Monday, December 12, 2011

என் எழுத்து....





















ஏழையர்க்கு எழுதுங்கால்,ஏழ்மைநிலை யோடிருக்கும்;
இறுமாப்புக் கொள்ளுங்கால் செறுக்கோடுதான் மிளிரும்;
வாழையடி வாழையென வந்துதிக்கும் என் தமிழை
வந்திங்கு உண்போர்க்கு வரும்பொருளைக் காட்டுகின்றேன்!

வாழையிலைத் தமிழ் விரித்து வருவோரை உண்பதற்கு
வருகவென அழைப்பதுதான்;இங்கென்றன் விருந்தோம்பல்;
ஏழைகளும் செல்வர்களும் என்படைப்பின் விருந்தினர்கள்;
இங்கென்றன் எழுத்துக்கள் இலக்கியத்தாய் பசியாற!

கலைமகள் என்அன்னை கருணை செய்தருளியதைக்
கரமெடுத்து எழுதுகின்றேன்;காண்போர்க்கு இது புரியும்;
சிலபோழ்து பண்டிதர்க்குச் சிறுபிழையும் பெரிதாகும்;
செந்தமிழில் எழுதுவது இங்கென்றன் நோக்கமல்ல!

எத்தனை பேர் தமிழறிந்து எண்ணத்தை விரிக்கின்றார்?.
என்பதல்ல என் பார்வை; என் வழியில், நற்றமிழின்
வித்தகத்தை விரித்திங்கு விஷயத்தைச் சொல்வதுதான்:
விவாதம் என வந்தால்;விளையாடிப் பார்ப்பதுதான்!

விஷயத்துடன்,
கிருஷ்ணன்பாலா
23.10.2011

2 comments:

Anonymous said...

அருமை. மிகவும் ரசித்தேன். தங்களின் தமிழ் ஆளுமை வெகு சிறப்பு. வாழ்க நும் தமிழ் பணி!

Anonymous said...



எளியவரும் ஏற்றம் பெற
எழுதுகின்ற நற்றமிழின் ஊற்றே!
உன்அன்னையின் கருணையை
தானமாக பொழிகின்ற
"கான"கர்ண ராஜனே!

துளிர் முதல் நார் வரை
பயன்தரும் வாழை எழுத்தை
கண்டு உண்டு களித்து
உவகை கொண்டு உலவுகிறோம்!