
கோணல்மதி கொண்டுலகில்
குறுக்குவழி
தேடிடுவோர்;
கூட்டதிடை மாட்டிக் கொண்ட மனது;
கூறுகிறேன்
உண்மை; அது எனது!
பூணுவது புலி வேஷம்;
பொங்குவது ஆவேஷம்;
புரிந்து கொள்ளும் அறிவுடையோர் கணக்கு;
போடுகிறேன்;அதிகமில்லை
எனக்கு!
நாணலதைப் போல் மனதை
நான்
வளைத்துக் கொள்வதில்லை;
நச்சுமனப் பேர்வழிகள் கூட்டம்;
நான்
நிமிர எழுதுவதால் வாட்டம்!
மற்றவர்க்குக் கற்றுத் தரும்
மடமையதில் உழலுகின்ற ஆளை;
மண்டியிட வைப்பதுஎன் வேலை!
வள்ளுவனும் பாரதியும்
வார்த்தெடுத்த வார்த்தைகளைக்
உள்ளமிதில்
விதைத்தவனின் எழுத்து;
உலகளவில் சொல்லுகின்ற கருத்து!
உள்ளபடி சொல்லுகின்றேன்;
உண்மையைத்தான் வெல்லுகிறேன்!
ஊக்கமுடன் சொல்லுவதைக் கேளீர்;
உணர்பவர்கள்தாம் எனக்குக் கேளிர்!
தெள்ளுதமிழ்ப் பண்புகளை
தெளிவாக எடுத்துரைக்கத்
தீந்தமிழின் வார்ப்புக்களைத் தேடி;நான்
தீட்டியது
ஞானம் ஒரு கோடி!
கள்ள மனம் பெற்றவரும்
கயமைக்
குணம் கற்றவரும்
கட்டாயம் என் எழுத்தைக் கண்டு
கலங்குகின்றார் கவலைகளில் நின்று!
ஆனவரை நானவரை
அடையாளம் கண்டு கொண்டு
அவர்திருந்த நான் எழுதும் பாட்டை;
ஆணவம்போல்
சொல்பவர்கள் ஓட்டை!
மானுடன்நான் என்றாலும்
மற்றவர்போல் இல்லாமல்
மானமிகும் நெஞ்சுரத்தால் நின்று;பொய்
மாய்ந்திருக்க எழுதுகிறேன் இன்று!
மானமின்றி நாணமின்றி
மாக்களென வாழுகின்றோர்
மனந்
திருந்த வேண்டுமெனும் நோக்கம்;அது
மாகவிஞன் பாரதியின் தாக்கம்!
பூனைகளும் யானைகளும்
புரிந்து கொண்டால் என் எழுத்து
புதுப்
படையல்போல் விளங்கும் விருந்து;
புல்லருக்கோ வாய்கசக்கும்
மருந்து!
இவண்-
கிருஷ்ணன்பாலா
14.10.2011
No comments:
Post a Comment