Sunday, December 18, 2011

கனவென்னும் நிஜம்!




பரம் பொருள் கண்ணன்;பரந்தாமன்;என்
பரம நினைவில் எழும் தந்தை;
கரம் தொழுகின்றேன் அவன் முன்னே;
கண்கள் பணித்தன கேள்விகளில்!

 ‘எந்தை உன்முன் எழுதுதல் என்பது
இன்பத்துள் இன்பம் பேரின்பம்;
சிந்தையுள் சிதறும் கேள்வி எலாம்
சிறகடித்திடுவது,இதில் தானே?

கேட்கின்றேன்,என் பரந்தாமா;நீ
கீதையைக் காட்டிச் சிரிக்காதே!
வாட்டம் நீக்குவ தல்லாது;
வஞ்சனை நாடகம் நடத்தாதே!

எண்ணம் யாவும் உன்னடி வைத்து
எழுத்தில் உனையே அணிகின்றேன்;
 ‘பண்ணும் செயலில் புண்ணியம் சேரப்
பண்ணும்என்றே பணிகின்றேன்!

நன்றாய் என்னை ஆக்கிடத்தானே,
நன்மையும் தீமையும் வகுக்கின்றாய்?
என்றே எண்ணி இயங்கும் என்னுள்
எத்தனை மாற்றம் கொடுக்கின்றாய்?

உன்முன் எழுத்தில் பணியும் என்றன்
உளமே புகுந்து நிறைவோனே;
என்முன் தோன்றும் காட்சிகள் தோறும்
இருந்தே விரிந்து மறைவோனே!

ஜனனம் என்பது உயிரின் நுகர்வு;
ஜனித்த பின்னால்தான் காணும் உறவு:
மரணம் வரையினில் தொடரும் உலகு;
மரித்த பின்னாலோ அனைத்தும் கனவு!

எண்ணிப் பார்த்தேன்,இறைவா என்னுள்
எத்தனை ஜனனம்;எத்தனை மரணம்?
மண்ணில்,‘நான்,‘நீ’, ‘எனதுனதென்னும்
மாயை எதற்கு? விடை சொல்வாயா?

மாயை இதுவென அறியும் மனதுள்
மயங்கும் மதியைப் படைத்தவன் நீயே;
சேயைப் போல்நான்,தேம்பிடும்பொழுது
சேய் போல் சிரித்து மழுப்புகின்றாயே?

என் விருப்பத்தில் நான்வர வில்லை;
இங்கென் விருப்பம் நீதடுக் கின்றாய்;
உன் விருப்பத்தில் பிறந்தவன் தன்னை
உலகியல்தனில் ஏன்புதைக் கின்றாய்?

பொருள்வழி உலகில் பிறந்தேன்;இங்கே
பொருளை,அருள்வழி இறைக் கின்றேன்;
அருள் வழி பொருளா? பொருள் வழி அருளா?
அதை நான் புரிந்திடத் துடிக்கின்றேன்!

பொருள்வழி மட்டும் வாழ்வென்றிருந்தோர்
போன பாதையைப் பார்க்கின்றேன்;
அருள் வழி நின்றோர் அருளிய பொருள்வழி
அடைந்திடும் பொருளைச் சேர்க்கின்றேன்!

உயிர்வழிப் பயணம் உணர்ந்திடும் அறிவில்
உண்மையும் ஒளியும் தடுமாற்றம்;
பயன் தரும் பயணம் எனப் புகுந்தால்
பாதையில் எத்தனை ஏமாற்றம்?

பொய்யை மெய்யாய்ப் பேசியவாறே
பொழுதைக் கழிக்கும் புல்லருடன்;
வையம் வாழ்ந்திட வருந்துகின்றேன்;
வருந்திடத்தானா வாழ்வ ளித்தாய்?

பொய்யைச் சுடுமோர் பொல்லாச் சினமும்
புல்லரின் உறவைஅறுத்திடும் மனமும்
மெய்காண்பதற்குத் துடித்திடும் குணமும்
மேன்மை இலையேல்,ஏன்இவ் வாழ்க்கை?

தர்மா,தர்மம் தலை குனிந்திருக்க
தத்துவப் பொய்கள் தலை நிமிர;
‘கர்மாஎன்றே இதைச் சொல்லிக்
கைதொழுதற்கா எனைப் படைத்தாய்?

குறிப்பு:
1996களில் இச் சிந்தனை எழுந்து கவிதை எனத் திரண்டது.
இப்போது இங்கே பதிவில் 17.9.2010-

1 comment:

Anonymous said...

கர்மம் என்பது ஜனனம் என்றும்
புண்ணியம் மட்டும் நான் என்ற
மாயனிடம் வினவும்"மெய்யனின்" அனைத்து கேள்விகளும் நியாயம்!