Thursday, October 27, 2011

கவித் தலம்;எனது கவிதைத் தளம்!

என்னைப் படைத்த கவிதை யாதென
இங்கு படைக்கின்றேன்;அது
உன்னை உணர்த்தி உயர்ந்திடச் செய்யும்
உண்மை உரைக்கின்றேன்!

மண்னைப் பிசைந்து மார்பில் சந்தனம்
மற்றவர் பூசுகின்றார்; நான்
மண்ணில் விளைந்த  சந்தனக் காட்டுள்
                             மத்தளம் போடுகின்றேன்!

கண்டு மகிழ்ந்திட;கவிதை புரிந்திடும்
கவித் தலம் கட்டியுள்ளேன்;நல்ல
வண்டுகளாய் வந்துண்டு மகிழுங்கள்;
வந்தனம் கூறுகின்றேன்:
------------------------------------------------------------
காணும் யாவிலும் கவிதை!
--------------------------------------------------------------
உள்ளத்தில் உள்ளது கவிதை;
உணர்ச்சியில் உள்ளது கவிதை;
வெள்ளத்தனையது கவிதை;
வீறு கொண்டிருப்பது கவிதை!

கள்ளம் அற்றது கவிதை;
கருணை உள்ளது கவிதை;
பிள்ளையைப் போன்றது கவிதை;
பேசத் தெரிவது கவிதை!

காதல் உடையவர் கவிதை;
கண்டதும் சேர்வது கவிதை;
தீது தவிர்ப்பது கவிதை;
தேசத்தில் வாழ்வது கவிதை!

உண்மை மிகுந்தது கவிதை;
ஊருக்குச் சொல்வது கவிதை;
நுண்மை நிறைந்தது கவிதை;
நோக்கம் உடையது கவிதை!

துன்பம் களைவது கவிதை;
தோழமை ஆவது கவிதை;
இன்பம் மிகுந்தது கவிதை;
ஈசன் அறிவது கவிதை!

அச்சம் இல்லாதது கவிதை;
ஆழ்மனம் கொண்டது கவிதை;
இச்சகம் வென்றிடும் கவிதை;
என்னைப் படைத்தது கவிதை!.

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.10.2011

2 comments:

V.Rajalakshmi said...

எண்ணம்,
வண்ணம்

V.Rajalakshmi said...

எண்ணம் முழுதும் வண்ணம் வண்ணம் வண்ணம்...................