனைத் தந்தார்;
சமுத்திரம் போலே சங்கமம் ஆகி
சுமூகமாக ஒருவருக் கொருவர்
உணர்வுகள் பகிர்ந்து எழுதிடுகின்றோம்!
எழுதிடும்போது எல்லைகள் வகுத்து,
'இனியவை;புதுமை;இலக்கியச் செய்திகள்
பழுதில்லாமல் படைக்கும் கவிதைகள்;
படங்கள்,மற்றும் தகவல்கள்' எல்லாம்
படைக்கும் திறத்தோர் படைக்கின்றவாறும்
படிப்போர் உணர்ந்து மகிழ்கின்ற வாறும்
கிடைக்கும் தளம்’ என இதனைச் செய்து
கேண்மை கொள்வதே தமிழர் மேன்மை!
அண்ணன்-தங்கை ஆயினும்,கூட
அதீத அன்பைக் காட்டுதல் குறைத்து
பண்புடன் எழுதும் பக்குவம் நிறைத்து
படிப்பவர் மதிக்க,எழுதிடல் வேண்டும்!
ஒருவருக் கொருவர் நேசிக்கின்ற
உண்மைக் காதல் உள்ளே இருப்பின்
பருவக் காமம் அதனைக் கவியாய்;
படிப்பவர்க் கெல்லாம் எடுத்துரைக் காதீர்!
வெட்கம் இன்றி வேசித்தனத்தில்
வெடுக்கென்றெழுதி விபசாரத்தைப்
பக்கம் பக்கமாய் பரவச் செய்யும்
பரத்தையர் பெருமை பேசாதிருங்கள்!
தினம் ஒரு கொள்கை; திட்டல்;முட்டல்
தெளிவில்லாத கிறுக்கு வார்த்தைகள்;
மனம் செலும் வழியில் மார்தட்டிப் பேசும்
மந்திகள் பின்னே மந்தை ஆகாதீர்!
கொச்சைமொழியில் குமட்டும் கருத்துக்கள்
கொட்டி மகிழும் கூட்டத்தை வளர்க்கும்
எச்சில் இலைகளை முதலில் உதைத்து
இறை நெறித் தமிழின் ஏற்றம் காப்பீர்!
இலைமறை காயென எழுதிடும் செய்திகள்
எச்சில் இலைபோல் காற்றில் பறக்க
தலைமுறை இதனைக் கெடுக்கும் விதத்தில்
தமிழைக் கெடுத்து எழுதாதிருப்பீர்
பண்டை இலக்கியம் பழந்தமிழ் நெறிகள்
பக்குவம் நிறைந்த காதல் கவிதைகள்
கண்டு,மகிழ்ந்து எழுதுவ தெல்லாம்
காண்போருக்கும் கற்பித்தல் பொருட்டே!
தமிழுக்கென்று தனிச் சிறப்புண்டு;
தயவும் பணிவும் தகைசால் பண்பும்
அமைந்த மொழி என அகிலம் சொல்லும்
அதனை உணர்ந்து எழுதுதல் நம் கடன்!
நல்ல சந்ததி இன்றைய தலைமுறை
நாளை அவர்தாம் ஆளும் குடிகள்
நல்லவர்,வல்லவர் என்றவர் இருந்து
நாடும் வீடும் காத்திடச் செய்வீர்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
13/12/2011
4 comments:
எங்கள் வலையை வந்து பார்த்துக் கருத்தை எழுதுங்கள். நன்றி வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
நன்றி ஐயா.
வணக்கம்.
//எழுதிடும்போது எல்லைகள் வகுத்து,
'இனியவை;புதுமை;இலக்கியச் செய்திகள்
பழுதில்லாமல் படைக்கும் கவிதைகள்;
படங்கள்,மற்றும் தகவல்கள்' எல்லாம்
படைக்கும் திறத்தோர் படைக்கின்றவாறும்
படிப்போர் உணர்ந்து மகிழ்கின்ற வாறும்
கிடைக்கும் தளம்’ என இதனைச் செய்து
கேண்மை கொள்வதே தமிழர் மேன்மை!//
Will Try Sir!
நாடும் மொழியும்
நலம் பெற பாடும்
நந்தவன கவிஞன்
தமிழ் மொழி காக்க
மேன்மை ஒளியுடன்
உலா வரும் சந்திரன்![இல்ல இல்ல சூரியன்]
கொட்டிய கருத்தில்
களங்கம் இருப்பின்
வெட்டி சாய்க்கும்
தமிழ் வீர சத்திரியன்!
அன்பை அகத்தில்
புதையலாக கொண்டு
பண்பை படைப்பில்
விதைகளாக விதைத்து
சொல்வனம் வளர்த்த முனைவன்!
Post a Comment