Tuesday, October 25, 2011

மாயை!









’நானும் அவளும்’  என்றொரு பதிவை 12.10.2011 அன்று முகநூலில் பதித்தேன்.
அதற்கு சிவு Cevu  (முகநூல் நண்பர்) சொன்னார்:

//மனம் ஏங்கும் மாயைக்கு... மாயை மகளுக்கு ஏங்குகிறது!//

அந்த மாயையை வெல்வதற்கு வழி?
---------------------------------






மாயை
-------------
மாயை என்பதைக் கண்டார் இல்லை;
மண்ணிலதனை வென்றார் இல்லை;
நீயும் நானும் இங்கெல்லோரும்;
நிலையில்லாமல் இருப்பது உண்மை!

சிலந்தி வலைபோல் மாயை இருக்க
சிக்கிகொள்ளும் பூச்சிகள் நமக்கு
பலவிதம் ஆசை;ஒருவருக்கொருவர்
பகைத்தும் சிரித்தும் பசப்புதல் உண்மை!

 
சித்தனும் பித்தனும் முத்தனுமாக                                    
சிற்சில பூச்சிகள் காட்டும் வித்தை;
அத்தனும் அம்மையும் ஒன்றாய்ச் சேர்ந்து
ஆசைப்பட்டுப் போட்ட பிச்சை!
 

கூத்தும் பாட்டும் கொச்சைத் தனமும்
கூடிக் கழிக்க விரும்பும் பூச்சிகள்
சேத்துக்குள்ளே விழுந்து சாகும்;
சிலந்திப்பூச்சிக்கு அது உணவாகும்.

நானும் நீயும் நிஜமென்றுலகை                                                 
நம்பிக் கிடந்தால் மோசம் போவோம்;
வானும் நிலவும் வாழ்வதைப் போல
வாழ்க்கைப்படவே ஆசைப் படுவோம்!

சிலந்திக் கூட்டைக் சிந்திக்காமல்
சில்லறை ஆசையில் வீழ்ந்து விடாமல்
தொலைந்து போவோம் நமக்கு நாமே;
தொலையா இந்த மாயையை விட்டே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
25.10.2011

1 comment:

V.Rajalakshmi said...

//தொலைந்து போவோம் நமக்கு நாமே;
தொலையா இந்த மாயையை விட்டே!//