Sunday, December 18, 2011

கவிதையிது,கேள்!


விழலுக்கு நீர்பாய்ச்சி மாய வேண்டாம்;வீண்
விஷயத்தில்  மனம் செலுத்தி வீழ வேண்டாம்;
மழலையென வாழ்ந்த நிலை அறிந்துஉங்கள்
‘மடமையது யாது’எனத் தெளிதல் நன்று!

சிறுகுழந்தை கேட்பதெல்லாம் வாங்கித் தரும்
செல்வநிலை இல்லாத தந்தையவன்,
உறுதியுடன் வாழ்ந்து என்றும் வளைந்திடாமல்; 
‘ஒழுக்கமுடன் வாழ்வதற்கே' பாதை சொன்னான்!

இன்று 'மிக நன்று' எனக் கவிதை பாடி'
‘இளமை உயிர்ச் சத்தைஎலாம்  விரயமாகிக்
கொன்று வரும் குழந்தை'உனை, ஒன்று கேட்பேன்:
'குவலயத்தில் காதல்தான் பொருளா என்ன?'

'நல்ல பொருள் இன்னதென' அனுபவத்தால்
நல்லறிவு உமக்கெல்லாம் வளர்வதற்கே'
சொல்லிவந்த அறிவுரையைத் தண்டனைபோல்
சூடிக்கொண்டு வளர்ந்ததற்கு யார் பொறுப்பு?

தினந்தோறும் விளையாடி, குழந்தையுடன்
தெருவெல்லாம் கைப்பிடித்துக் கூட்டிச்சென்று,
'சினிமாவா, தெருக்கூத்தா,போவோம்' என்று
சிணுங்காமல் வளர்த்திருந்தால் நல்ல தந்தை!

பணம் இருந்தால் பாரினிலே வசதி எல்லாம்
பம்பரமாய்ச் சுழன்றிருக்கும்; பண்பு மட்டும்
பிணமாகிப் பயண மெல்லாம்; பெருமையின்றிப்
பிணவாழ்வு ‘வாழ்வதுவா வாழ்க்கை’ என்பீர்?

அந்தப் பணம் ‘பாலை வனப்  பயணத்துக்கு;
அருந் தாகம் தணிப்பதற்கு மட்டும்' என்றே 
தந்தென்னைக் குருநாதன் கருணை செய்தான்;
தருமமாய்  அதைக்கூடச் செய்து விட்டேன்!

படிப்பதற்கும் பசியின்றி வளர்வதற்கும்
‘பாலாவின் பிள்ளை ‘எனச் சொல்வதற்கும்
நொடிப்பொழுதும் நோயின்றி இருப்பதற்கும்
நுண்ணறிவும் பெறத்தானே வாழ்க்கை செய்தேன்!

கூலி செய்து என் தந்தை படிக்க வைத்தான்:
குறையின்றி உங்களை நான் படிக்க வைத்தேன்?
கேலி செய்து என் மனத்தைக் குழியில் தள்ளி
'கேவலம்நான்'என்பதுபோல் வாழ்கின் றீர்கள்!

கவிதை என்றால் என்னவென்று தெரிந்து கொள்க:
‘கடவுளையும்  துச்ச'மெனக் காணும் நேர்மை;
புவியிதனில்  புரிந்து கொள்ள யாரும்  இன்றிப்  
போனாலும்  சிந்தனைகள் சிங்கம் ஆகும்!

நேர்மை கொண்டு வாழ்பவனே கவிதை செய்வான்;
நெஞ்சகத்தில் வஞ்சமில்லான் கவிதை செய்தான்:
யார்துரோகம்  செய்தாலும் கவிதை செய்து
யஜமானன் போல்வாழ்ந்து நிமிர்ந்து நிற்பான்!

பாட்டெழுதிப் பிழைக்காமல் அவன்பாட்டுக்குப்
பயணத்தைத் தொடர்வதிலே மகிழ்ந்திருப்பான்;
வாட்டமெலாம் அவனுக்குள் இருந்தபோதும்;
வாடாத கவி நெஞ்சால் வாழ்வான், அவனே!

'போகும் இடம் இது' என்று அவனுக்கில்லை;
‘போகின்ற இடமெல்லாம்'  அவனுக் கெல்லை;
சாகும் வரை ‘சாகாத நேர்மை ஒன்றே,
சார்ந்திருக்கும் சொந்த'மென வாழ்வான், காண்க!

அன்று,அவன் 'உமக்காகப் பட்ட பாடு'
அத்தனையும் என்னவென்று பார்த்திடாமல்;
‘நன்று  எது?'என்றுசொலும் அறிவுஇன்றி;
‘நாடுவது கவிதை' எனில், ஏற்க லாமோ?

அழுகைதனைச்  சொல்லுவது கவிதையன்று;
அடுத்தவரை  அழவைக்கும் கவிதை நன்று;
‘எழுதுவது  எல்லாமே எழுத்தா, என்ன? ;
எதிரிகளும் படித்தால்தான் எழுத்து ஆகும்!

எழுதுகின்றீர்;என் மகள் போல் காணுகின்றேன்!
என் உணர்வை அவ்வாறே கூறுகின்றேன்;
‘பழுதறவே எழுது தற்கு' வாழ்த்து கின்றேன்;
பரமகுரு நாதன்அவன் துணை யிருக்க!

-கிருஷ்ணன் பாலா

2 comments:

Anonymous said...


//"கவிதை என்றால் காதல்தான் பொருளா?"
அழுகைதனைச் சொல்லுவது கவிதையன்று;
அடுத்தவரை அழவைக்கும் கவிதை நன்று;//

வரிக்கு வரி சாட்டை வலி
நல் கவியை விளக்கும் ஞானஒளி

//புவியிதனில் புரிந்து கொள்ள யாரும் இன்றிப்
போனாலும் சிந்தனைகள் சிங்கம் ஆகும்!//

உண்மைதான்!

Anonymous said...

இதை விட மென்மையாக , கவிதையின் மேன்மையை எவராலும் சொல்ல முடியாது