Thursday, December 15, 2011

எரிவது,நெஞ்சில் நெருப்பு!





கல்லும் மண்ணும் தோன்றா முனமே,
கனிந்தது நம்மொழி;உண்மை!
அல்லும் பகலும் இதையே சொல்லி
அளப்பதிலே ,என்ன நன்மை?

முன்னம் யாவும் முன்னிலை வகிக்க,
மூத்த குடிஎனத் திகழ்ந்தோம்;
பின்னர்அவற்றைப் பெருமை பேசியே
பேணும் சாதனை மறந்தோம்!

உள்ளுணர்வோடு உலகத் தமிழரின்
ஒற்றுமை வேண்டித் துடிப்போம்;
உள்ளூர்த் தமிழர் மட்டும் இங்கே
ஒருவருக் கொருவர் கெடுப்போம்!

‘செய்யும் தொழிலே தெய்வம்என்றொரு
சிந்தனை தனையும் அறி வோம்;
உய்யும் வழியை மறந்தவர் ஆகி,
உருப் படாமலேதிரி வோம்!

எப்படி இருந்தோம்எப்படி வாழ்ந்தோம்?'
என்கிற பெருமை யைஇன்று,
செப்படி வித்தை அரசியற் குழியில்
சேர்த்து விட்டோமே,கொன்று!

திறமையும் தெளிவும் கொண்டோர் நமது
தேசத்தை விட்டே ஓடுகின்றார்;
அறிவும் புகழும் செல்வமும்தேடி
அந்நிய நாட்டில் வாடுகின்றார்!

கூராய் எதையும் ஆரா யாமல்
கூட்டம் கூட்டமாய்ப் போனோம்;
யாரோ ஒருவன் பின்னால் செல்லும்
ஆட்டு மந்தைநாம் ஆனோம்!

அரியா சனங்களின் கீழே நம்மை
அடிமைகள் ஆக்கிக் கொண்டோம்;
'தெரியா சனங்கள் நாம்'எனநமக்கே,'
திலகம்தீட்டிடு கின்றோம்!

பொய்யும் புரட்டும் புண்மொழிப் பேச்சும்
பூத்திடும் மேடைகள் முன்னே;
கையொலி செய்தே மெய்ம் மறப்பதில்நாம்,
கலங் காதிருப்பதுஎன்னே?
'
தலைவனின் பின்னே ‘தறுதலை'போலத்
தாழ்ந்துவிட் டோமே, இன்று!
உலகினில் இந்த அவலத்தை மாற்றி
உயரும் நிலை’தான்,என்று?

இன்றைய நிலையை எண்ணிப் பார்த்தால்,
எரிவது நெஞ்சில் நெருப்பு;
‘என்னது,நமக்கு,இப்படிக் கேடு?'
என்பதுதான் கை இருப்பு!

தமிழா, தமிழா தலைநிமிர் வாயா?
தவறுகள் களைந் திடுவாயா?
நமைத் தாழ்த்திடும்இக் கொடுமைகள் சாக
நல்லறி வுணர்ந் திடுவாயா?
v  
கிருஷ்ணன்பாலா

No comments: