Thursday, December 8, 2011

கவிதை என்றால் என்னவென்று…….








கவிதைநதி நீராட, களிப்புக் கொள்ள
கரையோரம் காத்திருக்கும் நண்பர்களும்
கவிதைமலர்ப் பூச்சரத்தைத் தொடுத்து இங்கு
கவிதைக்கு அழகூட்டும் நண்பர்களும்


ஆர்வத்தைக் காட்டுகின்றீர்;மிகவும் நன்று;
ஆனாலும் புரிந்து கொள்ள வேண்டும் ஒன்று:
நேர்மையுடன் கூறுகின்றேன்;தேவை என்று
நீங்கள்எலாம் தமிழ் நினைந்தே எழுத வேண்டும்!

கவிதை எனும் சொல்லுக்குத் தமிழில் நல்ல
கருத்துள்ள பாட்டென்று பொருள் உண்டு;
புவியிதிலே செறிவார்ந்த கருத்தெல்லாம்
பூட்டியுள்ள பெட்டகங்கள் கவிதைதானே?

'
வடக்குஎன வார்த்தைதனைச் சொன்னால்;அதில் 
இடக்கென்றும் மடக்கென்றும் எதுகை மோனை
அடுக்குவது கவிதை அல்ல; கருத்துக்களை
மிடுக்கோடு சொல்வதில்தான் மேன்மை கூட்டும்!

மரபு வழிக் கவிஎழுதும் திறமையின்றி
மலைத்தாலும்உரைப்பதிலே மரபு வேண்டும்
தரம்மிகுந்த தமிழெழுதத் தகுதியற்றோர்
தயவோடுகரை நின்றே ரசிக்க வேண்டும்

புரியாத ஆங்கிலத்தில் தப்புத் தாளம்
போடாதீர்;கவிதை என்று கூறாதீர்;
தெரியாத வார்த்தைகளில் தாறு மாறாய்த்
தெம்மாங்கு காட்டாதீர்;திணாறாதீர்கள்!

பண்போடும் பயனோடும் எழுத வேண்டும்
பரபரப்புக் கெழுதாமல்; படிப்போரெல்லாம்
புண்பட்டுப் போகாமல்; மனதை வைத்துப்
புரிகின்ற வகையில்தான் எழுத வேண்டும்!

கவிதை என்றால் என்னவென்று தெரிந்து கொள்க:
கடவுளையும் துச்சமெனச் சொல்லும் நேர்மை;
புவியிதனை வாழவைக்கும் கருத்தை மண்ணில்
பொழிகின்ற வான் மழையாய்ப் பொழிய வேண்டும்!

நேர்மை கொண்டு எழுதுவதே கவிதை;நல்ல
நியாயங்கள் பேசுவதே கவிதை;எழுத்தில்
கூர்மையுடன் திகழுவதே கவிதை;மொழிக்
கோபுரமாய் உயர்ந்திருக்க செய்வதன்றோ?

வேகத்தை விவேகம் ஆக மாற்றி
வீணான செயல் வெறுத்து அறிவு என்னும்
மோகத்தில் மூழ்குவதே எமது நோக்கு;
முத்தெடுக்க விழைவோர்கள்,வருக இங்கு!

ஏகத்தில் விரிந்திருக்கும் உலகில் நல்ல
எழுத்துக்கள் சேர்ப்பதற்கும் நட்பு என்னும்
தாகத்தைக் கொண்டோர்க்கும் தரம் மிகுந்த
தமிழ் மொழியில் வழியுண்டு;சிந்திப்பீரே!


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
(21.11.2011 ல் எழுதிய கவிதை)

1 comment:

V.Rajalakshmi said...

அரை குறைக்கே இந்த ஆட்டம் என்ற "நறுக்" ன் அர்த்தம் புரிகிறது